எல்லோரும் தனிச்சிறப்பு கொண்டவர்கள் என்று ஓஷோ எப்படிக்

கூறுகிறார் என்ற கேள்விக்கு பதிலாக கீழ்க்கண்ட பதிலை அளிக்கிறோம்.

 

நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக(SPECIAL) மாற வேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது? 

 

ஏற்கனவே நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்தான். எனவே தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாற வேண்டிய அவசியமில்லை. நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன். நீ தனித்தன்மை கொண்டவன். – கடவுள் அதைவிட குறைவாக எதையும் எப்போதும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவரும் முழுமையாக தனித்தன்மை கொண்டவர்கள். உன்னைப் போன்ற ஒரு மனிதன் முன்பும் இருந்ததில்லை. உன்னைப் போன்ற ஒரு மனிதன் உனக்கு பின்பும் ஒருபோதும் இருக்க போவதில்லை. கடவுள் இந்த வடிவத்தை முதலும் கடைசியுமாக எடுத்திருக்கிறார். எனவே தனிப்பட்ட சிறப்பு உடையவனாக மாற முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறாய். நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக மாற முயற்சி செய்தால் நீ சாதாரணமாகி விடுவாய். உன்னுடைய முயற்சி தவறான புரிதலில் வேர் கொண்டுள்ளது. அது குழப்பத்தை உண்டு பண்ணும். ஏனெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக முயற்சி செய்யும்போது நீ ஒரு விஷயத்தை ஏற்கனவே முடிவு செய்துவிட்டாய். அது என்னவெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவன் அல்ல என்பதே. நீ ஏற்கனவே சாதாரணமானவனாகி விட்டாய். நீ அந்த புள்ளியை தவற விட்டுவிட்டாய்.

நீ சாதாரணமானவன் என்பதை நீ ஒருமுறை முடிவு செய்து விட்டால், நீ எப்படி தனிப்பட்ட சிறப்புடையவனாக முடியும்?

நீ அதையும், இதையும் முயற்சி செய்வாய்! நீ சாதாரணமானவனாகவே இருப்பாய். ஏனெனில் உனது அடித்தளம், உனது அஸ்திவாரம் தவறானது. நீ தையல்காரனிடம் சென்று மேலும் சிக்கலான ஆடைகளை தைத்துக் கொள்ளலாம். உன்னுடைய தலை அலங்காரத்தை நீ திரும்பவும் செய்து கொள்ளலாம். நீ அழகு பொருட்களை உபயோகப்படுத்தலாம். நீ  ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டு மேலும் அறிவாளியாகலாம். நீ வரைந்துவிட்டு நீ ஒவியன் என எண்ணிக் கொள்ளலாம். நீ ஒரு விஷயத்தை செய்து புகழடையலாம். ஆனால் அடி ஆழத்தில் நீ சாதாரணமானவன் என நீ முடிவு செய்துவிட்டதால் நீ சாதாரணமானவன் என்பதை நீ அறிவாய். இவை அனைத்து விஷயங்களும் வெளியில் உள்ளன. நீ எப்படி உனது சாதாரண ஆத்மாவை அசாதாரண ஆத்மாவாக மாற்றமுடியும்?  அதற்கு வழியே இல்லை.

கடவுள் எந்த வழியும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் சாதாரண ஆத்மாக்களை படைத்ததில்லை. எனவே அவர் உன் பிரச்சனையை குறித்து யோசிக்க இயலாது. அவர் உனக்கு தனிப்பட்ட அசாதாரணமான ஆத்மாவை அளித்துள்ளார். அவர் ஒருபோதும் வேறுயாருக்கும்  அதனை அளித்ததில்லை. இது உனக்காகவே உருவாக்கப்பட்டது.

நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் உன் தனிப்பட்ட சிறப்பை சரியாக அடையாளம் கண்டுகொள். அதனை பெற வேண்டிய அவசியமில்லை, அது ஏற்கனவே அங்கு உள்ளது. அதனை அடையாளம் கண்டுகொள். உனக்குள் சென்று அதனை உணர். யாருடைய கைரேகையும் உன்னுடைய கைரேகை போன்றதல்ல. கைரேகை கூட இல்லை! யாருடைய கண்ணும் உன்கண்களை போன்றதல்ல, யாருடைய குரலும் உன்னைப் போன்றதல்ல, யாருடைய வாசனையும் உன்னை போன்றதல்ல. நீ ஒரு அப்பட்டமான தனிவிதி. உன்னை போன்ற இரண்டாவது ஆள் எங்கும் இல்லை. இரட்டை குழந்தைகள்கூட வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. எவ்வளவுதான் ஒன்றுபோல தெரிந்தாலும், அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு வழிகளில் செல்கிறார்கள். அவர்கள் மாறுபட்ட வழிகளில் வளர்கிறார்கள். இவர்கள் மாறுபட்ட தனித்தன்மையை பெறுகின்றனர்.

இந்த அடையாளம் காணுதல் தேவை.

நீ கேட்கிறாய்! நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாறவேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது,

வெறுமனே உண்மையை கேள். உன்னுடைய இருப்பினுள் சென்று பார். தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கும் முயற்சி மறைந்துவிடும். நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பதை நீ அறியும்பொழுது முயற்சி நின்றுவிடும். நீ “நான் ஏதாவது ஒரு முறையை கொடுக்கவேண்டும். அதன்மூலம் தனிப்பட்ட சிறப்புடையவனாக இருப்பதை நிறுத்திவிடலாம்” என  விரும்பினால், பிறகு அந்த முறை தொந்தரவு ஏற்படுத்தும். திரும்பவும் நீ ஏதோ ஒன்று செய்ய முயற்சிக்கிறாய். திரும்பவும் நீ ஏதோ ஒன்றாக முயற்சிக்கிறாய். முதலில் தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கமுயற்சி செய்தாய். இப்போது தனிப்பட்ட சிறப்புடையவனாய் இல்லாதிருக்க முயற்சி செய்கிறாய். ஆனால் முயற்சிக்கிறாய்….முயற்சிக்கிறாய். ஏதோ ஒரு வழியில் மேம்படுத்த முயற்சிக்கிறாய். ஆனால் நீயாக இருப்பதை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.

என்னுடைய முழு செய்தியும் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக் கொள். ஏனெனில் கடவுள் அதனை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் உனக்கு மதிப்பளிக்கிறார், நீ உனது இருப்பிற்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை. கடவுள் உன்னைப் போல இருப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அதிக ஆனந்தம் கொள். கடவுள் இருப்பதற்கு உன்னை தேர்ந்தெடுக்கிறார், அவருடைய உலகத்தை பார்ப்பதற்கு, அவருடைய இசையை கேட்பதற்கு, அவருடைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு, அவருடைய மக்களை பார்ப்பதற்கு, நேசிப்பதற்கு, நேசிக்கப்படுவதற்கு – இன்னும் உனக்கு என்ன வேண்டும்?  கொண்டாடு! நான் திரும்ப திரும்ப கூறுகிறேன், விழிப்புணர்வுடன் அதனை கொண்டாடு.! அந்த விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் மெதுமெதுவாக, நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பது உனக்குள் மின்னலைப் போல வெடிக்கும்.

ஆனால் நினைவில் கொள். அது மற்றவர்களோடு ஒப்பிட்ட அகங்காரமாக இருக்காது. இல்லை – அந்த நொடியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சிறப்புடையவர்கள் என்பதை நீ அறிவாய். யாரும் சாதாரணமானவர்கள் அல்ல.

எனவே இதுதான் வரையறை. நீ நான் தனிப்பட்ட சிறப்புடையவன் என நினைத்தால், அந்த ஆணை விடவும், அந்த பெண்ணை விடவும் சிறப்புடையவன் என நினைத்தால் நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அது ஆணவத்தின் விளையாட்டு. ஒப்பிட்டு பார்த்துவருவது தனிப்பட்ட சிறப்பல்ல. யாரோடும் ஒப்பிடுவதால் வருவது சிறப்பல்ல.  நீ இருப்பதை போலவே இருப்பதுதான் தனிப்பட்ட சிறப்பு.

ஒரு ஜென் குரு கேட்கப்பட்டார். ஒரு பேராசிரியர் அவரை பார்ப்பதற்கு வந்திருந்தார். அப்போது கேட்டார், “நான் ஏன் உங்களை போல இல்லை? இதுதான் என்னுடைய ஆசை! நான் ஏன் உங்களை போல இல்லை? நான் ஏன் உங்களை போல மெளனமாக இல்லை? நான் ஏன் உங்களை போல ஞானம் பெறவில்லை?”

குரு, “காத்திரு, மெளனமாக அமர்ந்திரு. கவனி, என்னை கவனி, உன்னை கவனி, மற்ற அனைவரும் சென்றபிறகு அப்போதும் கேள்வி இருந்தால் நான் அதற்கு பதிலளிக்கிறேன்.” என கூறினார். முழுநாளும் மக்கள் வந்து சென்றவண்ணம் இருந்தனர், சீடர்கள் கேள்வி கேட்டனர். பேராசிரியர் மிக மிக அமைதியிழந்துகொண்டிருந்தார். – நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மனிதர் எல்லோரும் சென்றபிறகு என்று கூறியுள்ளார். பிறகு சாயங்காலம் வந்து விட்டது. இப்போது யாருமில்லை.

போராசிரியர் இப்போது, “இதுபோதும், நான் நாள் முழுவதும் காத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கேள்வி என்னவாயிற்று?” எனக் கேட்டார்.

நிலவு வெளிவந்துகொண்டிருந்தது, அது ஒரு பௌணர்மி இரவு. குரு, “இன்னும் உனக்கு விடை கிடைக்கவில்லையா?” எனக் கேட்டார்.

பேராசிரியர், “ஆனால் நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதிலளிக்க வில்லையே” எனக் கேட்டார்.

குரு சிரித்தார், “நான் பலரும் கேட்ட கேள்விக்கு முழு நாளும் விடையளித்துக் கொண்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வா, நாம் தோட்டத்திற்கு போகலாம். தோட்டத்தில் முழு நிலவு உள்ளது. மற்றும் இது ஒரு அழகான இரவு,”.  அங்கு குரு அவரை பார்த்து கூறினார். “இந்த மரத்தை பார், ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது, கிட்ட தட்ட நிலவை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நிலவு அதன் கிளைகளுடன் பின்னியுள்ளது. இந்த சிறிய குத்து செடிகளை பார்.”

ஆனால் பேராசிரியர், “நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய கேள்வியை மறந்து விட்டீர்களா?” எனக் கேட்டார்.

குரு, “நான் உங்களுடைய கேள்விக்குதான் பதிலளித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தோட்டத்தில் இந்த மரமும் இந்த குத்துசெடியும் வருடகணக்காக இருக்கின்றன. இந்த குத்துசெடி, இந்த மரத்தை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ, இந்த மரம் இந்த குத்துசெடிகளை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ கேட்டு நான் பார்த்ததில்லை. மரம் மரமாக இருக்கிறது. குத்துசெடி குத்துசெடியாக இருக்கிறது. அவை இரண்டும் அவைகளாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றன.” எனக் கூறினார்.

நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருக்கிறாய். ஒப்பிடுதல் பிரிவினையை கொண்டுவருகிறது. ஒப்பிடுதல் குறிக்கோளை கொண்டு வருகிறது, ஒப்பிடுதல் நகல் தன்மையை கொண்டு வருகிறது. நான் ஏன் உங்களைப் போல இல்லை என நீ கேட்டால் பிறகு நீ என்னைப் போல இருக்க தொடங்குவாய். அது உனது முழு வாழ்க்கையையும் வாழாமல் இருப்பதாகும். நீ நகல்தன்மை உடையவனாகிறாய், ஒரு நகலாக ஆகிவிடுவாய். நீ நகல்தன்மை உடையவனாக ஆகும்போது நீ உன்மேல் உனக்கு இருக்கும் எல்லா சுயமரியாதையையும் இழந்துவிடுவாய்.

தன்னை மதிக்கும் ஒரு மனிதரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வம். ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது ஏன் வாழ்வுக்கு மதிப்பு இல்லை – உன்னுடைய சொந்த வாழ்விற்க்கு மதிப்பு இல்லை உன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நீயே மதிப்பளிக்கவில்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி மதிப்பு இருக்கும் உன்னுடைய சொந்த இருப்பை நீ மதிக்கவில்லை எனில் நீ எப்படி ரோஜா இதழை, பைன் மரத்தை, மற்றும் நிலவை, மக்களை மதிக்க முடியும்?

நீ எப்படி உன்னுடைய குருவை, தந்தையை, தாயை, நண்பரை, உனது மனைவியை, கணவரை மதிக்க முடியும்? நீ உன்னை மதிக்காதபோது, உனது குழந்தைகளை எப்படி மதிக்கமுடியும்?

தன்னை மதிக்கும் ஒரு மனிதரை காண்பது மிகவும் அபூர்வம்.

ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது? – ஏனெனில் உனக்கு நகலாக இருக்க சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது – சிறு வயதிலிருந்தே ஏசுவைப் போல இரு அல்லது புத்தரைப் போல இரு என சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஏன்  புத்தரைப் போல ஆக வேண்டும்? புத்தர் உன்னைப் போல ஆக வில்லை, புத்தர் புத்தராக இருந்தார். ஏசு ஏசுவாக இருந்தார். கிருஷ்ணர் கிருஷ்ணராக இருந்தார். நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? நீ என்ன தவறு செய்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்? நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? கடவுள் ஒருபோதும் இன்னொரு கிருஷ்ணரைப் படைக்கவில்லை. அவர் ஒருபோதும் இன்னொரு புத்தரைப் படைக்கவில்லை. இன்னொரு ஏசு – ஒருபோதும் இல்லை ஏனெனில் அவர் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படைக்க விரும்புவதில்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் ஒரு வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல – ஒரு கார் வருகிறது, அதே கார் இன்னொன்று, இன்னொன்று என கார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் ஒன்று போலவே வரிசைகிரமமாக வருகின்றன. கடவுள் வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல. அவர் உண்மையான படைப்பாளி. அவர் ஒருபோதும் அதே விஷயத்தை திரும்ப படைப்பதில்லை.

அதே விஷயம் மதிப்புடையதாக இருக்காது. நினைத்துப் பாருங்கள். ஒரு கிருஷ்ணர் திரும்பவும் நடக்கிறார். அதே விதமான மனிதன். அவர் ஒரு கோமாளியை போல தோற்றமளிப்பார். அவர் ஒரு சர்க்கசில் மட்டுமே இடம் பெறுவார். வேறு எங்குமல்ல, ஏனெனில் திரும்ப படைக்கப் பட்டவர். அவர் திரும்பவும் கீதையை கூறுவார் – அர்ச்சுனன் இருக்கிறானோ, இல்லையோ, மகாபாரத போர் நடக்கிறதோ இல்லையோ – ஆனால் அவர் கீதையை திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் அவருடைய ஆடைகளோடு நடப்பார். அது மிகவும் பொருத்தமற்று காட்சியளிக்கும்.

ஏசு உங்களிடையே இருந்தால், திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவர் பொருந்த மாட்டார். அவர் காலாவதியானவராக இருப்பார். அவர் காட்சிப் பொருளாக இருப்பார். அவர் அருங்காட்சியகத்தில் மட்டுமே உபயோகமாக இருப்பார். வேறு எங்குமல்ல.

கடவுள் ஒருபோதும் ஒரு விஷயத்தை திரும்ப செய்வதில்லை. ஆனால் நீ எப்போதும் வேறொருவராக மாற கற்றுக் கொடுக்கப் படுகிறாய். வேறொருவராக மாறு, பக்கத்து வீட்டுப் பையனை போல மாறு எவ்வளவு புத்திசாலிதனமாக இருக்கிறான் அவன் என்று பார். அந்த பெண்ணை பார் எவ்வளவு அழகாக நடக்கிறாள்! அதுபோல இரு. நீ எப்போதும் மற்றவரை போல இருக்கவே கற்றுக் கொடுக்கப் படுகிறாய். நீ நீயாக இரு என யாரும் உனக்கு சொன்னதில்லை. உன்னுடைய இருப்பின் மேல் மரியாதை கொள். அது கடவுளின் பரிசு!

ஒருபோதும் நகலாகாதே. அதைத்தான் நான் உனக்கு சொல்கிறேன். ஒருபோதும் நகலாகாதே. நீ நீயாக இரு! அந்த அளவிற்கு கடவுளிடம் நீ கடன் பட்டிருக்கிறாய். நீ நீயாக இரு. நீ ஆணித்தரமாக நீயாக இரு. பிறகு நீ தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்பதை நீயே அறிவாய். கடவுள் உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறார். அதனால்தான் நீ இருக்கிறாய். அதனால்தான் நீ உருவாகி இருக்கிறாய். இல்லாவிடில் நீ உருவாகி இருக்க மாட்டாய். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம் அது.

ஆனால் உன்னுடைய தனிச்சிறப்பு மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதனால் வருவதல்ல. நீ உன்னுடைய பக்கத்து வீட்டுக் காரர்களை விடவும், நண்பர்களை விடவும், உன்னுடைய மனைவி அல்லது கணவனை விடவும், சிறந்தவன் என்று பொருளல்ல. நீ தனிச்சிறப்பு கொண்டவன். ஏனெனில் நீ தனித்தன்மை கொண்டவன். ஏனெனில் நீ மட்டுமே இருக்கிறாய். உன்னைப் போல நீ மட்டுமே இருக்கிறாய். அந்த விதத்தில் அந்த புரிதலில் தனித்தன்மை கொண்டவனாக மாறும் முயற்சிகள் மறைந்து விடும்.

நீ தனிச்சிறப்பு கொண்டவனாக மாற மேற்கொள்ளும் உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் ஒரு பாம்பிற்கு கால் வைப்பதைப் போன்றது. நீ பாம்பை கொன்று விடுவாய். நீ நினைக்கிறாய், உன்னுடைய கருணையின் காரணமாக நீ பாம்பிற்கு கால்களை பொருத்துகிறாய். பாம்பு பாவம்! காலில்லாமல் அது எப்படி நடக்கும்? பாம்பு பூரானின் பார்வையில்  விழுந்ததை போல! பூரான் பாம்பை பார்த்து கருணை கொள்கிறது. அது நினைக்கிறது. எனக்கு நூறு கால்கள் உள்ளன. பாம்பு பாவம் பாம்பிற்கு கால்களே இல்லை! அது எப்படி நடக்கும்? அதற்கு ஒரு சில கால்களாவது தேவை. பூரான் அறுவை சிகிச்சை செய்து ஒரு சில கால்கள் பாம்பிற்கு பொருத்தினால் பாம்பை அது கொன்றுவிடும். பாம்பு அது இருப்பதை போலவே நன்றாக இருக்கிறது. அதற்கு கால்கள் தேவை இல்லை.

நீ எப்படி இருக்கிறாயோ, அதுவே நல்லது. இதைத்தான் நான் தன்னுடைய இருப்பிற்கு தரும் மரியாதை என்று கூறுகிறேன். தனக்கு மரியாதை தருவது என்பது ஆணவத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாதது. நினைவில் கொள். தனக்கு மரியாதை செலுத்துவது சுய மரியாதை அல்ல. தனக்கு மரியாதை செலுத்துவது என்பது கடவுளுக்கு மரியாதை. அது படைத்தவனுக்கு மரியாதை செலுத்துவது. ஏனெனில் நீ ஒரு ஓவியம். ஓவியத்திற்கு மரியாதை செலுத்துவதன் மூலம் நீ ஓவியம் வரைந்தவருக்கு மரியாதை செலுத்துகிறாய்.

மரியாதை செலுத்து, ஏற்றுக் கொள்.! அடையாளம் கண்டு கொள்! இந்த முட்டாள் தனமான தனிச்சிறப்பு வாய்ந்தவனாக மாறும் முயற்சிகள் அனைத்தும் மறைந்து விடும்.

 

Source: I  SAY UNTO YOU   vol # 2  che # 4 Ques 4