ஓஷோவின் செய்தி என்னஎன்ற கேள்விக்கு பதிலாக இரு கேள்வி பதில்களை வெளியிடுகிறோம்.

 

அதில் ஒன்று இம்மாதம் வெளியாகிறது.

அடுத்தது அடுத்தமாதம்.

 

மேற்கிற்கு விரைவில் திரும்பி செல்கிறேன். நான் உங்களுடன் இருந்த ஐந்து மாதங்களை திரும்பி பார்த்து யோசிக்கிறேன். நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் மற்றும் நான் பகவானுடன் இருக்கவில்லை. நான் அவரை பார்த்திருக்கிறேன் ஆனாலும் ஏதோ ஒன்று பார்க்கப் படாமல் உள்ளது. நான் அவரை கேட்டிருக்கிறேன் ஆனாலும் இன்னமும் நான் அவர் கூறுவதை கேட்காமல் செவிடாகவே இருக்கிறேன்.

நான் எந்த பாதுகாப்புணர்வும் இல்லாமல், நிச்சயத்தன்மை பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், பிடிமானம் கொள்வதற்கு ஏதுமின்றி செல்கிறேன். நான் உங்களை தவற விட்டு விட்டேனா ?

 

இந்த கேள்வி சுவாமி ஆனந்த் சுபூதியிடமிருந்து வந்துள்ளது. இல்லை – நீ என்னை கண்டிப்பாக தவற விடவில்லை. என்னை விட்டு செல்லும்போது நிச்சயதன்மை பாதுகாப்பு இவைகளுடன் செல்லும் மக்கள்தான் என்னை தவற விட்டவர்கள்.

உனக்கு ஒரு கோட்பாடு கொடுப்பதற்க்காக நான் இங்கு இல்லை. ஒரு கோட்பாடு ஒருவருக்கு நிச்சயதன்மையை அளிக்கிறது.  எதிர்காலத்தை குறித்து எந்த உறுதிமொழியையும் அளிப்பதற்காக நான் இங்கு இல்லை. எதிர்காலத்தை குறித்த எந்த உறுதிமொழியும் ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கிறது.

உன்னை துடிப்புணர்வுள்ளவனாகவும், விழிப்புணர்வுள்ளவனாகவும் மாற்றுவதற்காகவே நான் இங்கே இருக்கிறேன். அதாவது வாழ்வில் இருக்கும் எல்லா பாதுகாப்பற்ற தன்மையோடும், வாழ்வில் இருக்கும் எல்லா நிச்சயமற்ற தன்மையோடும், வாழ்வில் இருக்கும் எல்லா ஆபத்துகளோடும் இப்போது இங்கே இருப்பது.

எனக்கு தெரியும் நீ ஏதோ ஒரு நிச்சயதன்மை, ஏதோ ஒரு ‘இசம்’ சேர்ந்துகொள்ள ஏதாவது ஒரு இடம், நம்புவதற்கு யாரோ ஒருவரை தேடி இங்கே வந்துள்ளாய். நீ உனது பயத்தின் காரணமாக இங்கே வந்துள்ளாய். நீ ஒரு விதமான அழகான சிறையை தேடுகிறாய் – எனவே எந்த விழிப்புணர்வுமின்றி நீ வாழலாம்.

நான் உன்னை இன்னும் பாதுகாப்பற்றவனாக, இன்னும் நிச்சயமற்றவனாக ஆக்குவேன். ஏனெனில் அப்படித்தான் வாழ்வு உள்ளது, அப்படித்தான் கடவுள் உள்ளார். எங்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை, அதிக ஆபத்து உள்ளதோ, அப்போது விழிப்புணர்வுடன் மட்டுமே செயல்பட முடியும்.

இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நீ உன் கண்களை மூடிக்கொண்டு கோட்பாட்டின்படி வாழ்பவனாகலாம்.—- ஒரு கிறிஸ்துவனாகி விடு, அல்லது ஒரு இந்துவாகிவிடு, அல்லது ஒரு முகம்மதியனாகி விடு….. பிறகு நீ ஒரு நெருப்பு கோழியை போல ஆகிவிடுவாய். அது வாழ்வை மாற்றுவதில்லை. அது வெறுமனே உனது கண்களை மூடிவிடுகிறது. அது உன்னை மடையனாக்கி விடுகிறது. அது உன்னை புத்திசாலிதனமற்றவனாக்கி விடுகிறது. உனது புத்தியற்ற தன்மையில் நீ பாதுகாப்பாக உணர்கிறாய்.— எல்லா முட்டாள்களும் பாதுகாப்பாக உணர்கின்றனர். உண்மையில், முட்டாள்கள் மட்டுமே பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒரு உண்மையான உயிரோட்டமுள்ள ஒரு மனிதன் எப்போதும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வான். என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்?

வாழ்வு இயந்திரதனமான செயலல்ல. அது நிச்சயதன்மையோடு இருக்க இயலாது. அது ஒரு கணிக்க இயலாத மர்மம். அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தவர் எவருமில்லை. ஏழாவது சொர்க்கத்தில் எங்கோ இருக்கிறார் என நீ நினைக்கும் கடவுள்கூட, அவர்கூட,….. அவர் அங்கு இருந்தால் —அவருக்கு கூட என்ன நடக்கப்போகிறது என தெரியாது, ஏனெனில் என்ன நடக்கப்போகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தால் பிறகு வாழ்க்கை போலியானது, பிறகு எல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கபட்டு விட்டது. எல்லாவற்றின் இறுதி முடிவும் முன்பே உள்ளது. எதிர்காலம் திறந்திருக்குமானால், அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது அவருக்கு எப்படி தெரியும்?  அடுத்தநொடி என்ன நிகழபோகிறது என்பதை கடவுள் அறிந்திருப்பாரேயானால், பிறகு வாழ்வு வெறும் ஒரு இறந்த இயந்திரதனமான நிகழ்வு, பிறகு சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்வு எப்படி இருக்கமுடியும்?  பிறகு வளர்வதற்கு அல்லது வளராமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாமும் ஏற்கனவே முடிவு செய்யபட்டிருந்தால் பிறகு எந்த பிரகாசமும் இல்லை, எந்த கம்பீரமும் இல்லை. பிறகு நீங்கள் வெறும் இயந்திர மனிதர்கள்.

இல்லை….. எந்த பாதுகாப்பும் இல்லை. அதுவே என்னுடைய செய்தி. எதுவும் பாதுகாப்பாக இருக்க இயலாது, ஏனெனில் ஒரு பாதுகாப்பான வாழ்வு இறப்பை விட மோசமானதாக இருக்கும்.

எதுவும் நிச்சயமில்லை. வாழ்வு நிச்சயமற்ற தன்மையில் நிறைந்துள்ளது. ஆச்சரியங்களால் நிறைந்துள்ளது. அதுதான் அதன் அழகு!  இப்போது நான் நிச்சயமாக கூறுகிறேன் என கூறும் நொடிக்கு வர இயலாது. நான் நிச்சயமாக கூறுகிறேன் என நீ கூறும்போது நீ வெறுமனே உனது இறப்பை அறிவிக்கிறாய். நீ தற்கொலை செய்து கொள்கிறாய்.

வாழ்க்கை ஆயிரத்தோரு நிச்சயமற்ற தன்மைகளோடு நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதுதான் அதன் சுதந்திரம். அதனை பாதுகாப்பற்ற தன்மை என கூறாதீர்கள். மனம் ஏன் சுதந்திரத்தை பாதுகாப்பற்ற தன்மை என கூறுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நீ சிறைசாலையில் ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறாயா? நீ சிறைச்சாலையில் ஒரு சில வருடங்கள் வாழ்ந்திருந்தால், விடுதலையாகும் நாள் வரும்போது கைதி எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உணரத் தொடங்குகிறான். சிறையினுள் அனைத்துமே நிச்சயமானவை. அனைத்தும் இறந்த பழக்க வழக்கமே. உணவு அவனுக்கு கொடுக்கப் படுகிறது. அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. அடுத்தநாள் பசியுடன் இருக்கும்போது உணவு இல்லாமல் போய்விடகூடும் என்ற பயமில்லை. – எதுவுமில்லை. அனைத்தும் நிச்சயமானவை. இப்போது திடீரென, பல வருடங்களுக்கு பிறகு சிறைச்சாலை அதிகாரி அவனிடம் வந்து இப்போது நீ விடுதலையடைய போகிறாய் என கூறுகிறார். அவன் நடுங்க தொடங்குகிறான். சிறைச்சாலையின் சுவர்களுக்கு வெளியே, திரும்பவும் நிச்சயமற்ற தன்மைகள், திரும்பவும் அவன் தேட வேண்டியிருக்கும், அலைய வேண்டியிருக்கும் திரும்பவும் அவன் சுதந்திரத்தில் வாழ வேண்டியிருக்கும்…….

சுதந்திரம் பயத்தை உருவாக்குகிறது. மக்கள் சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மனிதன் சுதந்திரத்தை கண்டு பயப்பட்டால் அவன் இன்னும் மனிதனாகவில்லை. நான் உங்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறேன். – நான் உனக்கு பாதுகாப்பை கொடுப்பதில்லை. நான் உனக்கு புரிந்துகொள்ளுதலை தருகிறேன். – நான் உனக்கு அறிவை தருவதில்லை. அறிவு உனக்கு நிச்சயதன்மையை அளிக்கிறது. நான் உனக்கு ஒரு சூத்திரத்தை அளிக்க முடிந்தால், ஒரு அமைப்பான நிச்சயத்தை அளித்து ஒரு கடவுள், ஒருபுனித ஆவி, ஒரே கடவுளின் மைந்தன், ஏசு, சொர்க்கமும் நரகமும் உள்ளது, மற்றும் இவையெல்லாம் கெட்ட செயல்கள். பாவம் செய்தால் நரகம் செல்வாய். புண்ணிய செயல்கள் என நான் கூறுவதை செய்தால் நீ சொர்க்கத்தில் இருப்பாய் — முடிந்தது – பிறகு நீ நிச்சயதன்மையடைவாய்.

அதனால்தான் பல மக்கள் கிறிஸ்துவனாக இருப்பதையும், இந்துவாக இருப்பதையும், முகமதியர்களாக இருப்பதையும் ஜைனர்களாக இருப்பதையும் தேர்ந்தெடுக்கிறார்கள். – அவர்களுக்கு சுதந்திரம் தேவையில்லை. அவர்களுக்கு நிலையான சூத்திரங்கள்தான் தேவை.

ஒரு யூதன் இறந்து கொண்டிருந்தான். – திடீரென சாலையில் அவனுக்கு ஒரு விபத்து. அவன் ஒரு யூதன் என்பதை அறிந்தவர் யாருமில்லை. ஒரு பாதிரியார் அழைக்கப்பட்டார். ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவர் யூதனுக்கு பக்கத்தில் குனிந்து – மனிதன் இறந்து கொண்டிருந்தான். இறப்பின் விளிம்பில் இருக்கிறான். பாதிரியார், “நீ கடவுளாகிய தந்தை, புனித ஆவி, மகன் ஏசு எனும் மூவரை நம்புகிறாயா” என கேட்டார்.

அந்த யூதன் அவனுடைய கண்ணை திறந்து, இங்கே பார். நான் இறந்துகொண்டிருக்கிறேன். – இவர் விடுகதை போட்டுக் கொண்டிருக்கிறார். என்றான்.

இறப்பு உனது கதவை தட்டும்போது, உன்னுடைய எல்லா நிச்சயதன்மைகளும் வெறும் விடுகதையாகவும், முட்டாள்தமாகவும் இருக்கும். எந்த நிச்சயதன்மையையும் பிடித்துத் தொங்காதே. வாழ்வு நிச்சயமற்றது…..அது அதன் இயல்பிலேயே நிச்சயமற்றது. ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் நிச்சயதன்மை அற்றவனாகவே இருக்கிறான்.

இந்த நிச்சயமற்ற தன்மையில் இருக்க தயாராக இருக்கும் தன்மையே துணிச்சல். இந்த நிச்சயமற்ற தன்மையில் இருக்க தயாராக இருக்கும் தன்மையே நம்பகத்தன்மை. எப்போதும் உணர்வோடு இருக்கும் மனிதனே எந்த சூழ்நிலையிலும் முழு இதயத்தோடு செயல்படுபவனே புத்தி கூர்மையுள்ள மனிதன். என்ன நடக்கப் போகிறது என்பதை அவன் அறிவான் என்று அதற்கு பொருளல்லை. இதை செய்தால் அது நடக்கும் என அவன் அறிவான் என்பதும் பொருளல்ல. வாழ்வு ஒரு அறிவியலல்ல. அது செயல் விளைவு சங்கிலியல்ல. தண்ணீரை நூறு டிகிரி சுட வைத்தால் அது ஆவியாகிறது.— அது நிச்சயமானது. ஆனால் அதுபோல உண்மையான வாழ்க்கையில் எதுவும் நிச்சயமானதல்ல.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுதந்திரம், என்னவென்று தெரியாத சுதந்திரம், அது கணிக்க இயலாதது, எதிர்பார்க்க இயலாதது. ஒருவர் விழிப்புணர்விலும், புரிந்து கொள்ளுதலிலும் வாழ வேண்டும். நீ அறிவை தேடி என்னிடம் வருகிறாய். நீ ஒரு அமைக்கப் பட்ட கோட்பாடு வேண்டுமென எண்ணுகிறாய். எனவே நீ அவற்றை பிடித்து தொங்கலாம். நான் எதையும் உனக்கு தருவதில்லை. உண்மையில் நீ எதையாவது வைத்திருந்தால் நான் அதை எடுத்து விடுகிறேன். மெதுமெதுவாக நான் உனது நிச்சயதன்மையை அழித்துவிடுகிறேன். மெதுமெதுவாக நான் உன்னை மேலும்மேலும் தயக்கமுள்ளவனாக ஆக்குகிறேன். மெதுமெதுவாக நான் உன்னை மேலும்மேலும் பாதுகாப்பற்றவனாக ஆக்குகிறேன்.

செய்யப்பட வேண்டிய ஒருவிஷயம் அதுதான். அதுதான் குரு செய்ய வேண்டிய ஒரே விஷயம்.—முழுமையான சுதந்திரத்தில் உன்னை விட்டு விடுவது. முழுமையான சுதந்திரத்தில் எல்லா வாய்ப்புகளும் திறந்திருப்பதோடு எதுவும் அமைக்கப்படாமல்…… நீ விழிப்புணர்வோடு இருந்தாக வேண்டும். வேறு எதுவும் சாத்தியமில்லை.

இதைத்தான் நான் புரிந்துகொள்ளுதல் என கூறுகிறேன், பாதுகாப்பற்ற தன்மை என்பது வாழ்வின் உள்ளார்ந்த பகுதிகளில் ஒன்று என்பதை நீ புரிந்து கொண்டால், —- அப்படி இருப்பது நல்லதுதான். ஏனெனில் அது வாழ்வை ஒரு சுதந்திரமாக ஆக்குகிறது. வாழ்வை அது தொடர்ந்த ஒரு ஆச்சரியமாக மாற்றுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. அது உன்னை தொடர்ந்து ஆச்சரியத்திலேயே வைத்துள்ளது.

அதனை நிச்சயமற்ற தன்மை என அழைக்காதீர்கள் —– ஆச்சரியம் என அழையுங்கள். பாதுகாப்பற்ற தன்மை என அழைக்காதீர்கள் – சுதந்திரம் என அழையுங்கள்.

நான் உன்னை பாதுகாப்பு உணர்வு ஏதுமின்றி, நிச்சயதன்மை உணர்வு ஏதுமின்றி, நம்பி பிடிப்பதற்கு பிடிப்பு இன்றி விட்டு விடுகிறேன். சரியாக அதுதான் நடக்கவேண்டும் என நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் உங்களை தவற விட்டு விட்டேனா இல்லை கணடிப்பாக இல்லை. நீ என்னை நன்றாக புரிந்து கொண்டுள்ளாய். இந்த நிச்சயமற்ற தன்மையுடன் உலகினுள் செல். பாதுகாப்பு இல்லை எனும் இந்த உணர்வுடன் உலகினுள் செல். ஒருபோதும் ஒரு கோழையாக இருக்காதே. ஏதோ ஒரு கோட்பாட்டின் பின்னால் செல்லாதே.

“நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் மற்றும் நான் பகவானுடன் இருந்ததில்லை”.

ஆமாம், அது அப்படித்தான். இதுதான் அன்பின் முரண்பாடு. உன்னுடைய அன்பரின் மீது உரிமை கொண்டுள்ளாய். ஆனால் நீ உரிமை கொள்ளவில்லை. நீ உனது அன்பருடன் இருக்கிறாய் ஆனாலும் நீ அவருடன் இல்லை. இதுதான் அன்பின் முரண்பாடு.

நீ உனது அன்பரை ஒரு பொருளை போல வைத்துகொள்ள இயலாது. நீ அன்பரை சொந்தமாக்கிகொள்ள முடியாது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட முறையில் நீ உனது அன்பரை சொந்தமாக்கிக் கொள்கிறாய். ஒரு குறிப்பிட்ட வகையில் நீ அவரை சொந்தம் கொண்டாடுவதில்லை. உண்மையில் நீ எவ்வளவு அதிகமாக நேசிக்கிறாயோ அவ்வளவு தூரம் உனது அன்பருக்கு நீ சுதந்திரம் அளிக்கிறாய். உண்மையில் நீ எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறாயோ அவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறாய். எவ்வளவு அதிகம் சொந்தம் கொண்டாடுகிறாயோ அவ்வளவு குறைவாக சொந்தம் கொள்கிறாய். இதுதான் அன்பின் முரண்பாடு.

என்னுடன் இருப்பது அன்பின் செய்கையாகும். என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு என்னுடைய அன்பை தவிர வேறு எதுமில்லை. என்னிடம் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு என்னுடைய அன்பை தவிர வேறு எதுவுமில்லை. நீ என்னுடன் இங்கு இருக்கும் பொழுது இந்த முரண்பாட்டில் நீ தொடர்ந்து இருப்பாய். நீ என்னுடன் இருப்பதை போல உணர்வாய், நீ என்னுடன் இல்லாததை போலவும் உணர்வாய். இரண்டும் உண்மைதான்………இரண்டும் ஒரே நேரத்தில் உண்மைகள். அதுதான் அன்பின் முரண்பாடு.

நீ என்னுடன் எவ்வளவு அதிகமாக இருக்கிறாயோ, அவ்வளவு தூரம் என்னுடன் இருக்கவில்லை என உணர்வாய். நீ எவ்வளவு குறைவாக என்னுடன் இருக்கிறாயோ அந்த அளவு என்னுடன் இருப்பதாக உணர்வாய்.

முட்டாள்தனமாக மனிதர்கள் இருக்கிறார்கள், அன்பற்ற மக்கள். அவர்கள் வந்து ஒருமுறை அல்லது இருமுறை நான் பேசுவதை கேட்டுவிட்டு, அவர்களுக்கு என்னை தெரியும் என நினைத்து கொள்பவர்கள். அவர்கள் நிச்சயதன்மையோடும், முடிவுகளோடும், வரையறையோடும் செல்வார்கள். அவர்களுக்கு அன்பு என்றால் என்ன என்று தெரியாது. அவர்களுக்கு உண்மை என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்துக்களோடு வருகின்றனர்.  அவர்களின் கருத்துகளோடு நான் ஒத்து போவதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் என்னை புரிந்துகொண்டதாக நினைத்து கொண்டு நான் சொல்வது சரி என கூறுவர்.

அவர்களின் கருத்துகளுக்கு நான் ஒத்துபோகவில்லையெனில் அவர்கள் என்னை புரிந்துகொண்டதாக நினைத்துகொண்டு இவன் தவறான மனிதன் என கூறுகின்றனர்.

நீ இங்கு அதிகநாள் இருந்திருக்கிறாய், ஆனால் காலம் உறவின் ஆழத்தைவிட முக்கியமானதல்ல. அதுதான் சந்நியாசத்தின் பொருள். அது ஒரு ஆழமான நெருக்கத்தில் ஈடுபடுதல். அது ஒரு ஆழமான ஏற்றுக்கொள்ளுதல்.

அன்றொரு நாள் ஒரு பெண் கேட்டிருந்தாள் நான் சந்நியாசம் எடுக்கவில்லை எனில் நீங்கள் என்னை ஏற்றுகொள்ள மாட்டீர்களா?  நான் அவளிடம் கூறினேன். நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் – நீ சந்நியாசம் எடுத்துக்கொள்கிறாயா இல்லையா என்பது பொருட்டேயல்ல. – ஆனால் சந்நியாசம் எடுக்கவில்லை எனில் உன்னால் என்னை ஏற்றுக் கொள்ள இயலாது.

உன்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடிந்தால், பிறகு சந்நியாசம் என்பது நீ ஏற்றுகொள்கிறாய் என்பதை காட்டும் ஒரு செயல்தான் வேறொன்றுமில்லை. நான் உங்களுடன் வருகிறேன் நான் உங்களுடன் இருப்பதற்கு தயாராக இருக்கிறேன். நான் தனியாக சொர்க்கத்திற்கு செல்வதை விட நீங்கள் நரகத்திற்கு சென்றாலும் உங்களுடன் இருப்பதையே விரும்புகிறேன் என்பதை காட்டும் ஒரு செய்கை. அவ்வளவுதான். நான் உன்னை சொர்க்கத்திற்கு அழைத்துசெல்கிறேன் என உறுதிமொழி அளிக்கவில்லை – அதை போல எதுவும்  எதுவும் கிடையாது. யாரும் அவ்வாறு நம்பக்கூடாது. நான் அதைபோல எதுவும் உங்களுக்கு உறுதிமொழி அளிக்கவில்லை. ஒருவேளை நான் நரகத்திற்கு போகலாம்.

ஒரு சந்நியாசி என்பவன் என்மீது நம்பகத்தன்மை கொண்டவன், சரி, பரவாயில்லை நானும் வருகிறேன். ஆனால் நான் உங்களோடுதான் வருகிறேன் எனக் கூறுபவன். பிறகு ஏதோ ஒன்று உங்களுக்கும் எனக்கும் இடையில் தானாகவே பரிமாற்றமாகிறது. அது உங்கள் உடைகளை மட்டும் மாற்றுவதில்லை. அது உங்கள் பெயரை மட்டும் மாற்றுவதில்லை. அது உன்னுடைய முழு கடந்த காலத்தையும் வெறுமனே விட்டுவிட்டு அ, ஆ விலிருந்து துவங்குவது. அதனால்தான்…….ம்…ம்…. நீங்கள் புதிதாக மறுபடியும் பிறந்ததை போன்ற புதிய தொடக்கத்தை தருவதற்காகவே நான் உங்கள் பெயரை மாற்றுகிறேன்.

நீ சந்நியாசியாகி தீட்சை பெறும் நாள் உன்னுடைய உண்மையான பிறந்த நாளாகிறது. நீ கடந்த காலத்தை உதறிவிட்டு நான் ஒரு புதிய எதிர்காலத்திற்கு தயாராக இருக்கிறேன், நான் என்னுடைய கடந்த காலத்தை தொடர மாட்டேன், அதனுடன் தொடர்பை அறுத்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன், நான் என்னுடைய கடந்த காலத்தை குறித்து முக்கியத்துவம் அளிக்க மாட்டேன், நான் அதனை உதறிவிட்டேன், நான் முற்றிலுமாக திறந்திருக்கிறேன், நீங்கள் எங்கு அழைத்து செல்கிறீர்களோ அங்கு வர நான் தயாராக இருக்கிறேன், எனக்கு எந்த நம்பிக்கைகளும் இல்லை என நீ என்னிடம் கூறுகிறாய்.

நீ என்னுடன் இங்கு ஆழமான நெருங்கிய உறவுடன் இருந்திருந்தால் நீ என்மீது அன்பு செலுத்தியிருந்தால், நீ என்னுடைய அன்பை சுவைத்திருந்தால் இது கண்டிப்பாக இப்படித்தான் நடக்கும்.

நான் பகவானுடன் இருந்திருக்கிறேன் நான் பகவானுடன் இருந்ததில்லை. ஆமாம், இந்த முரண்பாட்டை நீ உணர்வாய். நான் அவரை பார்த்திருக்கிறேன் ஆனாலும் ஏதோ ஒன்று தெரியாததாகவே இருக்கிறது, அறியாததாகவே இருக்கிறது, பார்க்காததாகவே இருக்கிறது. நீயும் ஒரு பகவானாக ஆகும்வரை அது எப்போதும் இருக்கும். நீயும் உன்னுடைய தெய்வீகத்தை திரும்ப உரிமை கொண்டாடும்வரை, நீயும் ஒரு கடவுளாக ஆகும்வரை ஏதோ ஒன்று  தெரியாததாகவே இருக்கும். ஏனெனில் நம்மால் முடிந்த ஒன்றை மட்டுமே நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு பெண் நேற்று இரவு என்னிடம் வந்து நான் உங்கள்மீது அன்பு செலுத்துகிறேன், ஆனால் நான் உங்களை தெய்வீக மனிதராக அன்பு செலுத்த முடியாது. நான் உங்களை ஒரு மனிதராகவே அன்பு செலுத்துகிறேன் என்றாள். அது சரி  உண்மையில் உன்னுடைய இதயத்தில் தெய்வீகமான ஏதோ ஒன்று நுழையா விட்டால் எப்படி உன்னால் தெய்வீக தன்மையை பார்க்க முடியும் உன்னால் எப்படி உன்னை தாண்டி பார்க்க முடியும்.

இதை சொன்ன அந்த பெண் சமய பற்றுள்ள ஒரு கிறுஸ்துவள். ஒருவேளை தன்ணுணர்வு இல்லாமல் உணர்வற்ற நிலையில் ஏசு ஒருவரே இருக்கும் ஒரே கடவுள் என இன்னமும் உண்மையில் அவள் நினைக்கிறாள். ஆனால் நிச்சயமாக ஏசு சிலுவையில் அறையப் பட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை சிலுவையிலிட்ட மக்கள், அவரை கடவுளாக நினைக்கவில்லை. அவர்கள் ஒரு கடவுளை சிலுவையிலிடவில்லை. – அவர்கள் ஒரு ஊதாரியை, ஒரு குற்றவாளியை சிலுவையிலிட்டார்கள். அவர்கள் வம்பு செய்யும் ஒரு மனிதனை சிலுவையிலிட்டார்கள்.

ஏசுவை சிலுவையிலிட்ட மக்களால் ஏசுவின் இறை தன்மையை பார்க்க இயலவில்லை. அவர்களால் அவரின் குறும்புதனத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. எனவே ஏசு கடவுளா இல்லையா என்பது கேள்வி அல்ல.- உன்னால் அதனை பார்க்க முடிகிறதா இல்லையா என்பதே கேள்வி. நீ எப்படி இருக்கிறாயோ அதை மட்டுமே உன்னால் பார்க்க இயலும். உன்னை தாண்டி உன்னால் பார்க்க இயலாது.

நீ என்னில் கடவுளை பார்க்கும் அந்த கணத்தில் கடவுளின் ஏதோ ஒன்று உன்னுள் பிறக்கிறது. பிறகு அது என்னை குறித்து மட்டுமே இருக்க போவதில்லை. நீ என்னில் கடவுளை பார்க்க தொடங்கினால், மெது, மெதுவாக ஏசுவில், புத்தரில், கிருஷ்ணரில் கடவுளை காண்பாய். மெதுமெதுவாக மற்ற மக்களில் கடவுளை காண்பாய். மெதுமெதுவாக உன்னால் பறவைகளில்,, மரங்களில், பாறைகளில் கடவுளை காண முடியும். – ஒருநாள் நீ கடவுள் மட்டுமே இருக்கிறார். வேறு ஏதுமில்லை என்பதை காண்பாய். உண்மையில் கடவுள் மட்டுமே இருக்கிறார் வேறு எதுவுமில்லை.

நீ அதிகமாக நான் பேசுவதை கேட்டால், ஏதோ ஒன்று கேட்க படவில்லை என்னும் உணர்வு உனக்கு அதிகமாக தோன்றும். நீ என்னை பார்க்கும் அளவிற்கு, ஏதோ ஒன்று தவற விடபடுவதாக என்னை முழுமையாக பார்க்கவில்லை என நீ உணர்வாய். நீ எனக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறாயோ, அவ்வளவு தீவிரமானதாக தாகம் இருக்கும். நீ எவ்வளவு என்னை நேசிக்கிறாயோ, அந்த அளவிற்கு உனது நேசிப்பில் நீ ஆழமாவாய். நீயே கடவுளாக வேண்டும் எனும் ஆசை உன்னுள் எழுந்து சுட்டெரிக்கும் தனலாய் மாறும்.

கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், யூதர்கள் இவர்களிடம் ஒரு பிரச்னை உள்ளது. – கடவுளை ஒரு ஆளாக பார்க்கின்றனர். – அங்கு ஒரு பிரச்னை உள்ளது. அவர்கள் கடவுள் இந்த உலகத்தை படைத்ததாக நினைக்கின்றனர். கிழக்கில் நாங்கள் கடவுளை பற்றி அதைவிட ஆழமான புரிதலை கொண்டுள்ளோம். உருவாக்குதல் என்பது கடவுளை விட்டு வேறுபட்டதல்ல. அது அவருடைய லீலை. அது அவர் பல உருவங்களில் தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறார். இங்கு அவர் ஒரு பாறையாகிறார், அங்கு அவர் ஒரு மலராகிறார். இங்கு அவர் ஒரு பாவியாகிறார், அங்கு அவர் ஒரு துறவியாகிறார். முழு லீலையும் அவருடையதே. அவர் ஒருவரே நடிகர். அவர் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக் கொண்டேயிருக்கிறார். அவர் ஏசுவிடம் இருக்கிறார், மற்றும் அவர் ஜூதாஸிடமும் இருக்கிறார்.

கிழக்கில் கடவுள் ஒரு ஆளல்ல…. பிரபஞ்சம் கடவுளாகவே இருக்கிறது. கடவுள் உருவாக்கியவரல்ல, கடவுளே உருவக சக்தி. உருவாக்குபவர், உருவாக்கப்படுவது என்பவை வெறும் ஒரே உருவக சக்தியின் இரு பரிமாணங்கள்.

மேற்கின் கருத்து ஒரு படம் வரைபவர் படம் வரைவதை போன்றது. படம் நிறைவடையும் நேரத்தில், படம் அந்த படத்தை வரைந்தவரிடமிருந்து வேறுபட்டு விடுகிறது. பிறகு அந்த படத்தை வரைந்தவர் இறந்துவிடலாம். ஆனால் படம் இருக்கும். கிழக்கில் நாங்கள் கடவுளையும் உலகத்தையும் படம் படத்தை வரைந்தவர் எனும் கோணத்தில் கருதுவதில்லை. நாங்கள் கடவுளை ஒரு நடனமாடுபவராக கருதுகிறோம். நடராஜர். நீ நடனம் ஆடுபவரை நடனத்திலிருந்து பிரிக்கமுடியாது. நடனமாடுபவர் போய்விட்டால் நடனமும் போய்விடுகிறது. நடனம் நின்றால் அந்த மனிதர் நடனமாடுபவர் அல்ல. நடனமும் நடனமாடுபவரும் இணைந்தே இருக்கின்றன. அவை தனியாக இருக்க முடியாது. நீ அவைகளை பிரிக்க முடியாது.

கடவுள் ஒரு நடனமாடுபவரை போன்றவர். நான் அவரின் அசைவுகளில் ஒன்று. நீயும் அவரது அசைவுகளில் ஒன்று. நீ அதனை அறிந்திருக்கலாம் அல்லது அறியாமல் இருக்கலாம். உலகில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஒரு சில மக்கள் தங்களை கடவுள் என்பதை அறிந்து கொள்கின்றனர். ஒரு சில மக்கள் தங்களை கடவுள் என்பதை அறிந்து கொள்வதில்லை. வித்தியாசம் உனது இருப்பில் இல்லை. நீ அடையாளம் கண்டு கொள்வதில்தான் இருக்கிறது. நீ அதிகமாக நேசிக்க, நேசிக்க உனக்கு புரிதலும் விழிப்புணர்வும் அதிகமாக ஏற்பட ஏற்பட ஏதோ ஒன்று கம்மியாக இருக்கிறது என்பதை மேன்மேலும் உணர தொடங்குவாய்.

நான் அவரை கேட்டிருக்கிறேன், ஆனாலும் அவர் சொல்லும் முறைக்கு நான் செவிடாக இருக்கிறேன். நீ உண்மையிலேயே என்னை கேட்டிருக்கிறாய். பிறகு மட்டுமே இந்த உணர்வு எழும்.  என்னை கேட்டுவிட்டு நீ என்னை புரிந்து கொண்டதாக நீ எண்ணினால் நீ உண்மையிலேயே செவிடு, செவிடு மட்டுமல்ல நீ ஒரு முட்டாளும் கூட.

நான் வெளிப்படுத்த முடியாத ஒன்றை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் முடிவான மர்மத்தை பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ அதனை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நீ அதனை ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. அது நழுவக் கூடியது. அது தப்பிச் சென்று விடுகிறது. அது அடையக் கூடிய தூரத்திலேயே இருக்கிறது. ஆனால் அதனை பிடிக்க முடியாது. நீ எப்போதும் அதனை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறாய். ஆனால் நீ ஒருபோதும் அடைவதில்லை. நீ அடையும் நாளில் நீ அங்கு இருப்பதில்லை.

தேடுபவரும் தேடப் படுவதற்குமான பிரிவினை மறைந்து விடுகிறது. பிறகு நீதான் அது. அதுதான் நீ. நீதான் அது. அந்த கணம்தான் உச்ச கணம்.

ஆனந்த சுபூதி, சந்தோஷமாக செல், பாதுகாப்பற்ற தன்மையோடு செல், சுதந்திரத்தோடு செல், சார்பற்ற நிலையில் செல், எதன்மீதும் அல்லது யார்மீதும் சாய வேண்டிய தேவை இல்லை. என்னை ஒரு பிடிப்பாக உபயோகப் படுத்தாதே. நீ மேலும் சார்பற்ற நிலையில் இருக்கவும், என்னிடமிருந்து சுதந்திரமாக இருக்கவும், மற்ற எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமாக இருக்கவும் உனக்கு உதவ என்னை அனுமதி. நீ என்னை தவற விடவில்லை. நான் உனது இதயத்தில் ஒரு விதையை போல விழுந்துள்ளேன். வெறுமனே பிரார்த்தனையோடு பார்த்துக் கொண்டிரு. ஆழமான நன்றி உணர்வோடு காத்துக் கொண்டிரு. சரியான நேரத்தில் விதை முளைக்கும்.

Source : A Sudden Clash of Thunder Ch.6  # 1.