ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 3
ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று
கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 3-வது மாதத் தொடர்ச்சி.
மூன்றாவது பள்ளத்தாக்கு தடுப்பு சுவர் தடை பள்ளதாக்கு என அழைக்கப்படுகிறது.
ஒருமுறை மனசாட்சி எழுந்துவிட்டால் இப்போது உன்னால்
அங்கே எத்தனை தடுப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்க இயலும். எத்தனை தடைகள்
இருக்கின்றன என்பதை பார்க்க உன்னிடம் இப்போது பார்வை உள்ளது. சுவர்களுக்கு அப்பால்
சுவர்களாக உள்ளன. கதவுகளும் இருக்கின்றன, ஆனால் அவை வெகு சிலவே உள்ளன.
அவையும் எங்கோ தொலைவில் இருக்கின்றன. உன்னால் எல்லா விதமான தடுப்பு சுவர்களையும், தடைகளையும்
பார்க்க இயலும். அல்ஹசலாலி நான்கு இருப்பதாக கூறுகிறார்.
முதலாவது தூண்டும் இந்த உலகம் – பொருட்களின் உலகம் – இது கவர்ச்சிகரமானது. காமமே உருவானது. தூண்டும் இந்த உலகத்தை கடந்து போக வேண்டுமென்று உலகிலுள்ள அனைத்து மதங்களும் ஏன் கூறுகின்றன.? ஏனெனில் நீ இந்த உலகத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டால், நீ இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்காக மிகவும்
ஆசைப்பட்டால், நீ கடவுளை அடைவதற்கு ஆசைப்படுவதற்கு போதுமான அளவு சக்தி
இருக்காது. உனது ஆசை பொருட்களின் மீது வீணடிக்கப்படுகிறது. ஒரு பெரிய
வீடு வேண்டும், வங்கியில் அதிக பணம் இருப்பு இருக்கவேண்டும், உலகில் அதிகார பலம் வேண்டும், கெளரவம் வேண்டும் என ஆசைப்படும் ஒரு மனிதன் தனது எல்லா ஆசைகளையும் இந்த
உலகத்திலேயே முதலீடு செய்கிறான், இந்த உலகின் மீது ஆசைப்படுகிறான். கடவுளை தேட ஆசை எதுவும்
அவனிடம் மிச்சமில்லை. பொருட்கள் அவையளவில் எதுவும் மோசமானவையல்ல.
சூபிகள் பொருட்களுக்கு எதிரியல்ல. அவர்கள் பொருட்கள் அவையளவில் நல்லவை
என்றும் ஆனால் கடவுளை தேடும் ஒருவருக்கு அறுதி உண்மை, சத்தியம் கிடைக்காமல் போகக்கூடும், அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி தேவைப்படும், உன்னிடம் குறிப்பிட்ட விதமான குணாதிசயம்
இருக்கவேண்டும் என கூறுகின்றனர். முழு சக்தியும் ஒரே ஆசையில்
செலுத்தப்படவேண்டும். எல்லா ஆசைகளும் ஒரே ஆசையாக வேண்டும்,
அப்போதுதான் கடவுளை அடையும் பாதை வழி செல்லமுடியும், அப்போதுதான் நீ இந்த மூன்றாவது பள்ளதாக்கை கடக்கமுடியும். சாதாரணமாக நம்மிடம் பல ஆசைகள் உண்டு. பல சிற்றாறுகள், ஓடைகள், நதிகள், ஒன்றிணைந்து பெரிய கங்கை நதியாக மாறுவது போல எவனுடைய மற்ற எல்லா ஆசைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆசையாக மாறுகிறதோ, எவனிடம் ஒரே ஒரு ஆசை- கடவுளை சேரும் ஆசை மட்டுமே இருக்கிறதோ அவன்தான் ஆன்மீக வாதி. ஆன்மீக வாதியின் அனைத்து ஆசைகளும் ஒரே ஆசையாக மாறிவிடுகின்றன. அவன் கடவுளுக்கு ஆசைப்படுகிறான், அவன் கடந்து செல்ல ஆசைப்படுகிறான். அதனால் முதலாவது கவர்ந்திழுக்கும் இந்த உலகம்,
இரண்டாவது மனிதர்கள் – மனிதர்களுடன் ஏற்படும் பாசம். சூபிகள் மனிதர்களுக்கு எதிரானவர்களல்ல என்று மறுபடியும் கூறுகிறேன். அவர்கள் மனிதர்கள் மீது பாசம் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
இல்லாவிடில் அந்த பாசமே ஒரு தடையாக, கடவுளை தேட ஒரு தடுப்பு சுவராக மாறிவிடும். உனது கணவனுடனோ, மனைவியுடனோ, இரு, உனது குழந்தைகளுடன் இரு, உனது நண்பர்களுடன் இரு,
ஆனால் நாம் அனைவரும் இங்கே அன்னியர்கள்தான் என்பதை நினைவில் கொள். நாம் சேர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒரு செயல்தான், விபத்துதான், நாம் பயணிகள், நாம் செல்லும் பாதையில் சந்திக்கிறோம். சில நாட்களுக்கு நாம்
சேர்ந்திருப்போம். அதற்காக நன்றியுணர்வு கொள். ஆனால் கூடிய விரைவில் பாதைகள் பிரியும். உனது
மனைவி இறந்துவிடுவாள், அவள் அவள் வழியே சென்றுவிடுவாள், அது எங்கே என்றே உனக்கு தெரியாது, அல்லது உனது மனைவி வேறு யாருடனாவது காதலில் விழுந்துவிடுவாள், உங்களது பாதைகள் வேறாகிவிடும். அல்லது நீ வேறு யார் மீதாவது காதல் கொண்டுவிடுவாய் அல்லது உனது மகன் வளர்ந்துவிடுவான் அவன் தனது வாழ்வை முடிவு செய்யும் உரிமையை தன் கையில் எடுத்துகொண்டு உன்னிடமிருந்து விலகி சென்றுவிடுவான். ஒவ்வொரு மகனும் பெற்றோரிடமிருந்து சென்றே ஆக வேண்டும். நாம் இந்த பாதையில் சில தினங்களுக்கு
மட்டுமே சேர்ந்து இருப்போம். நாம் சேர்ந்திருப்பது ஒரு விபத்து போல தற்செயலானது. அது எப்போதும்
நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. அதனால் மனிதர்களுடன் இரு, அன்பாக இரு, கருணையோடு இரு ஆனால் பாசம் கொண்டுவிடாதே.- இல்லாவிடில் உனது பாசம் நீ கடந்து செல்ல உன்னை அனுமதிக்காது. அதனால் இரண்டாவது விஷயம் பாசம், மனிதர்களுக்கிடையேயான பாசம்.
அல்ஹசலாலி மூன்றாவதாக கூறுவது சைத்தான், நான்காவது அகங்காரம். சைத்தான் என அவர் குறிப்பிடுவது மனதைதான் – நீ கடந்த காலத்தை பதிவு செய்து சேர்த்து வைத்திருப்பதுதான் மனது எனப்படுவது. மனசாட்சி
பிறந்துவிட்டாலும், முன்னெப்போதையும் விட அதிக மனத்தெளிவுடன் நீ இருந்தாலும், மனதின் இயந்திரத்தனமான செயல்பாடு அங்கே அருகிலேயே காத்துகொண்டிருக்கும். அது இன்னும் சிறிது காலம் அங்கே இருக்கும். அது உன்னுடன் அதிக நாட்கள் இருந்துவிட்டதால் திடீரென அது உன்னை விட்டு போய்விடமுடியாது. அதற்கு காலமெடுக்கும். அது அங்கே காத்திருக்கும், கவனித்துகொண்டிருக்கும்- வாய்ப்பு ஏற்பட்டால் அது உடனே உன்மேல் குதித்து உன்னை தன்வசப்படுத்திக்கொண்டுவிடும். அது உன் எஜமானனாக இருந்திருக்கிறது, நீ அதன் அடிமை போல
செயல்பட்டுகொண்டிருந்திருக்கிறாய். திடீரென நீ எஜமானனாகிவிட்டதை
மனதால் ஒத்துகொள்ள முடியாது, அதற்கு காலமெடுக்கும். மனம் ஒரு இயந்திரம். அது எப்போதும்
அங்கிருக்கும். ஒரு தேடுபவனுக்கு மனம் ஒரு சைத்தான். சைத்தானை பற்றிய கதைகள்
அனைத்துமே மனதைப்பற்றிய கதைகள்தான். டெவில் அல்லது சைத்தான் – சுபிகள் டெவில் என்று அழைத்தனர்- டெவில் என்பது மனதின் உருவக பெயர்தான்.
சைத்தான் ஜீஸஸை ஆசை காட்டியது எனும்போது ஏதாவது அங்கே வெளியே
நின்றுகொண்டிருந்தது என்றா நினைக்கிறாய்.? மடையனாக இருக்காதே. அங்கே எதுவும் வெளியே
இல்லை. அந்த தூண்டுதல் ஜீஸஸின் சொந்த மனதிலிருந்துதான்
வந்தது. இப்போது உனக்கு அளவிடற்கரிய சக்தி வந்துவிட்டது நீ ஏன் மற்ற
விஷயங்களை பற்றி கவலைப்படுகிறாய்.? நீ ஏன் இந்த முழு உலகத்தின் அரசனாக கூடாது.? நீ அதை அடையலாம். அதற்கு உனக்கு சக்தியிருக்கிறது. நீ இந்த முழு உலகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம், உனக்கு ஏகப்பட்ட சக்தி இருக்கிறது. நீ ஆன்மீக ரீதியாக உயர்ந்து நிற்கிறாய். உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுவிட்டன. நீ
ஆசைப்படும் பொருள், புகழ், கெளரவம் அனைத்தையும் நீ அடையலாம். ஏன் கடவுளைப்பற்றியும்
மததைப்பற்றியும் கவலைப்படுகிறாய்.? இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள் என்று மனம் தூண்டுகிறது.
ஜீஸஸ் எனது வழிக்கு வராதே போய்விடு என்று கூறுகிறார். அவர் வெளியே எங்கோ
உள்ள டெவிலிடம் பேசவில்லை. அவர் தனது மனதிடம்தான் தயவுசெய்து என் வழியில் குறுக்கே வராதே. நீ
கொண்டுள்ள ஆசைகளை பற்றி எனக்கு கவலையில்லை, நீ வைத்துள்ள கனவுத் திட்டங்களைப் பற்றி
எனக்கு அக்கறை கிடையாது, நான் முற்றிலும் வேறுவிதமான பாதையில் பயணம்
சென்றுகொண்டிருக்கிறேன். உனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, நீ பேசாமல் இரு, என்று கூறுகிறார்.
நான்காவது அகங்காரம். தேடும் பாதையில் செல்பவனுக்கு இருக்கக் கூடிய
மிகப் பெரிய தடுப்புச் சுவர். சிறிதளவு தன்ணுனர்வு பெறும்போது, உனது மனசாட்சி எழும்போது, தடுப்பு சுவர் தடைகளை உன்னால் பார்க்க முடியும் போது எங்கிருந்தோ ஒரு ஆணவம் எழுந்து, உன்னை தன்வசப்படுத்திகொள்கிறது. நான் ஒரு
துறவியாக, ஒரு சித்தராகிவிட்டேன். நான் இனிமேலும் சாதாரணமானவன் அல்ல, நான் சிறப்பானவன் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது- அங்கே நான் சிறப்பானவன் என்பதுதான் பிரச்சனை. அது உண்மைதான். அதனால் ஆணவம் அதை
உறுதி செய்கிறது. இதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஏனெனில் ஆணவம் முட்டாள்தனமாக எதையும்
பேசவில்லை. அது தெரிந்தே சொல்கிறது. அது அப்படித்தான் என்று நீயும்
எடுத்துக்கொள்கிறாய், ஆனால் நீ ஆணவத்துடன் உன்னை அடையாளப்படுத்திகொண்டுவிட்டால், நான் சிறப்பானவன் என்பதுடன் உன்னை கோர்த்துக் கொண்டுவிட்டால், பின் நீ எப்போதும் மூன்றாவது பள்ளத்தாக்கிலேயே இருக்கவேண்டியிருக்கும் என்பதால் அதில் நீ கவனமாக இருக்கவேண்டும். நீ நான்காவது பள்ளத்தாக்கை சென்றடையவே முடியாது,
மேலும் நான்காவது பள்ளத்தாக்கு அதிகமான சிகரங்களையும் மேலும்
அதிகமான மலர்களையும் அதிக சந்தோஷங்களையும் தர வல்லது.- நீ
இந்தப் பள்ளத்தாக்கை தவறவிட்டுவிடுவாய். இதுதான் சித்திகள்- ஆன்மீக சக்திகள்- மிகவும் தடையான
விஷயங்களாக மாறக்கூடிய இடம். இந்தத் தடைகளோடு சண்டையிட ஆரம்பிப்பது
இதன் எதிர்மறையான பாகமாகும். நீ சண்டையிட ஆரம்பித்தால் நீ பள்ளத்தாக்கிலேயே
தொலைந்துபோய்விடுவாய். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிடையானதை உருவாக்காதே.
புரிந்துகொள்ளுதலே போதுமானது. சண்டையிடுதல் என்றாலே அமுக்கி வைத்தல்தான்.
நீ உனது ஆணவத்தை, மக்களுடன் உனக்கிருக்கும் பாசத்தை, பொருட்கள் மீது உனக்கிருக்கும் காதலை, உனது மனதை, உனது சைத்தானை, அடக்கி அமுக்கி வைக்கலாம், ஆனால் அந்த அடக்கி வைத்தல் எப்போதுமே அங்கிருக்கும். உன்னால் நான்காவது பள்ளதாக்கிற்க்குள் நுழையவே முடியாது. அடக்கி வைத்திருப்பது என்பது
யாரிடம் இல்லையோ அவர்கள் மட்டுமே நான்காவது பள்ளதாக்கினுள் நுழையமுடியும்.
அதனால் அடக்கி வைக்கவோ, அமுக்கி வைக்கவோ செய்யாதே. நேர்மறையானது என்னவென்றால் சவாலை சந்தி – ஆணவம் உனக்கு சவால் விடுகிறது. அதை உனது எதிரியாக பாவிக்காதே. அதற்கு பதிலாக கடந்து செல்வதற்கு ஏற்படும் ஒரு சவாலாக எடுத்துக் கொள். அதனுடன் சண்டையிடாதே. அதை புரிந்துகொள்.
அதனுள் ஆழ்ந்து பார். அதன் நுட்பம் என்னவென்று பார். எப்படி அது செயல்படுகிறது, எப்படி இந்த புதுவிதமான ஆணவம் உன்னுள் வந்தது.? எப்படி மனம் உன்னுடன் விளையாடிக் கொண்டே இருக்கிறது ?
நீ எப்படி மனிதர்களுடன் பாசம் கொள்கிறாய்.? எப்படி பொருட்கள் மீது பிணைப்பு கொள்கிறாய் ? என்று பார்.
ஆத்திரப்படாமல் பொறுமையாக அது எப்படி வேலை செய்கிறது என்று
பார். எந்த வகையிலாவது நீ ஆத்திரப்பட்டால் நீ சிக்கிகொண்டாய். எந்த வகையிலாவது உணர்ச்சிவசப்பட்டால் நீ சிக்கிக்கொண்டாய். இந்த இரண்டு விஷயங்களும் மிக எளிதாக நடக்ககூடியவை. மக்களுக்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். நண்பர்களாக இருப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும், அல்லது எதிரிகளாக இருக்க தெரியும். சாதாரணமாக இப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும். மூன்றாவது விஷயம்தான் உதவும். கவனமாக இரு, சாட்சியாக இரு. எதிரிடையாகவோ நட்பாகவோ இருக்காதே. விலகி இரு, தொட்டும் தொடாமலும் இரு. அது அங்கிருப்பதை மட்டும் பார், ஆதரவாகவோ எதிராகவோ எந்த உணர்வுபூர்வ அணுகுமுறையை நீ எடுத்தாலும் அந்த உணர்வே ஒரு தளையாக மாறிவிடும். உணர்வானது என்றாலே நீ பிணைக்கபட்டிருக்கிறாய். நினைவில்
கொள். நீ எந்த அளவு நண்பர்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறாயோ அந்த
அளவு எதிரிகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறாய். உனது எதிரி இறந்துவிட்டால் உனது நண்பன்
இறந்துவிட்டால் இழப்பை உணரும் அதே அளவு இழப்பை அங்கேயும் உணர்வாய். – சில நேரங்களில் அதைவிட அதிகமாக கூட. ஏனெனில் எதிரி உனது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தான். அவனுடன் சண்டையிடுவதன் மூலம் நீ ஒரு விஷயத்தை அனுபவித்தாய். இப்போது அவன் அங்கில்லை. அவனுடன் சண்டையிடுவதன் மூலம்
திருப்தியை அனுபவித்த உனது ஆணவம் திரும்பவும் திருப்தியை அனுபவிக்கப் போவதேயில்லை. நீ ஒரு
புது எதிரியை தேடி அடையவேண்டும். அதனால் நண்பர்களையோ பகைவர்களையோ
உருவாக்காதே. வெறுமனே பார். விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையோடு இரு. அதுதான் சாதகமான விஷயம்.
ஆணவம் என்பது என்னவென்று ஆழமாக அறிந்து புரிந்து கொள், சந்தோஷத்தை அறிந்துகொள், காமம் என்றால் என்னவென்று புரிந்துகொள், மகிழ்ச்சியை அறிந்துகொள்.
Source – The Secret of Secrets Vol 2 che #1