ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள்– பகுதி 2 

ஓஷோ,
மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று
கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 2-வது மாதத் தொடர்ச்சி.

இரண்டாவது பள்ளத்தாக்கு நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

நீ யார் என்பதை நீ பார்க்க ஆரம்பித்தால், அங்கே மிக ஆழ்ந்ததொரு
நினைத்துவருந்துதல் எழுகிறது. நீ செய்த தவறுகளினாலும், நீ செய்திருக்க வேண்டிய
செயல்களாலும், அவசியம் இல்லாமல் செய்த செயல்களாலும் நீ நினைத்துவருந்த
ஆரம்பிக்கிறாய். அதனால் தன்னுணர்வோடு கூடிய ஒரு சிகரம் அங்கே எழுகிறது. – ஆனால்
அதோடு திடீரென மனசாட்சியும் எழுகிறது. நினைவில் கொள், உன்னிடம் இப்போது உள்ள
மனசாட்சி உண்மையானது அல்ல. அது போலியானது. அது சமுதாயத்தினால் உனக்கு
கொடுக்கப்பட்டது.

மக்கள் எது நல்லது எது கெட்டது என்றும் எது முறையானது எது முறையற்றது என்றும்
உனக்கு சொல்லியிருக்கிறார்கள். எது நெறிமுறை என்றோ எது நெறிமுறையற்றது என்றோ
உனக்குத் தெரியாது. ஆனால் முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் எது தவறு எது சரி என்பது
உனக்கு தெரியவரும். அப்போது நீ செய்த தவறுகள் அனைத்தும் உனக்கு புரியும் – எத்தனை
பேரை காயப்படுத்தியிருக்கிறாய், மற்றவர்களிடம் எவ்வளவு குரூரமாக நடந்திருக்கிறாய்,
உன்னிடமே நீ எவ்வளவு பொறாமை, கோபம், ஆக்ரோஷம், வன்முறை, அழிக்கும் சக்தி கொண்டவனாக
இதுவரை இருந்திருக்கிறாய் – இவையனைத்தும் உன் பார்வைக்கு வருகின்றன.

தன்னுணர்வடையும்போது மனசாட்சி எழுவது அந்த செயலுடன் கூடிய விளைவு.

நீ கொண்டுள்ள மனசாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – நீ
கொண்டுள்ள மனசாட்சி கடன் வாங்கப்பட்டது. நீ அதை வைத்துக் கொள்ளலாம், அது உன்னை
காயப்படுத்துவதில்லை, அது உனக்கு வலி தந்து அதன் மூலம் உன்னை நிலைமாற்றம் அடைய
செய்வதில்லை. உனக்கு இது இது சரியென்று தெரியும், ஆனாலும் நீ தவறானதையே செய்து
கொண்டு போகிறாய், நீ செய்ய விரும்புவது எதுவோ அதையே செய்கிறாய். இதுதான் சரியென்று
உனக்கு தெரிந்த உன்னுடைய அறிவு உன்னுள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.
உனக்கு கோப்படுவது தவறென்று தெரியும், ஆனால் நீ கோபமாகவேதான் இருக்கிறாய். ஒரு
முனையில் கோபம் தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் எந்த வித உறுத்தலும்
இல்லாமல் நீ கோபமாகவே இருக்கிறாய். ஒரு முனையில் பிடித்து வைத்துக் கொள்வது
தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் நீ பிடித்து வைத்துக் கொள்கிறாய் –
பொருட்களை மட்டுமல்லாமல் ஆட்களையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய். உனது மனைவி,
உனது கணவன், உனது குழந்தைகள் எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய் –
அவர்கள் ஏதோ பொருட்கள் போல, ஏதோ அவர்களை பிடித்து வைத்துக் கொள்ளலாம் போல. –
உன்னுடைய பிடித்து வைத்துக் கொள்வதின் மூலம் நீ அவர்களை அழிக்கிறாய், அதை தவறு
என்று தெரிந்தே செய்கிறாய்.

இந்த கடன் வாங்கப்பட்ட மனசாட்சி உனக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அது
உனக்கு ஒரு சுமையே. நீ முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் உனது சொந்த மனசாட்சி எழும்.
இப்போது உனக்கு எது தவறு என்பது மிக நன்றாகத் தெரியும், ஆதலால் சரியானதை மட்டுமே
செய்ய முடியும். இதுதான் சாக்ரடீஸ் கூறிய அறிவு தான் நற்குணம்

இப்போது இந்த நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கின் பாதகநிலை என்ன என்பதை
பார்ப்போம்……. கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி மிகவும் குற்ற உணர்ச்சி
கொள்வாய். இந்த தவறு செய்து விட்டோம், அந்த தவறு செய்து விட்டோம், மேலும் நீ ஆயிரக்கணக்கான
தவறுகளை செய்து விட்டாய். இங்கே நீ வெகு காலம் சுயஉணர்வின்றி இருந்து விட்டாய்
ஆதலால் செய்த தவறுகளை கணக்கெடுக்க ஆரம்பித்தால் அது அதீதமான அளவு வரும். அதனால்
குற்றஉணர்வு மிகக் கொண்டு வளர்வதற்கு பதிலாக நீ மிக ஆழ்ந்த இருளில் வீழ்ந்து
விடுவாய்.

குற்ற உணர்ச்சி கொண்டால் அதனால் நீ இயல்பிழந்து விடுவாய். கடந்த காலம் மிக
சுமையாக மாறி நீ இரண்டாவது பள்ளத்தாக்கிலேயே இருந்து விடுவாய். உன்னால் அதை கடக்க
முடியாது போய்விடும். கடந்த காலம் முக்கியமாகி விட்டால் நீ தொடர்ந்து அழுது
அரற்றி, தவறு செய்து விட்டேனே என்று நெஞ்சிலடித்துக் கொண்டு அழுவதை தவிர
வேறெதுவும் செய்ய இயலாது.

இதன் சாதகநிலையான செயல் என்னவென்றால் நீ எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும்.
கடந்த காலத்தை அல்ல. நீ தவறு செய்து விட்டாய்தான் ஆனால் நீ இதுவரை சுயஉணர்வின்றி
இருந்து விட்டாய் அதனால் தவறு நிகழ்ந்து விட்டது ஆதலால் குற்றஉணர்வு கொள்ள வேண்டிய
அவசியமில்லை. சுயஉணர்வின்றி இருக்கும்போது எப்படி ஒருவர் சரியானதை தேர்ந்தெடுத்து
செய்ய முடியும் நீ அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் – உனது கடந்த காலம்
முழுவதும் தவறானது – ஆனால் அது உன் நெஞ்சில் சுமையாகக் கூடாது. இதை குறித்துக்
கொள். இதை குறித்து கொள்வது நீ திரும்பவும் அதை செய்யாமல் இருக்க உதவும். அது
முடிந்து விட்ட ஒரு விஷயம். நீ பலரை பல வகைகளிலும் காயப்படுத்தி இருப்பதை எண்ணி
இப்போது வருத்தப்பட்டாலும் கூடவே சந்தோஷமாகவும் உணரலாம், ஏனெனில் இனி அதுபோல
நடக்கப்போவதில்லை. நீ குற்றஉணர்விலிருந்தும் கடந்தகாலத்திலிருந்தும்
விடுதலையடைந்துவிட்டாய். நீ அதையே நினைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை, நீ
எதிர்காலத்தைப் பற்றி, வருங்காலத்தைப்பற்றி அக்கறை கொள்ளலாம்.

இப்போது உன்னிடம் உனது சொந்த மனசாட்சி இருக்கிறது, இப்போது வருங்காலம் முழுமையாக
வேறுபட்டதாக, குணத்தில் மாறுபட்டதாக, முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கப்போகிறது.
நீ அந்த சாகசத்தால் மெய்சிலிர்க்கப்போகிறாய். இப்போது உனக்கே எது சரி, எது தவறென்ற
சொந்த புரிதல் இருப்பதால் தவறேதும் நிகழ வாய்ப்பே இல்லை. நீ அதை
கட்டுப்படுத்துவாய் என்பதல்ல, உன்னுடைய சொந்த மனசாட்சி எழும்போது அங்கே
கட்டுப்பாடோ, நெறிமுறையோ தேவைப்படாது. சரியானது இயல்பாகிவிடும். சரியானது
நிகழ்ந்துவிடும். அப்போது சரியானதுதான் இயல்பானது, இயல்பானதுதான் சரியானது.

உண்மையில் ஒருமுறை உனக்கு புரிதல் எழுந்து விட்டால் தவறானதை செய்ய நீ மிகமுயற்சி
எடுக்கவேண்டி வரும். அப்போதுகூட அது முழு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.

உன்னுடைய சொந்த புரிதல் அல்லாமல் சரியானதை செய்ய நீ முழுமுயற்சி எடுத்தாலும்
அது வெற்றி பெறாது. அதனால் இப்போது மிகவும் சிலிர்ப்போடு இருப்பாய். ஒருவர்
கடந்தகாலத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டாலும் அதை சுமக்க வேண்டியதில்லை. ஏனெனில்
கடந்தகாலம் முடிந்த ஒன்று. இதுதான் அதன் சாதகநிலை. 
நிலைமாற்றம் நிகழ்ந்துவிட்டதை ஒருவர் உணர வேண்டும். கடவுள் அருள்
கிடைத்து விட்டதை, உனது சொந்த புரிதல் உனக்கு நிகழ்ந்து விட்டதை உணர்ந்து கொள்ள
வேண்டும். இப்போது உன்னுடைய வாழ்க்கை ஒரு புதிய பரிமாணத்தில், ஒரு புதிய பாதையில்
செல்லும்.

இங்குதான் உண்மையான நெறிமுறை, நற்குணம், சீலம் பிறக்கிறது.

Source –  The Secret of Secrets   Vol 2  ch.  #1