சூன்யோ-வின் கட்டுரை

சூன்யோ லண்டனைச் சேர்ந்தவர். ஓஷோவின் பராமரிப்புக் குழுவில் 14 வருடம் ஓஷோவுடன் நெருங்கி வாழ்ந்தவர். 35 வருடங்களுக்கு மேலாக ஓஷோ தியானங்கள் செய்து வருபவர். தற்சமயம் ஓஷோ தியானங்களையும் விழிப்புணர்வு குழுக்களையும் பல்வேறு நாடுகளில் நடத்திவருகிறார். இவர் ஓஷோவின் முக்கிய செய்தியாக தான் நினைப்பதை பகிர்ந்து கொண்ட கட்டுரைப்பகுதி இது.

சாட்சிபாவம், கொண்டாட்டம், அன்பு மற்றும் விழிப்புணர்வு

ஓஷோவுடன் இருத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஒரு அனுபவம். அவரது செயல்பாட்டின் மூன்று பகுதிகள் எனக்கு முகவும் முக்கியமானவை – சாட்சிபாவம், பிறப்பையும் இறப்பையும் கொண்டாடுதல், மற்றும் அன்பும் விழிப்புணர்வும் ஒருசேர வளர்தல்.

சாட்சிபாவம்

எனக்கு சாட்சிபாவமென்பது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதை விழிப்போடு செய்வதிலிருந்து துவங்குகிறது. இது எளிமையானது, ஆனால் ஞாபத்தோடு இருப்பது சுலபமல்ல, திரும்பத் திரும்ப, ஜாக்கிரதையாகவும், நிகழ்கணத்திலிருப்பதும். எனது உடலின் அசைவுகளின் மேல் விழிப்புணர்வு கொள்ளுதலும், என்னைச் சுழும் சப்தங்கள், மற்றும் சுற்றியுள்ள காட்சிகள் குறித்த விழிப்புணர்வும், வாழ்வின் சாதாரண விஷயங்களில் மிக்க மகிழ்ச்சியை கொண்டுவருகிறது. உதாரணமாக நடத்தல் கூட ஒரு மிக ஆச்சரியமூட்டும் அனுபவம்தான் – இந்தக் கணத்தில் நிகழ்வதைக் குறித்த விழிப்புணர்வு மட்டுமே. கடந்த காலம் மற்றும் எதிர்காலக் கனவுகளில் மூழ்காமல், இப்போது இருப்பதைக் குறித்த விழிப்புணர்வு சிறிய செயல்களில் கூட திருப்தியையும், நிறைவையும் கொண்டுவருகிறது. மேலும் மனதின் அசைபோடுதலில் என்னை இழந்து நான் இந்த நிறைவை அனுவிக்காமல் போகலாம். அப்படியில்லாமல் இக்கண உணர்வில் வாழ்வதை உணரும் ஆனந்தமும் இருக்கிறது.

நான் ஓஷோவிடம் வருகையில் என் மனதில் நடப்பதையெல்லாம் நான் என்று நம்புபவளாக நான் இருந்தது நினைவுக்கு வருகிறது. முதன்முதலாக மனம் என்பது நானல்ல என்றும், ஈகோ பொய் என்றும், அது மறைந்துபோக வேண்டுமென்றும் ஓஷோ பேசியதைக் கேட்டு குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தேன். மனம் எனது துணையல்லவா, அது என்னை மகிழ்விக்கத்தானே வேலை செய்கிறது, அது என்னை காப்பாற்றி வருகிறதல்லவா, அதுதானே நான் யார் என்பதாக என்னில் இருக்கிறது.

நான் ஓஷோவை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவில்லை, ஆனால் அவரது தியானங்களைச் செய்ததில் எனது வாழ்வின் தன்மையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உணர்ந்தேன். அதிக தளர்வாகவும், மகிழ்வாகவும் ஆனேன். மேலும் மிகக் கூர்மையான உணர்வோடிருக்கும் கணங்களும் அந்தக் கணங்களில் புதிய தென்றலின் சுகத்தையும் அது கொண்டுவந்தது. தியானத்தின் மூலம் நடப்பவையெல்லாம் சரியானவை என்றும், முதலில் இருந்ததைவிடவும் உண்மையானவை என்பதையும் உணர்ந்தேன்.

நான் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்தேன் – அல்லது என்னைக் குறித்த எனது கருத்துக்களை – மேலும் அதுதானே மனம். இந்த நடைமுறை முழுவதற்கும் ஓஷோ தியானங்கள் உதவின, அதில் எனது தியானங்களில் முக்கியமான ஒன்றாக இருந்தது ஒஷோவின் பேச்சைக் கேட்பது.

தனது பேச்சுக்களே ஒரு தியானம் என்றும், அவரது செய்தி அவரது சொற்களின் இடையிலுள்ள அவரது மவுனத்தில் இருக்கிறது என்றும், அவர் என்ன சொல்கிறார் என்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் ஓஷோ நம்மிடம் செல்கிறார். இருந்தாலும் அவர் சொல்வது இன்றைக்குப் மிகத் தேவையானதாக இருக்கிறது. அது காலம்கடந்த பட்டறிவாகவும், தியானப்பாதைக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. ஓஷோவின் பேச்சை விமர்சிக்கவும், பத்திரிக்கையில் கட்டுரை எழுதவும் அவர் பேச்சைக் கேட்பவர்களுக்கு அவர் கேட்பவர்களை வசியம் செய்யும்படி பேசுவதாகவே தோன்றுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஓஷோவின் அமைதியான, மிகத் தளர்வான இருப்பு எனது உடலும் உள்ளமும் தளர்வடைந்து அவற்றின் இயல்புக்கு வர உதவியதே எனக்கு நடந்தது. எண்ண ஒட்டத்தின் பந்தயவேகம் குறைந்தது, உடலிலிருந்து இறுக்கங்கள் விலகின அல்லது கரைந்துபோயின.

நாம் பரபரப்பாகவும், விழித்துக்கொண்டும் இருக்கையில் நமது மூளையிலிருந்து – பீடா – அலைகள் வெளிப்படுகிள்றன. இது நாம் நன்கு தளர்வாகவும், விழிப்போடு அதேசமயம் எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருக்கையில் மூளை வெளிப்படுத்தும் – ஆல்பா – அலைகளாக, நாம் தியானம் புரிகையில் மாறுகின்றன. அடுத்த மூன்றாம் நிலையாக மனஇயக்கம் மிகக்குறைந்து ஆழ்ந்த உறக்கத்தில் விழும் தருணம் அதேசமயம் விழிப்புணர்வோடு இருப்பது நடக்கிறது. ஓஷோவைக் கேட்கையில், ஓஷோ வீடியோ பார்க்கையில் இந்த மூன்றாம் நிலை நடக்கிறது.  

எல்லாவற்றையும் கொண்டாடுதல், இறப்பு உட்பட

நான் இங்கிலாந்தைச் சேர்ந்தவள், அங்கு மரணம் ஞாபகத்தில் கொள்ளப்படுவதில்லை. எனது பாட்டி இறக்கும்பொழுதுகூட அதை குறித்து பேசக்கூடாது, டாக்டர்களும் என்ன நடக்கிறது என்று சொல்லமாட்டார்கள். நான் எனது பாட்டியின் இறந்த உடலை பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

முதன்முறையாக இறப்புக் கொண்டாட்டத்தில் பூனேயில் கலந்துகொண்டேன். அப்போது ஓஷோ அடிக்கடி கூறுவதுபோல, – இறப்பில் மிகப்பெரிய சக்தி வெளிப்படும் அது கொண்டாடவும் தியானக்கவும் சரியான தருணம், – நான் முதன்முறையாக எதையோ உணர்ந்தேன். அது பூனேயில் வெயில்காலம், எனக்குத் தெரிந்த ஒருவர் இறப்பினுள் நுழைகிறார். நாங்கள் எல்லோரும் அதைக் கொண்டாட ஊக்குவிக்கப்பட்டோம். நாங்கள் சில நூறுபேர் தியானக்கூடத்தில் குழுமினோம். மலர் தூவிய உடல் கொண்டுவரப்பட்டது. நாங்கள் இசையோடும், பாட்டோடும் நடனமாடிக் கொண்டாடினோம்.

நாங்கள் பிறகு உடலை சுமந்து கொண்டு ஆடிப்பாடிய படியே வீதி வழியாக சுடுபாட்டிற்கு சுமந்து சென்றோம். அங்கு ஆற்றங்கரையில் வெட்டவெளியில் எரியூட்டப்பட்டது. நாங்கள் சுற்றிலும் ஆடிப்பாடிக் கொண்டாட்டத்துடன் அவரை வழியனுப்பினோம். பரவசமான சக்தி எனக்குள் பொங்கி எழுந்தது எனக்கு நினைவிருக்கிறது, என்னைவிட பெரிய சக்தி என்னை ஆட்கொண்டது.

ஓஷோவுடன் இருந்த நாட்களில் பல இறப்புக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. ஆகவே எங்களின் குரு ஓஷோ தனது உடலை விட்டதைக்கூட கொண்டாடத்தயாராக நாங்கள் வளர்ந்தோம்.

ஓஷோவிடமிருந்து நான் புரிந்துகொண்டது, இறப்பு வாழ்க்கைக்கு எதிரானதல்ல. அது வாழ்வின் ஒரு நிகழ்வு. ஆகவே வாழ்வை நம்மால் கொண்டாட முடிகிறதென்றால் இறப்பையும் நம்மால் கொண்டாட முடிய வேண்டும்.

நம்மால் இறப்பைக் கொண்டாட முடிவதில்லை, ஏனெனில் நம்மால் வாழ்வைக் கொண்டாட முடியவில்லை. எனக்குத் தெரியும், இன்று வாழ்க்கை சவாலாயிருக்கிறது, தளர்த்திக்கொள்ளவே பலருக்கும் நேரமில்லை, கொண்டாடுவது அப்புறம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை, யோசிக்கவேண்டிய, செய்யவேண்டிய ஏராளமான வேலைகள், ஆனால் எல்லாவற்றையும் செய்துமுடிக்க என்றும் நம்மால் முடியாது. வாழ்க்கை மிக வேகமாக ஒடுவதுபோல தோன்றுகிறது, இதனால் பதட்டமும், இறுக்கமும் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு தியானம்தான்.

அன்பும் விழிப்புணர்வும் ஒருசேர வளர்தல்

ஓஷோவின் மற்றோரு முக்கியமான பார்வை, அன்பும் விழிப்புணர்வும் ஒருசேர வளர முடியும் என்பது. எனது வாழ்வில் நான் பலமுறை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஊஞ்சலாடியிருக்கிறேன். ஒரு காதலியாக, முழு நேரத்தையும் தியானத்திற்குக் கொடுப்பவராக என்று. இந்த இரண்டையும் சேர்த்து வாழ்வது சாத்தியமில்லாததாக தெரிந்தது, இரண்டையும் ஒரே நேரத்தில் வாழ்ந்தால் இரண்டுமே அரைகுறையாகிவிடும் என்பதுபோல. இப்போது புரிந்துகொண்டேன் இரண்டுமே என் வாழ்க்கைக்குத் தேவை என்பதை.

எனக்கு கௌதம புத்தரின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அவரிடம் – உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுவிட்டீர்களா – என்று கேட்டபோது, அவர் ஒரு கையில் இலைகளை எடுத்து விரித்துக் காட்டிக் கூறினார் – நான் பகிர்ந்துகொண்டது இவ்வளவே, இன்னும் எவ்வளவு இலைகள் காட்டினில் உள்ளதென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் – என்று. ஆனால் ஓஷோ நமக்கு முழுக் காட்டையும் காண்பித்து ஒவ்வொருவரும் அவரவர்களுக்கானதை எடுத்துக்கொள்ள செய்கிறார்.