தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில்

கேள்வி :
நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவேதான் பிறக்கிறோம்தனியாகவேதான் வாழ்கிறோம்தனியாகவேதான் இறக்கிறோம் என்று கூறினீர்கள். இருப்பினும் நாம்
பிறந்ததிலிருந்து நாம் என்ன செய்தாலும்
யாராக இருந்தாலும் நாம் அடுத்தவருடன்
தொடர்பு கொள்ளுதலையே தேடுகிறோம். மேலும் குறிப்பிட்ட
 ஒருவருடன் அன்யோன்யமாக இருப்பதற்குநெருக்கமாக இருத்தலையே விரும்புகிறோம்அதில் ஈடுபாடு கொள்கிறோம். நீங்கள் இதைப்பற்றி ஏதாவது கருத்து சொல்ல முடியுமா?

தியான் அமியோ,

நீ கேட்டிருக்கும் இந்த கேள்வி
ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிறது. நாம் ஒருவனாகத்தான் பிறக்கிறோம், ஒருவனாகத்தான் வாழ்கிறோம், ஒருவனாகத்தான் இறக்கிறோம்.
ஏகாந்தம்தான் நமது உண்மைநிலை. ஆனால் நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு
இல்லை. நமக்கு அதைப்பற்றிய உணர்வு இல்லாத்தால் நாமே நமக்கு
அன்னியர்களாக தெரிகிறோம். நமது ஒருமையை ஒரு அற்புதமான வரமாக, அழகாக, மௌனமானதாக, அமைதியானதாக, பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதாக எடுத்துக் கொள்ளாமல் நாம் அதை தனிமையைக தவறாக புரிந்துகொள்கிறோம்.

ஒருமை
தனிமை என தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது. நீ ஒருமுறை உனது ஒருமையை
தனிமை என தவறாக புரிந்துகொண்டுவிட்டால் முழு பொருளும் மாறிவிடும். ஒருமை
அழகானது, நேர்மறையானது, சிறப்பானது. தனிமை வறுமையானது, எதிர்மறையானது, இருண்டது, இருட்டானது.

தனிமையிலிருந்து எல்லோரும் தப்பித்து ஓடுகின்றனர்.
அது காயம் போன்றது, அது வலி தருவது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கூட்டத்தினிடையே இருப்பது சமுதாயத்தின் பாகமாகி விடுவது, மனைவி அல்லது கணவனை தேடிக் கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது
ஆகியன. இந்த கூட்டத்தில் நீ உனது தனிமையை மறந்து விட முடியும்.

ஆனால் அதை மறப்பதில் இதுவரை யாரும் வெற்றியடைய வில்லை. அது உனது
இயல்பு, நீ அதை புறக்கணிக்கலாம் – ஆனால் நீ அதை அதாகவே
பார்க்காததால் அந்த பிரச்னை மேலும் சிக்கலானதாகிறது. நீ ஒருமையாக
பிறந்திருக்கிறாய் என்பதை நீ சலுகையாக எடுத்துக் கொண்டு மறந்துவிட்டாய்.

அகராதி அடிப்படையில் அவற்றிற்க்கு ஒரே அர்த்தம்தான்.
இது அந்த அகராதியை உருவாக்கிய மனிதர்களின் மனங்களை காட்டுகிறது.
அவர்கள் தனிமைக்கும் ஒருமைக்கும் இருக்கும் அளவற்ற வித்தியாசத்தை
புரிந்துகொள்ளவில்லை. தனிமை ஒரு பிளவு. ஏதோ ஒன்று விடுபட்டுவிட்டது. அதை நிரப்ப ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அதை எதனாலும் நிரப்பமுடியாது. ஏனெனில்
முதலாவதாக அது ஒரு தவறான புரிதல். நீ வயதில் வளர வளர அந்த பிளவும் பெரிதாகிறது. மக்கள் தங்களுடன் இருப்பதற்கு பயந்து கொண்டு மிகவும் முட்டாள்தனமான செயல்களை செய்கின்றனர். சீட்டுக்கட்டு தனியாக விளையாடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர்
அங்கே இருக்க மாட்டார். ஒரே ஆள் இரண்டு பக்கத்திலிருந்தும் ஆடக்கூடிய
விளையாட்டை அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எப்படியோ எதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த ஈடுபடுதல் வேலையில் அல்லது
மனிதர்களில் இருக்கலாம். வேலையில் ஈடுபடுவர்கள்
வேலைபிசாசுகள். அவர்கள் வார இறுதி நாள் நெருங்க நெருங்க பயபடுவார்கள் – என்ன செய்யப் போகிறேமோ என்று. அவர்கள் எதுவும் செய்ய வில்லை, செய்ய முடிய வில்லை என்றால் அவர்களை அவர்களிடமே விட்டு விட்டால், அதுதான் மிகவும் வேதனையான அனுபவம் அவர்களுக்கு.

இந்த உலகில் வார இறுதி நாட்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன என்பதை
அறிந்தால் நீ ஆச்சரியப்படுவாய். மக்கள் தங்களது கார்களில் ஏறி
ரிசார்ட்டுகளுக்கோ, மலைபிரதேசங்களுக்கோ, கடற்கரைக்கோ காரின் பின் முனையும்
அடுத்த காரின் முன்முனையும் ஒட்டிக் கொண்டிருக்கும்படி
போகிறார்கள். போய் சேர எட்டு மணி நேரமோ, பத்து மணி நேரமோ ஆகலாம், அங்கேயும் அவர்களுக்கு செய்ய எதுவோ கிடைத்து விட்டது. ஆனால் இப்போது அவர்களது வீடும், அவர்களது இடமும் இந்த கடற்கரை ரிசார்ட்டை விட அதிக அமைதியாக இருக்கும். எல்லோரும் இங்கு வந்து விட்டனர். ஆனால் ஏதோ ஈடுபாடு……..

மக்கள் சீட்டுக்கட்டு, செஸ் விளையாடுகின்றனர்.
மணிக்கணக்காக டிவி பார்க்கின்றனர். ஒரு அமெரிக்கன் சராசரியாக 5 மணி நேரம் டிவி பார்க்கிறான். மக்கள் ரேடியோ கேட்கின்றனர். தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக மட்டுமே. அவர்களது எல்லா செயல்பாட்டிற்க்கும் காரணம் ஒன்றே. – தனிமையில் இருக்கக் கூடாது. அது மிகவும் அச்சமூட்டுவது. இந்த கருத்து மற்றவர்களிடம் இருந்து
பெறப்பட்டது. ஒருமையில் இருப்பது அச்சமூட்டும் நிலை என்று உனக்கு யார் சொன்னது

ஒருமையை பற்றி தெரிந்த, அறிந்த யாராவது அதைப்பற்றி
சொன்னால் அது முற்றிலும் வேறானது. ஒருமையாய் இருப்பதை விட அழகானது, அருமையானது, சந்தோஷமானது, அமைதியானது எதுவுமே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் நீ கூட்டம் சொல்வதை கேட்கிறாய். தவறாக புரிந்து கொண்டிருக்கும் மக்களே பெரும்பான்மையானவர்கள்.
அப்படி இருக்கும் போது யார் ஜராதுஸ்த்ராவைப் பற்றியோ, கௌதம புத்தரைப் பற்றியோ கவலைப்படுவார்கள் இந்த தனித்துவமான அரியவர் தவறாக இருக்கக் கூடும், அவர்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கலாம், தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடும். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் தவறாக இருக்க முடியாது அல்லவா மேலும் கோடிக்கணக்கான மக்கள், தனிமையில் விடப்படுவது வாழ்வில் மிக மோசமான அனுபவம், அது நரகம் என்று ஒத்துக்
கொள்கிறார்கள்.

ஆனால் தனிமையில் விடப்படுவது நரகம் என்ற காரணத்தாலோ, தனிமையை பற்றிய பயத்தினாலோ உருவாக்கப்படும் எந்த உறவும் நிறைவை தராது. அதன் அடிப்படை வேரே விஷம். நீ உனது துணைவியை நேசிக்க முடியாது, நீ தனிமையில் இருக்க முடியாது
என்று அவளை உபயோகிக்கிறாய். அவளும் அதே போலத்தான், அவளாலும் உன்னை நேசிக்க முடியாது. அவளும் தனிமையை தவிர்க்கத்தான் உன்னை உபயோகிக்கிறாள்.

இயல்பாகவே அன்பு என்ற பெயரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – அன்பைத் தவிர. சண்டைகள் வரலாம், வாக்குவாதங்கள் வரலாம், இருப்பினும் அவர்கள் தனிமையாய் இருப்பதை தேர்ந்தெடுப்பதில்லை. யாராவது ஒருவர் அங்கே இருக்கிறார், நீ ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். நீ உனது தனிமையை மறந்து விடலாம். ஆனால் அன்பு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் அன்பிற்க்கான அடிப்படையே அங்கில்லை. அன்பு பயத்தின் மூலம் வராது, வளராது

நீ கேட்கிறாய், நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவே பிறக்கிறோம், தனியாகவே வாழ்கிறோம், தனியாகவே இறக்கிறோம் என்று கூறினீர்கள்.
ஆனாலும் நாம் பிறந்த அன்றிலிருந்து நாம் என்ன செய்தாலும், நாம் யாராகயிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள மற்றவரை தேடுகிறோம் என்பது போல தோன்றுகிறது.

இப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மற்றவரை தேடுவது தப்பிப்பதைத் தவிர
வேறெதுவும் அல்ல. ஒரு சிறு குழந்தை கூட செய்ய எதையாவது கண்டு
பிடிக்கிறது. எதுவும் கிடைக்காவிடில் தனது கால் கட்டை விரலை தனது வாய்க்குள்
வைத்து சூப்ப ஆரம்பிக்கிறது. அது முற்றிலும் பொய்மையான ஒரு செயல், அதிலிருந்து எதுவும் கிடைக்க போவதில்லை, ஆனால் ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். அவன் எதையோ செய்து கொண்டிருக்கிறான். ரயில் நிலையங்களில், விமான நிலையத்தில் சிறிய குழந்தைகள் தங்களது கரடி பொம்மையை தூக்கி கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். அவர்களால் அது இல்லாமல் தூங்க முடியாது. இருட்டு அவர்களது தனிமையை மேலும் அபாயகரமானதாக்குகிறது. கரடிபொம்மை ஒரு சிறந்த பாதுகாப்பு. யாரோ அவர்களுடன் இருக்கிறார்.

மேலும் உங்களது கடவுள் என்பவர் வளர்ந்தவர்களுக்கான கரடி பொம்மை மட்டுமே.

நீ எப்படியோ அப்படியே உன்னால் வாழ முடியாது. உனது உறவுகள் உண்மையான
உறவுகளல்ல. அவை அவலஷ்சணமானவை. நீ அடுத்தவரை உபயோகிக்கிறாய், மேலும் உனக்கு மிக நன்றாக தெரியும். அடுத்தவரும் உன்னை உபயோகிப்பது. மேலும் மற்றவரை உபயோகிப்பது அவரை ஒரு பொருளாக, ஒரு சந்தைசாமானாக குறைத்து
மதிப்பிடுவதாகும். அந்த நபரிடம் உனக்கு எந்த மரியாதையும் கிடையாது.

நீ மேலும் நாம் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு நபரிடம் அன்யோன்யப்படுகிறோம்.
என்றும் கேட்கிறாய்.

இதற்கு உடல்ரீதியான காரணம் இருக்கிறது.
நீ ஒரு தாயால், ஒரு தந்தையால் வளர்க்கப்படுகிறாய், நீ ஒரு பையன் எனில் நீ உனது தாயை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாய். உனது தந்தையை ஒரு போட்டியாளனாக பார்த்து அவரிடம் பொறாமை கொள்கிறாய். நீ ஒரு பெண்ணாக இருந்தால் உனது தந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறாய். உனது தாயை வெறுக்க ஆரம்பிக்கிறாய். ஏனெனில் அவள் உனது போட்டியாளராக இருக்கிறாள். இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மேம்போக்காக கூறப்படுபவை அல்ல. இதனுடைய விளைவாக உனது முழு வாழ்க்கையும் ஒரு துயரமாக மாறி விடுகிறது.

பையன் தனது தாயின் உருவத்தை பெண்ணின் உதாரணமாக கொள்கிறான். அவன்
தொடர்ந்து கட்டுதிட்டப்படுத்தப்படுகிறான். அவனுக்கு மிகவும்
நெருக்கமாக, மிகவும் அன்யோன்யமாக ஒரே ஒரு பெண்ணைத்தான் தெரியும்.
அவளது முகம், அவளது தலைமுடி, அவளது அருகாமை எல்லாமும் பதிவாகி விடுகிறது.
விஞ்ஞானரீதியாக இதற்கு உபயோகிக்கப்படும் வார்த்தை மிகச்சரியாக இதுதான். அது அவனது மனதில் அச்சாக பதிந்துவிடுகிறது. இதேதான் ஒரு பெண்ணிற்க்கு தனது தந்தையிடம் நடக்கிறது. நீ வளர்ந்தவுடன் யாரோ ஒரு பெண்ணிடமோ, ஆணிடமோ காதல் வயப்படும்போது, நீ நாம் ஒருவருக்கொருவர்
உண்டானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறாய். யாரும்
யாருக்காகவும் உண்டாக்கப்படவில்லை. ஆனால் உனக்கு ஏன் குறிப்பிட்ட ஒருவர் மேல் ஈர்ப்பு வருகிறது. ஏனெனில் அதற்கு காரணம் உனது பதிவுதான். அவன் உனது தந்தையை ஏதோ ஒரு வகையில் பிரபலித்திருக்க வேண்டும். அவள் ஏதோ ஒரு வகையில் உனது தாயை பிரதிபலித்திருக்க வேண்டும்.

எந்த பெண்ணும் அப்படியே உனது தாயை நகலெடுத்தாற்போல இருக்க முடியாது.
மேலும் நீயும் ஒரு தாயை தோடவில்லை. ஒரு துணைவியைத்தான்
தேடுகிறாய். ஆனால் உன்னுள் பதிவாகி உள்ள அச்சு உனக்கு தகுந்த பெண் யாரென்று
முடிவு செய்கிறது. நீ அது போன்ற பெண்ணை பார்த்த கணமே அங்கே காரண காரியத்திற்க்கே இடமில்லை. நீ உடனடியாக ஈர்க்கப் படுகிறாய். உனது அச்சுப்பதிவு உடனே வேலை செய்ய துவங்கி விடுகிறது – இவள்தான் உன் துணைவி, அல்லது இவன்தான் உன் துணைவன்.

கடற்கரையில், சினிமா தியேட்டரில், பார்க்கில் அவ்வப்போது சந்திப்பது
என்பது மிகவும் நல்லது. ஏனெனில் மற்றவரை பற்றி உனக்கு
முழுமையாக தெரியப் போவது இல்லை. ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ
விரும்புகிறீர்கள். திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள், காதலிப்பவர்கள் எடுக்கக் கூடிய மிக அபாயமான முடிவுகளில் ஒன்று இது.

திருமணம் முடிந்த கணமே மற்றவரைப் பற்றி
முழுமையாக உனக்கு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது ஒவ்வொரு சிறு விஷயமும் உனக்கு அதிர்ச்சியூட்டுகிறது – ஏதோ தவறு நடந்துவிட்டது. இதுவல்ல அந்த பெண், இதுவல்ல அந்த ஆண் – ஏனெனில் நீ உனக்குள் சுமந்து
கொண்டு இருக்கும் வடிவத்திற்க்கு அவர்கள் பொருந்தி வரவில்லை.
பிரச்னை இன்னும் பெரிதாகும். ஏனெனில் அவள் தனது தந்தையின்
வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாள், நீ அதற்கு பொருந்த வில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய். அவள் அதற்கு பொருந்தவில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய், அவள் அதற்கு பொருந்தவில்லை. இதனால்தான் அனைத்து திருமணங்களும் தோல்வியடைகின்றன.

மிக அரிதான திருமணங்கள்தான் தோல்வியடைவதில்லை. தோல்வியடையாத
திருமணத்திலிருந்து கடவுள் உன்னை காப்பாற்றுவார் என நான்
நம்புகிறேன். சிலர் குரூரமானவர்கள். மற்றவர்களை இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார்கள். சிலர் தங்களை தாங்களே இம்சை படுத்திக் கொள்வதில் சந்தோஷமடைவார்கள். ஒரு கணவனும் மனைவியும் இந்த இரண்டு வகைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையை சேர்ந்தவராக
இருந்தால், அந்த திருமணம் ஒரு வெற்றி பெற்ற திருமணமாக இருக்கும். ஒருவர் இம்சை
படுத்துவார், ஒருவர் இம்சை படுவார். – இது ஒரு பொருத்தமான திருமணம், ஏனெனில் ஒருவர் இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார், ஒருவர் இம்சை படுவதில் சந்தோஷம் கொள்வார்.

ஆனால் முதலில் நீ இம்சை படுத்துபவனா, இம்சை படுபவனா என கண்டுபிடிப்பது
மிகவும் கஷ்டம். பின் உனது அடுத்த துருவ வகையை சேர்ந்தவரை
கண்டு பிடிப்பது. மேலும் நீ புத்திசாலியாக இருந்தால் நீ ஒரு மனோதத்துவ நிபுணரிடம்
சென்று நீ குரூரமானவனா, குரூரத்தை அனுபவிப்பவனா என கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உனக்கு பொருந்தக் கூடிய சில அறிகுறிகளை அவர் உனக்கு கொடுக்கக் கூடும்.

சில நேரங்களில் குரூரமானவரும் குரூரத்தை அனுபவிப்பவரும் திருமணம் நடந்து
விடும். அவர்கள்தான் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள்.
ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் என்ன வகையான தேவை இது. அவர்கள் இருவரும் பைத்தியங்கள். அவர்கள் இம்சை கொண்ட வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் மற்றபடி ஒவ்வொரு திருமணமும் தோல்வியடைப் போகிறது, ஒரே ஒரு காரணத்தால். அந்த அச்சுப் பதிவு தான் பிரச்னை.

திருமணத்தில் கூட நீ எந்த அடிப்படை காரணத்திற்காக உறவை ஏற்படுத்திக் கொள்கிறாயோ அது நிறைவேறுவதில்லை. நீ ஒருமையில்
இருப்பதை விட உன் மனைவியுடன் இருக்கும்போது அதிக தனிமையாக உணர்கிறாய். ஒரு கணவனையும் மனைவியையும் ஒரு அறையில் தனியே விடுவது அவர்களை மேலும் அதிக துன்பமடைபவர்களாக ஆக்கும்.

எனது நண்பர்களில் ஒருவன் ஓய்வு பெற்றான். அவன் மிகப் பெரிய தொழிலதிபர். அவன் எனது அறிவுரையின் பேரில் ஓய்வு பெற்றான். நான் அவனிடம், உன்னிடம் ஏகப்பட்ட செல்வம் உள்ளது, உனக்கு மகன் இல்லை. இரண்டு பெண்கள் மட்டும்தான். அவர்களையும் பணக்கார இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாய். இப்போது ஏன் தேவையில்லாமல் இந்த தொழில், வருமான வரி, இது அது என்று எல்லா கவலைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறாய். எல்லாவற்றையும் மூடிவிடு.
உன்னிடம் போதுமான அளவு செல்வம் இருக்கிறது. நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் இது போதும். என்றேன்.

அவன் அது உண்மை தான். ஆனால் உண்மையான பிரச்னை தொழிலல்ல. நான் எனது
மனைவியுடன் தனித்து விடப்படுவேன் என்பதுதான் உண்மையான பிரச்னை.
நான் இப்போதே என் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஆனால் நீங்கள் வந்து
எங்களுடன் வசிக்க வேண்டும் என்றான்.

நான், இது வித்தியாசமாக இருக்கிறதே. நீ
ஓய்வு பெறுகிறாயா அல்லது நான் ஓய்வு பெறுகிறேனா என்றேன்.

அவன் இதுதான் நிபந்தனை. நான் இந்த பிரச்னைகளை விரும்புகிறேன் என்றா
நீங்கள் நினைக்கிறீர்கள் இதை என் மனைவியிடமிருந்து
தப்பிக்கத்தான் செய்கிறேன் என்றான்.

அவனது மனைவி ஒரு சமுக சேவகி. அவள் ஒரு அனாதை ஆசிரமம், பிச்சைக்காரர்களுக்கான ஆஸ்பத்திரி, ஒரு விதவைகளுக்கான இல்லம் என
எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறாள். நான் மாலையில் அவளிடம், காலையிலிருந்து மாலை வரை நீங்கள்
செய்யும் எல்லா செயல்களையும் விரும்பி செய்கிறீர்களா என்று கேட்டேன்.

அவள், அனுபவிப்பதா இது ஒரு வகையான
தப்பித்தல், தனக்குத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்றாள்.

நான் ஏன் நீங்கள் உங்களையே இப்படி துன்புறுத்திக் கொள்கிறீர்கள்
என்று கேட்டேன்.

அவள் உங்களது நண்பரை தவிர்க்கத்தான். நாங்கள் இருவரும் தனித்திருந்தால்
அதுதான் வாழ்விலேயே மோசமான அனுபவம். என்றாள்.

மேலும் இது காதல் திருமணம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்
அல்ல. அவர்கள் முழு குடும்பத்தையும், சமுதாயத்தையும் எதிர்த்து
திருமணம் செய்து கொண்டனர். ஏனெனில் அவர்கள் வேறுபட்ட மதம், ஜாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களது அச்சு பதிவு இவன்தான் சரியான ஆண் என்றும், இவள்தான் சரியான பெண் என்றும் அறிகுறி காட்டியது. ஆனால் இது எல்லாமே தன்னுணர்வற்ற மனநிலையில் நிகழ்ந்தது.

இதனால்தான் குறிப்பிட்ட ஆண் அல்லது பெண்ணிடம்
உனக்கு ஏன் காதல் வந்தது என்ற கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடிவதில்லை. அது ஒரு உணர்வோடு எடுத்த முடிவல்ல. அது உனது தன்னுணர்வற்ற மனதில் பதிந்துள்ள அச்சுப்பதிவினால் எடுக்கப்பட்ட முடிவு.

அமியோ, இந்த முழு முயற்சியும் – உறவோ அல்லது ஆயிரத்தோரு
விஷயங்களில் மும்மரமாக இருப்பதோ – நீ தனிமையில் இருக்கிறாய் என்ற
கருத்தினால் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியே. இங்குதான் தியானம் செய்யும்
மனிதனும் சாதாரண மனிதனும் வேறுபடுகிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக சொல்ல விரும்புகிறேன்.

சாதாரண மனிதன் தனது தனிமையை மறக்க விரும்புகிறான். தியானிப்பவன் மேலும்
மேலும் தனது ஒருமையை அதிகம் தெரிந்து கொள்கிறான். அவன்
இந்த உலகத்தை விட்டு செல்கிறான். குகைகளுக்கு, மலைகளுக்கு, காட்டுக்கு ஒருமையில் இருப்பதற்காகவே போகிறான். தான் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். கூட்டத்தில் அது கஷ்டம். அங்கு பல இடைசல்கள் இருக்கும் தங்களது ஒருமையை தெரிந்து கொள்பவர் யாரோ அவர்களே மனித இனத்துக்கு சாத்தியப்படக் கூடிய அளவில்லா சந்தோஷத்தை அறிந்து கொள்பவர். ஏனெனில் உனது இருப்பே ஒரு வரம்தான்.

உனது ஒருமையுடன் நீ லயப்பட்டபின் நீ தொடர்பு கொள்ளலாம், அப்போது உனது உறவுகள் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், ஏனெனில் அவை பயத்தால் அமைந்தவை
அல்ல. உனது ஒருமையை கண்டு கொண்டபின் நீ உருவாக்கலாம், நீ எத்தனை விஷயங்களை விரும்புகிறாயோ அத்தனை விஷயங்களிலும் ஈடுபடலாம், ஏனெனில் இந்த ஈடுபாடு உன்னிலிருந்து நீ தப்பி ஓடுவதாக இருக்காது. இப்போது அது உனது
வெளிப்பாடு. இப்போது அது உனது திறமையின் வெளிப்பாட்டுத் தோற்றம்.

அப்படிபட்ட மனிதன் மட்டுமே – அவன் ஒருவனாக வாழ்ந்தாலும் சரி, சமுதாயத்தில் இருந்தாலும் சரி, அவன் திருமணம் செய்து கொண்டாலும்
சரி, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, அது எந்த வித்தியாசத்தையும்
ஏற்படுத்தாது – எப்போதுமே ஆனந்தமாகவும் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பான். அவனது வாழ்வே ஒரு கானம், ஒரு நடனம், ஒரு மலர்தல், ஒரு மணம்தான். அவன் எதை செய்தாலும் அவன் தனது மணத்தை அதில் கொண்டு வருவான்.

அதனால் உனது ஒருமையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும்
அடிப்படையான விஷயம்.

இப்படி உன்னிடமிருந்து நீ தப்பிப்பது நீ கூட்டத்தலிருந்து கற்றுக் கொண்ட விஷயம். ஏனெனில் ஒவ்வொருவரும் தப்பிக்கிறார்கள். நீயும் தப்ப ஆரம்பிக்கிறாய். ஒவ்வொரு குழந்தையும் கூட்டத்தில் பிறக்கிறது, அவர்களை பார்த்து அதே போல போலியாக
செய்ய ஆரம்பிக்கிறது, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ
அதுவும் அதையே செய்ய ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் எந்த விதமான துயரமான நிலையில் இருக்கிறார்களோ அதுவும் அதே போன்ற துயர நிலைக்குள் விழுகிறான். இதுதான் வாழ்க்கை என்பது என அவன் நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் வாழ்க்கையை முழுமையாக தவற விட்டு விடுகிறான்.

அதனால் ஒருமையை தனிமை என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என நான் உனக்கு
நினைவூட்டுகிறேன். தனிமை என்பது ஆரோக்கியமற்றது, நோய் போன்றது. ஒருமை என்பது முற்றிலும் மிக ஆரோக்கியமானது.

நாம் எல்லோரும் ஒரேவிதமான தவறாக புரிந்து கொள்ளுதலை தொடர்ந்து செய்து
கொண்டே வந்திருக்கிறோம்.

வாழ்வின் அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டு பிடிக்க முதலாவதும் முக்கியமாகவும் செய்ய வேண்டிய முதல் படி தனது
ஒருமைக்குள் நுழைவதுதான் என்பதை எனது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான்
விரும்புகிறேன். அதுதான் உனது கோவில், அங்கேதான் உனது கடவுள் வசிக்கிறார், நீ இந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. நீ சந்திரனுக்கு செவ்வாய்க்கு …………என
போகலாம்.

நீ ஒருமுறை உன் இருப்பின் உள் மையத்திற்க்குள் நுழைந்துவிட்டால், உன்னால் உனது கண்களையே நம்ப முடியாது. நீ உன்னுள் அவ்வளவு மகிழ்ச்சியை, அவ்வளவு அன்பை, அவ்வளவு ஆசிகளை சுமந்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய
சொந்த புதையலிலிருந்தே தப்பி ஓடிக் கொண்டிருக்கிறாய்.

இந்த புதையலையும் இதன் குறையாத வளத்தையும் பற்றி தெரிந்து கொண்டு விட்டால் பின் நீ உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம். உருவாக்குதலிக்குள் நுழையலாம். நீ உனது அன்பை பகிர்ந்து கொள்ளுதலின் மூலம் மனிதர்களுக்கு உதவலாம், அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். நீ உனது அன்பின்
மூலம் அவர்களுக்கு ஒரு மதிப்பு கொடுக்கிறாய், நீ அவர்களது மரியாதையை அழிப்பதில்லை. எந்த முயற்சியும் இல்லாமல் மற்றவர்கள் தங்களது சொந்த புதையலை கண்டுகொள்ள ஆதாரமாக நீ மாறுகிறாய். நீ என்ன உருவாக்கினாலும், நீ எதை செய்தாலும், நீ உன்னுடைய மௌனத்தை, அமைதியை, சாந்தத்தை, வாழ்த்துக்களை சாத்தியப்படும் எல்லாவற்றிலும் பரப்புவாய்.

ஆனால் இந்த அடிப்படையான விஷயம் எந்த குடும்பத்தாலும், எந்த சமுதாயத்தாலும், எந்த பல்கலைகழகத்தாலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மக்கள் துயரத்திலேயே வாழ்ந்து அதற்கு பழக்கப்பட்டு போய் விடுகிறார்கள். எல்லோரும் துன்ப்படுவதால் நீ துயரப்படுவது பெரிதாக தெரிவதில்லை. நீ விதிவிலக்காக இருக்க முடியாது என தோன்றி விடுகிறது.

ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன். நீ விதி விலக்காக இருக்க முடியும். நீ
அதற்கான சரியான முயற்சியை எடுக்க வில்லை, அவ்வளவுதான்.

Source : THE GOLDEN FUTURE CHEPTER # 6 Q # 1