தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில் முதல் பகுதி இம்மாதம் வருகிறது. அடுத்த மாதமும் தொடரும்.

ஏன் இன்றைய நாகரீக மனிதன் மிகவும் தனிமையை உணர்கிறான்?

தம்மோ,

மனிதன் எப்போதும் தனிமையை
உணர்கிறான். ஏனெனில் மனிதன் அடிப்படையிலேயே தனியானவன். நாம் தனியாகவேதான்
பிறக்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம். இதற்கு இடையில் கூடசேர்ந்து இருப்பதுபோல
பாசாங்கு செய்து கொள்கிறோம். தனிமை சேதாரப்படாமல் அப்படியே இருக்கிறது. அது
அப்படியே அடிப்படை நீரோட்டமாக இருக்கிறது. அது அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதன் எப்போதுமே தனியானவன்,
ஆனால் இன்றைய நாகரீக மனிதன் அதை அதிகமாக உணர்வதற்கு காரணம் இருக்கிறது.
முதல்முறையாக மனிதன் தன்னைப் பற்றி நினைத்துப்பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது.
கடந்த காலத்தில் உணவுக்காக போராடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. காலையில்
எழுந்தால் இரவு படுக்கப்போகும்வரை உழைத்தால்கூட அது அவர்களுக்கும் அவர்களது
குழந்தைகளுக்கும் போதாமல் இருந்தது.

இன்றும் கிழக்கித்திய நாடுகளில்
அதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்திய கிராமத்தில் வாழும் இன்றைய மனிதன் தனியாக
உணர்வதில்லை. எதையும் உணர்வதற்கு அவனுக்கு நேரம் கிடையாது. அவன் பசியை உணர்கிறான், தனிமையை உணர்வதில்லை. அவனுக்கு தங்குமிடம், வீடு வேண்டும். இந்த விஷயங்கள் – தனிமையை – அவனுக்கு கிடைக்காது. சமுதாயம் சிறிதளவாவது வளமடையும்போதுதான் இந்த உணர்வுகள் உணரப்படுகின்றன.

மக்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக
இருந்து, நல்ல இடத்தில் தூங்கி, நல்ல வேலையில் இருக்கும்போது, வாழ்வின் அடிப்படை
தேவைகள் பூர்த்தியாகிவிட்டபின் வாழ்க்கையின் உண்மையான பிரச்னைகள் எழுகின்றன.
அப்போது ஒருவனுக்கு நான் தனியானவன், கூட்டத்தில் இருக்கும்போதுகூட நான் தனியானவன்
என்பது உறைக்கிறது. அது உயரிய தேவை, தளம் உயர்ந்த தேவை.

முதலில் உடல்தேவை வருகிறது.
உடலின் தேவை பூர்த்தியாகாவிட்டால் உனக்கு மனத்தேவை கிடையாது. உடல்தேவை பூர்த்தியான பின்பே மனத்தேவை எழுகிறது. அது அடுத்த கட்டத்திறகானது. இசையைப் பற்றி, கவிதையை, ஓவியத்தை பற்றி எண்ண ஆரம்பிக்கிறான். கலையைப்பற்றி, அழகுணர்ச்சியைப்பற்றி எண்ணுகிறான். இவை உயரிய தேவைகள். ஷேக்ஸ்பியரைப்பற்றி, மில்டன் பற்றி, காளிதாஸ் பற்றி, ரவீந்திரநாத் தாகூர் பற்றி, கலீல் கிப்ரான் பற்றி, நினைக்கிறான். வாக்நர், பீதோவன், லீநர்டோ, வான்காக், பிகாஸோ……….இவையெல்லாம் உயரிய தேவைகள்.

பசியுள்ள மனிதனுக்கு பீதோவனைப்
புரியாது. அந்த இசை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அது அவனது பசியை போக்காது.
இசையை கேட்பதற்கு பதிலாக அந்த இசையமைப்பவரை கொன்றுவிடலாம் என்று நினைக்கும்
அளவிற்கு அவனது பசி இருக்கும்.

அவனுக்கு கலைகளின் அழகைப்பற்றி
கவலை கிடையாது, அதற்கு பதிலாக அவன் காரல் மார்கஸ் பற்றியும்
கம்யூனிஸத்தைப்பற்றியும் அக்கறை காட்டுவான். உடல்தேவை பூர்த்தியானபின்பே
மனத்தேவைகள் எழும்.

எனக்கு பல கடிதங்கள் சோவியத்
ரஷ்யாவிலிருந்து வருகின்றன என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.
அவர்களால் எனக்கு நேரிடையாக கடிதம் எழுத முடியாது. எழுதினால் அவை வந்து சேராது.
முதலில் ரஷ்ய அரசாங்கத்தால், பின்பு இந்திய அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படும்.
இந்திய அரசாங்கம் மட்டும்தான் என்றால் அங்கே வாய்ப்பு இருக்கலாம், ஆனால் ரஷ்ய அரசாங்கம்….. அவர்கள் மிகவும் கொள்கைபிடிப்புள்ளவர்கள். அதனால் இந்த கடிதங்கள்
விருந்தாளிகளிடம், உல்லாசபயணம் வருபவர்களிடம் கொடுக்கப்பட்டு, லண்டனிலோ, பாரீஸிலோ, பெர்லினிலோ போஸ்ட் செய்யப்பட்டு எனக்கு வந்து சேருகின்றன.

பலர் இங்கே வருவதற்கு விருப்பம்
தெரிவித்து எழுதி இருக்கின்றனர், ஆனால் அது சாத்தியமில்லாதது. எனது புத்தகங்கள்
மறைமுகமாக படிக்கப்படுகின்றன. அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என
கொடுக்கப்பட்டு படிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கம்யூனிஸ நாட்டில் நீ எனது
புத்தகத்தை நேரிடையாக எடுத்துக் கொண்டு செல்லமுடியாது.

உடல்ரீதியான தேவைகள்
பூர்த்தியாகி, மனத்தேவைகள் எழும் கட்டத்திற்கு ரஷ்யா வந்து கொண்டிருக்கிறது.
ஆன்மீகத்தேவைகள் மேலும் உயரிய தரமானவை. மனத்தேவைகளும் பூர்த்தியான பின் – சிறந்த
இசையை கேட்டபின், சிறந்த ஓவியத்தை பார்த்த பின், சிறப்பான கவிதையை படித்தபின் –
என்ன செய்வது? மிக விரைவில் இந்த விஷயங்கள் விளையாட்டாக போய் விடும், ஆனால் சிறப்பான விளையாட்டாக இருந்தாலும் கூட  விளையாட்டு விளையாட்டுதானே.

பின் இறுதியானது உனது கதவை தட்ட
ஆரம்பிக்கும்போது, இறுதியானது உனது கதவை தட்டும்போது நீ தனிமையை உணர்வாய். இந்த
முழு பிரபஞ்சத்திலும் தனிமையாக உணர்வாய். அதுதான் தியானத்தின் ஆரம்பம். நீ தனிமையை
உணர்ந்தாலும் அந்த தனிமையை வரமாக, ஆழ்ந்து, ஈடுபாட்டுடன் உணர்ந்தால், பின் நீ
தியானம் செய்யலாம்.

தனிமையிலிருந்து தப்பி ஓடுவதற்கு
பதிலாக அதில் முழ்கி, அது என்னவென்று நேருக்கு நேராக பார்ப்பதற்கான, அதனுடன்
இயைந்து செல்வதற்கான, ஒரே வழி தியானம்தான். பின் நீ வியப்படைவாய். நீ உனது
தனிமையின் உள்ளே சென்றால் அதன் மையத்தில் இருப்பது தனிமை அல்ல முற்றிலும் வேறுபட்ட விஷயமாக உள்ள ஏகாந்தம் – ஒருமை – என்பதை அறியும்போது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வெளிப்புற சூழ்நிலை தனியானதாகவும்
மையம் ஒருமையானதாகவும் அமைந்திருக்கிறது. வெளிபுறம் தனிமையாகவும் உள்மையம்
ஏகாந்தமாகவும் உள்ளது. ஒரு முறை உனக்கு உனது அற்புதமான ஒருமை தெரிந்து விட்டால்
பின் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிவிடுவாய். நீ ஒருபோதும் தனியாக உணர
மாட்டாய். தனியாக இருக்க நேரிடும் மலை, பாலைவனம் போன்ற இடங்களில்கூட நீ தனியாக உணர மாட்டாய். ஏனெனில் உன் ஒருமையில் கடவுள் உன்னுள் இருப்பதை நீ அறிந்து விட்டாய்.
உன் ஒருமையில் நீ கடவுளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பது தெரிந்த பின் தனிமையில்
இருப்பதைப்பற்றி யார் கவலைப் பட போகிறார்கள், கூட யாராவது இருந்தால் என்ன? யாரும் இல்லாவிட்டால் என்ன? நீ உள்ளே நிறைந்திருக்கிறாய், உள்ளே
செல்வந்தனாக இருக்கிறாய்.

இப்போது கூட்டத்தில்கூட நீ
தனிமையில் இருக்கிறாய். நான் சொல்கிறேன், நீ உனது ஒருமையை உணர்ந்து விட்டால் உனது
தனிமையில்கூட நீ தனியாக உணர மாட்டாய்.

ஆனால் இன்றைய நாகரீக மனிதன் சிரமப்படுகிறான்…….

மக்கள் உண்மையாகவே தனியாக
இருக்கிறார்கள். இதுவரை மனிதன் தனியாக உணர்ந்ததில்லை, ஏனெனில் அவனால் அவனது
அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடிந்ததில்லை. முதன்முதலாக மேற்கத்திய
நாடுகளில் மனிதனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
அதனால் அடுத்தகட்ட தேவைகள் மேலே வருகின்றன. இது நல்ல விஷயம்தான். இது சாபம் போல தோன்றுகிறது, ஆனால் அது அப்படியல்ல, மாறுவேடத்தில் வரும் வரம்.

மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல
மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வேதனை என்னவென்றால் கீழை நாடுகள் மேலை நாடுகள் போல மாறுவதுதான். மனிதன் மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறான். மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் போது கீழை நாடுகள் மேலை நாடுகளைப்போல மாறி விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இப்படித்தான் சக்கரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் அதை இங்கேயே பார்க்கலாம்.
இங்கே இந்தியர்கள் குறைவாக இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் இது அவர்களின் தேவை
அல்ல. நான் இங்கே பகிர்ந்து கொள்ளும் விஷயம் அவர்களுக்கானது அல்ல. அதற்கான ஆசை
இன்னும் அவர்களுக்கு வரவில்லை. அவர்கள் வந்தாலும்கூட அவர்கள் கேட்பது
தியானத்தைபற்றியோ, சன்னியாசைபற்றியோ, நேசத்தைபற்றியோ அல்ல. கேட்பதே இல்லை.

எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்
நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை, சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது  நீங்கள் ஏன் உங்களது சன்னியாசின்களுக்கு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. அது மட்டும் நிச்சயம். வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர். அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான். அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும். ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை. எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன,
மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது
அவர்களுக்கு உதவப் போவதில்லை. இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது, இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.

நாம் முழு அடிப்படையையே மாற்ற
வேண்டும். ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது காரணம் மிகவும்
ஆழமானதாக இருக்க வேண்டும். காரணம் இந்திய மனம் வாழ்வுக்கு எதிரானது. இது
பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது.
பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம். நீ பொருளுலகத்திற்கு
எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். அது உனது முடிவு. உனது
விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான
ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது. பொருளும் தன்னுணர்வும் இரண்டு விஷயங்கள் அல்ல,
உடலும் தன்னுணர்வும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான். இந்த உலகம் விரும்பப்பட
வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு
தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன,
அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது, அதனால் அவர்களது
அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை
தொந்தரவு செய்கின்றன, அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம்
பிடிகிறது. கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. இங்கே பொருளுலகம் இல்லாமல்
ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது. அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி
அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு
எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால்
கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும்
உடலும் உயிரும் இருக்கும். ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு
பார்வைகள். அப்போது ஏழ்மை மறைந்து விடும். இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே
உள்ளது, மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு
வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே அதிக அளவு
இந்தியர்களை பார்க்க முடியாது. சிலரே இருப்பர். அடிப்படை தேவைகள்
பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு
புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். இவர்கள் கிழக்கத்தியநாடுகளில்
பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். இவர்கள்
மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள். இந்தியா செல்வ
செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி
இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. அதனால் மகிழ்ச்சி
வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

ஒருமையை அடையும்வரை நீ தனிமையை
சந்திக்க வேண்டும். ஒருமையின் முதல் தரிசனம் சடோரி. இரண்டாவது தரிசனம் இரண்டாவது
சடோரி. நீ உனது ஒருமையினுள் நிலைப்பட வேண்டும், ஆழமாக வேரூன்ற வேண்டும். மூன்றாவது சடோரி, முடிவான சடோரி இந்தியாவில் நாங்கள் அதை சமாதி என்றழைப்போம். அது நீ உனது ஒருமையிலிருந்து வேறுபட்டு இல்லாத நிலை. அதுதான் நீ. நீதான் உனது ஒருமை.

பின் ஒருவர் அருவி போல பொங்கி
பெருக வேண்டும். அந்த ஒருமையிலிருந்து நேசத்தின் மணம் பெருகும், அந்த
ஒருமையிலிருந்து படைப்புத்தன்மை பெருகும், – ஏனெனில் இந்த ஒருமையிலிருந்து இறைமைதன்மை பொங்கி வழியும். நீ ஒரு வெற்று மூங்கிலாகிவிடுவாய்…… கடவுள் உன் மூலம் இசைக்க ஆரம்பித்து விடுவார். ஆனால் பாடல் எப்போதும் அவருடையதுதான்.

Source : The Fish in The Sea is not Thirsty   Che  # 6  Qus : # 6