முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா
நான் வாழ்க்கையை வாழும்போது அதில் மிகவும் ஈடுபட்டு அதை அனுபவிப்பதால் பல சமயங்களில் தன்னுணர்வின்றி இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். தன்னுணர்வோடு இருப்பதற்கு எனக்கு தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது என்றாலும்கூட நான் ஒவ்வொரு கணமும் முயற்சி செய்து தன்னுணர்வை கொண்டுவர வேண்டுமா?
மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.
ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.
ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்களுக்காகவும் நான் பேசியாக வேண்டும்.
அவர்களுக்குத்தான் நான், முழுமையான தீவிரத்தோடு வாழு, முழு முயற்சியோடு இரு என்று சொல்கிறேன். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.
உன்னைப் பொறுத்தவரை, அது சுலபமான விஷயமல்ல. நீ உனக்கு எதிராகவே பெருமுயற்சி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வது நீ ஏற்கனவே உணர்ந்திருக்கும் அமைதி மற்றும் மௌனத்தின் முழு அழகையும் கெடுத்து விடும்.
நீ தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் உனது வழி. ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அது என்னவென்று உணர்ந்து கொள். பிறகு திரும்பி பார்க்காதே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே.
Source : BEYOND ENLIGHTMENT