ஓஷோ உணவருந்துதல் பற்றி கூறியிருப்பது என்ன
என்று ஒருவர் கேட்டிருந்தார், அதற்கான பதில் இந்த வார கேள்வி பதிலில் வருகிறது.  

1.

ஒரு குழந்தையின் உணவுக்கான முதல் அனுபவமும்
அன்புக்கான முதல் அனுபவமும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை, அதனால்தான் இந்த
பிரச்னை எழுகிறது. அவன் தாயின் மார்பகத்திலிருந்துதான் உணவையும் அன்பையும்
பெறுகிறான். ஒரு குழந்தை அன்பை பெறும்போது அவன் பால் குடிப்பதைப் பற்றி அவ்வளவாக
கவலைப்படுவதில்லை, தாய் அவனை குடிக்கச் செய்கிறாள்.

ஆனால் குழந்தை அன்பை பெறாத போது அவன் மார்பகத்தை
விட்டு நகருவதில்லை, ஏனெனில் அவன் எதிர்காலத்தைக் கண்டு பயப்படுகிறான். அவனால்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான், ஏனெனில் நாளை அம்மா கிடைப்பாள் என்பது
நிச்சயமில்லை. 

குழந்தைக்கு அன்பு கிடைக்கும்போது அவன்
பாதுகாப்பாக உணர்கிறான். அவன் கவலைப்படுவதில்லை. எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ
அப்போதெல்லாம் அங்கே அம்மா இருப்பாள். அவன் அவளது அன்பை நம்பலாம். ஆனால் தாய்
அன்பு செய்யாதபோது குழந்தையால் நம்பிக்கையுணர்வு கொள்ள முடிவதில்லை. அப்போது
அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான்.

அவன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறான்.

மேலும் இதுதான் சூழ்நிலை….. ஏழை குடும்பத்தில்
உள்ள குழந்தைகள் வயிறு பெரிதாக இருப்பதை நீ காணலாம், ஏனெனில் அங்கே உணவு
பற்றாக்குறை அதனால் எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் தங்கள்
வயிற்றை நிரப்பிக் கொள்வர். செல்வந்தர் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வயிறு
சிறிதாக இருப்பதை நீ காணலாம். இது நம்ப முடியாததாக தோன்றும், ஏனெனில் வறுமையில்
வாடும் ஏழை மக்களுக்கு அவர்களது முழு உடலும் மெலிந்து இருந்தாலும் அவர்களது வயிறு
மட்டும் பெரிதாக இருக்கும். அது சரியாக தோன்ற வில்லை, கணக்குப்படி சரியாக
தோன்றவில்லை. 

அவர்கள் வறுமையில் வாடும்போது எப்படி
அவர்களுக்கு வயிறு அவ்வளவு பெரிது இருக்கும் ஏனெனில் அவர்கள் பட்டினி கிடப்பதால்
நாளையை பற்றி அவர்களால் நம்ப முடியாது. அதனால் என்ன கிடைத்தாலும், கிடைப்பது
எதுவாக இருந்தாலும் அவர்கள் வயிற்றில் அடைத்துக் கொள்கின்றனர். அவர்களது வயிறுதான்
அவர்களது சேமிப்புகிடங்கு.

மேலும் ஒரு குழந்தைக்கு அன்பு கிடைக்க
வில்லையென்றால் அது உணவில் நாட்டம் கொள்கிறது. அதற்கு அன்பு கிடைக்கும்போது அதற்கு
உணவில் ஆர்வம் இருக்காது அல்லது இயல்பாக எவ்வளவு ஆர்வம் இருக்குமோ – உடலுக்கு
தேவையான அளவு உணவு பெறுவதில் – அவ்வளவுதான் இருக்கும். 

இதுதான் உனக்கும் நிகழ்ந்துள்ளது. நீ உனது அன்பு
சக்தியை எந்த விதத்திலோ அடைத்துவிட்டாய். அந்த அடைக்கப்பட்ட அன்பு சக்திதான்
உணவில் ஆர்வமாக வெளிப்படுகிறது. நீ இதை மாற்ற விரும்பினால் ஒரு சிறிதளவு அன்பில்
தளர வேண்டும். நீ இன்னும் சிறிதளவு அன்பானவனாக மாற வேண்டும். உனது உடலை அன்பு செய்
– அதிலிருந்து தொடங்கு. உன் உடலை நீ அனுபவி. அது ஒரு அழகான விஷயம், அது ஒரு பரிசு.
ஆடு, பாடு, உனது உடலை தொடு, உனது உடலை உணரு.

பிரச்னை என்னவென்றால் நீ உனது உடலை விரும்ப
வில்லையென்றால் வேறு யாரும் உடலை விரும்புவதை நீ அனுமதிக்கமாட்டாய். உன்னை
விரும்பும் ஒருவர் உனக்கு முட்டாளாக, மடையனாக, கிறுக்கனாக தோன்றுவார். ஏனெனில்
நீயே உனது உடலை நேசிக்காதபோது அவர் எதைக் கண்டார் என்றே உனக்குத் தோன்றும். நீ
எதையும் காணமாட்டாய். உனது உடலின் அழகை நீ காணாதவரை நீ வேறுயாருடைய நேசிப்பையும்
நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய். அவர் உன்னை நேசிப்பதே உனக்கு அவர் மடையன் என்பதைக்
காட்டுவதாகத் தோன்றும், வேறு எதுவும் தெரியாது. அதனால் உனது உடலை நேசி.

கைகளை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக்
கொள்ளவும், அன்பாய் இருக்கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தவற விடாதே.
நீ அன்பாய் இருக்க ஆரம்பித்தவுடன் உன் உணவு பிரச்னை தானாகவே தீர்வதை கண்டு நீ
ஆச்சரியப்படுவாய். அன்பினுள் இருப்பது மிகவும் அருமையான அனுபவம், உணவை அடைத்துக்
கொள்வது மிக மோசமான அனுபவம். உணவு அருமையானதல்ல என்பதல்ல, உன்னால் எவ்வளவு
எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் அது மிகவும்
அருமையானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பின் வாந்தி வந்துவிடும்.

அன்பைப் பற்றிய ஒரு விஷயம் மிகவும் சிறப்பானது,
அது அன்பு ஒருபோதும் அளவுக்கு அதிகமாக என்றாகாது. யாராலும் அளவுக்கு அதிகமாக அன்பு
செய்ய முடியாது, யாராலும். அதற்கு எல்லையே இல்லை. ஏனெனில் நீ சாப்பிடும்போது, நீ
விஷயங்களை உள்ளே திணிக்கிறாய். நீ அன்பு செய்யும்போது, நீ பகிர்ந்து கொள்கிறாய்,
நீ கொடுக்கிறாய், அது சுமையை குறைக்கும் ஒரு செயல். மேலும் நீ கொடுக்கும் அளவு
உனது சக்தி பாய்ந்தோட ஆரம்பிக்கிறது. நீ ஒரு நதியாகிறாய், ஒரு தேங்கிய குளமாக
இருப்பதில்லை.

God’s Got a thing About You Ch. # 14

2.

நீ மேற்புறத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்,
ஆனால் கீழே வேர்கள் மாற்றமடையாத வரை எதுவும் மாறாது. அதனால் வெளிப்புறத்தை
பொறுத்தவரை நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதை பற்றிய விழிப்புணர்வு
கொள்வது மட்டுமே. மேற்புறத்திலிருந்து வேர்களுக்கு நகரு, வேர்களை கண்டுபிடி – ஏன்
பதட்டமாயிருக்கிறாய், ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறார். அதை
நிறுத்தமுடியும். அதிகமாக சாப்பிடாமல் இருக்குமாறு நீ உன்னை
கட்டாயப்படுத்தமுடியும். ஆனால் ஏன் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறாய், ஏன்,
ஏனெனில் அது உடலின் தேவை அல்ல, எங்கோ மனது அதில் தலையிடுகிறது. மனதைதான் சீர்
செய்ய வேண்டும், அது உடலின் பிரச்னை அல்ல. நீ ஏன் உனக்குள் திணித்துக் கொள்கிறாய்.

உணவின் மீது உள்ள அதீத ஈடுபாடு அன்பு தேவை
என்பதையே காட்டுகிறது. நீ நேசிக்கப்பட வில்லையென்றால் நீ அதிகம் சாப்பிடுவாய். நீ
நேசிக்கப்பட்டால், நீ நேசித்தால் நீ குறைவாகவே சாப்பிடுவாய். யாராவது உன்னை
நேசிக்கும் சமயத்தில் உன்னால் அதிகமாக சாப்பிடமுடியாது. அன்பு உன்னை நிறைவு
செய்கிறது, நீ வெறுமையாக உணர்வதில்லை. அன்பு இல்லையென்றால் நீ வெறுமையாக
உணர்கிறாய், ஏதாவது இட்டு அதை நிரப்ப வேண்டும், எனவே நீ உணவை திணிக்கிறாய்.

இதற்கு காரணங்கள், அடிப்படையான காரணங்கள்
இருக்கின்றன. ஏனெனில் ஒரு குழந்தை அன்பையும் உணவையும் சேர்த்தே எதிர் கொள்கிறது.
அதே மார்பகத்திலிருந்துதான், அதே தாயிடமிருந்துதான் அன்பு உணவு இரண்டையும்
பெறுகிறது – உணவும் அன்பும் இணைகிறது. தாய் நேசிக்கும்போது குழந்தை ஒருபோதும் அதிக
அளவு பால் குடிப்பதில்லை. அதற்கு தேவையுமில்லை. அவன் அனபினால்
பாதுகாக்கப்படுகிறான். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அம்மா அங்கிருப்பாள்,
பால் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் பாதுகாப்பாய் உணர்கிறான்.
ஆனால் தாய் நேசிக்காதபோது அவன் பாதுகாப்பற்று உணர்கிறான். அவனுக்கு பசிக்கும்போது
பால் கிடைக்குமா கிடைக்காதா, உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று அவனுக்கு தெரியாது.
ஏனெனில் அங்கு அன்பில்லை. அதனால் அவன் அதிகம் சாப்பிடுகிறான். இது தொடர்கிறது. இது
தன்னுணர்வற்றதாக வேரினுள் பதிகிறது.

அதனால் நீ உனது உணவை மாற்றிக் கொண்டே போகலாம், –
இதை சாப்பிடலாம், அதை சாப்பிடலாம், இதை சாப்பிடாமல் இருக்கலாம் – ஆனால் இது எந்த
மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. ஏனெனில் இது வேரில் ஆழமாக உள்ளதொரு விஷயம்.
பின் நீ உணவை திணித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, வேறு எதையோ திணித்துக் கொள்ள
ஆரம்பிக்கிறாய். இதில் பல வழிகள் உள்ளன. நீ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பணத்தை
சேர்க்க ஆரம்பிக்கிறாய். இப்போது மறுபடியும் நீ வேறு ஏதோ ஒன்றால்
நிரப்பப்படுகிறாய். பின் நீ பணத்தை சேகரிக்க ஆரம்பிக்கிறாய்.

Vigyan Bhairav Tantra,  Vol  2 Ch. # 10