வீணா ஸச்லீகல் தான் ஓஷோவிடம் வந்தது எப்படி
என்பது பற்றியும் அவரிடம் தான் கொண்ட தொடர்பு பற்றியும் கூறுகிறார்.
1971 ல் கோவாவில் உள்ள கண்டோலிம் பீச்சில் நான்
சம்மணமிட்டு தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த போது மூன்று இத்தாலியர்கள்
என்னை நோக்கி வருவதை கண்டேன். அவர்கள் இந்தியாவில் இருக்கும் ஹிப்பிகளைப் பற்றி
டாக்குமெண்டரி படம் எடுப்பதாகவும் நான் அதில் நடிக்க வேண்டும் எனக் கேட்டனர்.
நானும் பணம் கிடைக்கிறது என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். என்னுடைய நண்பனையும்
அழைத்து வரச் சொல்லி கேட்ட போது ஒத்துக் கொண்டேன். அவர்கள் தாங்கள் என்ன
நினைத்தார்களோ அதை எடுத்துக் கொண்டிருந்தார்கள், உண்மை என்னவோ அதை பற்றி கவலையே
படவில்லை. அதில் எனக்கு மிகவும் போர் அடித்து உட்கார்ந்திருந்த போது அந்த குழுவில்
இருந்த ஒரு அழகான – உண்மையிலேயே மிகவும் அழகான – பெண் என்னை அணுகி பேசினாள்.
அவள் அவளுடைய குருவை பார்ப்பதற்காக இந்தியா
வந்திருப்பதாகவும் அவளுடைய குரு பம்பாயில் இருப்பதாகவும் கோவாவை பார்க்க
ஆசைப்பட்டு இந்த குழுவுடன் சேர்ந்து கொண்டு கோவா வந்திருப்பதாகவும் கூறிக்
கொண்டிருந்தாள். அவள் அவளுடைய குருவைப் பற்றி மிகவும் புகழ்ந்து கூறிக் கொண்டிருந்தாள்.
இந்தியா வரும் யாரும் செய்வதுதான் இது, என்று நினைத்தவாறே நான் அதில் ஆர்வம்
இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவள் தன்னுடைய குருவை வந்து பார்க்குமாறு
அழைத்தாள். அவர் மிகவும் வித்தியாசமானவர் என்றும் கூறினாள். ஒவ்வொருவரும்
இப்படித்தான் கூறிக் கொள்கிறார்கள் என்று நான் கூறினேன். அப்போது அவள் பம்பாய்
வருவதற்க்கு முதல்வகுப்பு விமான டிக்கெட் எடுத்து தருவதாக கூறினாள். இது மிகப்
பெரிய விஷயமாக இருந்த போதிலும் நான் வன்மையாக மறுத்துவிட்டேன். அந்த பெண்ணின்
அழகால் கவரப்பட்டிருந்த எனது நண்பன் அந்த குருவின் பெயரையும் அவர் வசிக்கும்
இடத்தின் விலாசத்தையும் வாங்கிக் கொண்டான்.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வந்தது. எனவே எங்களது
அமைதியான கோவா வாழ்க்கைக்கும் இடையூறு வந்தது. எனவே நாங்கள் அங்கிருந்து
புறப்பட்டு, நான் திரும்ப இங்கிலாந்திற்க்கும் எனது நண்பன் பாலித் தீவுக்கும்
செல்ல திட்டமிட்டோம். பம்பாய் வந்து டில்லி செல்வதற்க்காக டிரெயின் டிக்கெட் புக்
செய்துவிட்டு வந்தபோது மதியமாகி விட்டிருந்தது. இரவு டிரெயினுக்கு செல்ல இன்னும்
நேரமிருந்தது. அப்போது எனது நண்பன் அந்த குருவை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்ற
யோசனையை முன் வைத்தான். நான் அப்போது மறுத்துக் கூறிய எதையும் காதில் வாங்காமல்
டாக்சி ஒன்றை அழைத்து அதில் ஏறிக் கொண்டு வுட்லேண்ட் என்ற அந்த முகவரியை
கூறி அங்கே போகச் சொன்னான்.
அந்த பகுதியில் போய்க்கொண்டிருந்த போது திடீரென நான், நிறுத்து, நிறுத்து இதுதான், என்று கத்தினேன்.
உனக்கு எப்படித் தெரியும், என்று டிரைவரும் எனது நண்பனும் ஆச்சரியப்பட்டார்கள்.
எனக்கு எப்படி தெரிந்தது என்று எனக்குத்
தெரியாது. இன்னும்கூட தெரியாது. அது மிக உயர்ந்த பல மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடம்.
படிகளில் ஏறும்போதுகூட நான் குரு என்பவர் இது போன்ற இடங்களில் வசிக்கமாட்டார் என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றேன்.
கதவு திறந்து ஒரு சிறிய இந்திய பெண் வெளியே
வந்தாள். அவள் குரு தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இப்போதைக்கு பார்க்க முடியாது
என்றும் தெரிவித்தாள். நான் உடனே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து
வா, போகலாம். எனக்கு பசிக்கிறது. போய் ஏதாவது சாப்பிடலாம் வா என்று கூறினேன்.
அந்த இந்திய பெண் உடனே எனது கைகளை பற்றிக்
கொண்டு வா, நான் உனக்கு சாப்பாடு தருகிறேன் என்று உள்ளே கூட்டிப் போனாள். அங்கே
இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தனர். அவர்களில் ஒருவன்
ஆன்மீக உளறலை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் அந்த குரு
வடிவமைத்துள்ள டைனமிக் என்ற புதுவித தியானத்தைப் பற்றி பேசினான். எனக்கு ஆர்வம்
வந்தது. அது போன்ற ஒன்றை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை, மேலும் அறிவுஜீவித்தனமான
என்னுடைய மனதிற்கு இது ஒத்து வருவது போல தோன்றியது. நான் இதை முயற்சி செய்து
பார்க்கலாம் என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்குப் பின் நான் எழுந்து அங்கிருந்த
புத்தக அலமாரியை பார்க்க ஆரம்பித்தேன். அங்கிருந்த புத்தகங்களின் தலைப்பு என்னை
கவர்ந்தது. அதை எடுத்து பார்க்க நினைத்தேன். ஆனால் அது பூட்டப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த பெண் அருமையான சாப்பாடு
கொண்டு வந்து தந்தாள். பின் சிறிது நேரத்தில் வந்து எங்களை வேறொரு அறைக்கு
கூட்டிச் சென்றாள். அங்கே ஒரு நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு
எதிரே மெத்தை போன்ற ஒரு விரிப்பில் நாங்கள் அமர்ந்தோம். முதலில் எனது நண்பன், பின்
வேறொருவர், பின் நான். நான் உள்ளே நுழைந்ததும் அவர் மோதிரக்காரி வந்துவிட்டாள்
என்று அவர் கூறினார். நான் வியப்படைந்தேன். நான் எனது கைகளின் பத்து விரல்களிலும்
மோதிரம் அணிந்திருந்தேன். அது காரணம் அல்ல. அவர் ஏதோ என்னை எதிர்பார்த்து
காத்திருந்தது போல இருந்தது அவர் கூறிய தொனி. நான் கோவாவில் சந்தித்த அந்த பெண் –
அவள் பெயர் லீலா – கூறியிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
அவர் முதலில் என்னுடைய நண்பனிடம் உரையாடினார்.
அவன் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததையும் இப்போது வெறும் பழங்களும் தண்ணீரும்
தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை என்றும் கூறி அதனால் இப்போது பரவாயில்லை
என்றும் கூறினான். அவர் அவனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கவனமாக
இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நான் மனோதத்துவத்தில் பட்டம்
வாங்கியிருந்ததால் அவர் பேசிக் கொண்டிருந்ததை வைத்து, அவர் மிகச் சிறந்த மனோதத்துவவாதியாக
இருப்பார் போலிருக்கிறது என்ற முதல் எண்ணம் எழுந்தது. அவர் அடுத்த ஆளிடம் பேசியதை
வைத்து என்னுடைய வாழ்நாளில் நான் சந்தித்த
மிகவும் சிறந்த அறிவுஜீவித்தனமானவராக இவர்தான் இருப்பார் போலிருக்கிறது என்ற
இரண்டாவது எண்ணம் எழுந்தது. என் முறை வந்தபோது அவர் உனக்கு என்ன வேண்டும் என்று
கேட்டார். நான் எனக்கு எதுவும் தேவையில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே
மகிழ்வாகத்தான் இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் இந்த மனநிலை இருக்குமானால்
ஏகப்பட்டது தானாகவே நிகழும் என்றார். அவர் கூறியதை அப்படியே கேட்டுக் கொண்டு எதுவும்
பேசாமல் எந்த எதிர்சொல்லும் சொல்லாமல் மௌனமாக இருந்தேன்.
அவர் தான் ஜனவரியில் நடத்தும் தியான முகாமிற்கு
வருமாறு என்னை அழைத்தார். நான், மன்னிக்கவும், டிசம்பரில் நான் ஊருக்கு திரும்பி போவதற்காக
டிக்கெட் புக் செய்திருக்கிறேன் என்றேன். அவர் உடனடியாக டிக்கெட்டை கேன்சல்
செய்துவிடு என்றார்.
அவர் என்னை அப்படி அதிகாரமாக கூறியதை என்னுடைய புரட்சிகரமான
இயல்பு ஏற்றுக் கொள்ள வில்லை. எனவே நான், சாத்தியமேயில்லை என்று கூறியதோடு அதைப்
பற்றி யோசிக்கக் கூட முடியாது என்றேன். அவர் சரி என்பது போல தனது கையை
உயர்த்தினார். விரைவில் நாங்கள் வெளியே வந்து விட்டோம். நான் மிகவும் நிம்மதியாக
உணர்ந்தேன்.
டில்லி செல்வதற்காக டிரெயின் ஏறிய பின் நான்
ஒருவிதமான பிளவு பட்டதொரு உணர்வை பெற்றேன். என்னில் ஒரு பகுதி நீ வீடு செல்லப்
போவதில்லை என்றது. என்னுடைய மனம் நீ நிச்சயமாக வீடு செல்லத்தான் போகிறாய் என்றது.
இரண்டையும் என்னால் பேசாமலிருக்க செய்ய முடியவில்லை. இந்த இரண்டிற்க்கும் இடையில்
சிக்கிக் கொண்ட நான் பைத்தியம் பிடிப்பது என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன்.
பயண தினத்தன்று நான் பிளைட் கன்பர்ம்
செய்துகொண்டு டிராவலர்ஸ் செக் மாற்றி பணம் வாங்கி கொண்டு வர வேண்டும். எனது நண்பன்
தன்னுடைய பாலித்தீவு டிக்கெட்டை கன்பர்ம் செய்ய சென்றான். அவன் திரும்பி வந்து
பார்த்தபோது நான் டிராவலக்ஸ் செக் மாற்ற
முடியாமல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆபீஸ் வாசலில் உட்கார்ந்திருந்தேன். என்னால் அந்த
பிளைட்டை பிடிக்க முடியாது என நான் கத்தினேன். எனது நண்பன் பிளைட் ஆபீஸூக்கு போன்
செய்து டிக்கெட் பற்றி கேட்ட போது அந்த டிக்கெட் இன்னும் திறந்துதான் உள்ளது. இன்றுதான்
அதை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்
கொள்ளலாம் என்று கூறினர்.
குரு வென்று விட்டார்.
இரண்டு வாரங்கள் கழித்து பூனாவுக்கும்
பம்பாய்க்கும் இடையே உள்ள மாதேரான் என்ற மலைபிரதேசத்தில் நான் நடந்து
கொண்டிருந்தேன். அந்த இடத்தில் சாலைகள் இல்லை. ஏனெனில் அந்த ஊரில் மோட்டார்கள்
அனுமதிக்கப்படுவதில்லை. எனவே மட்டக்குதிரைகள் மட்டுமே. அவை பயணம் செய்ய மண்சாலைகள்
மட்டுமே இருந்தன. நான் ஒரு சிறிய ஓட்டலை கண்டுபிடித்து அதில் ஒரு அறையை புக்
செய்து என்னுடைய பையை வைத்துவிட்டு தியானமுகாம் நடக்கும் இடத்தை தேடினேன். அது ஒரு
பரந்த திறந்தமைதானம். மரங்கள் அடர்ந்து இருந்தது. அது மாலை கவிந்தபொழுது.
இலைகளுக்கிடையே நிலாஒளி கசிந்துவந்தது. அங்கே ஒரு மெலிதான அமைதி இருந்தது. நான் வேறொரு
உலகத்திற்கு சென்றது போன்ற ஒரு உணர்வு இருந்தது.
அந்த இடத்தில் கூடியிருந்த மூன்னூறு
இந்தியர்களுக்கிடையே இருந்த பனிரெண்டு வெளிநாட்டவர்களை நான் ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன். அனைவரும் ஆரஞ்சு வண்ணத்தில் உடையணிந்திருந்தனர்.
அவர்களது கழுத்தில் டாலரோடு கூடிய மாலை ஒன்று இருந்தது. திடீரென அரட்டை நின்று
அமைதி நிலவியது. பகவான் தனது வெள்ளை லுங்கி, மேலே போர்த்தியிருந்த துண்டுடன் அந்த
இடத்தில் போட்டிருந்த சிறிய மேடையில் ஏறினார். அவர் வெளிநாட்டவர்களை அருகில்
வருமாறு சைகை செய்தார். பின் இந்தியில் பேச ஆரம்பித்தார். பின்னர் அவர் நாங்கள்
அவர் அருகில் இணைந்து இருப்பது நல்லது. நாங்கள் அங்காங்கு பிரிந்து இருந்தால்
எதையும் புரிந்து கொள்ள முடியாது என்றார். அவரது இருப்பு என்னை நிறைத்தது. அவர்
அமைதியாகவும் சாந்தமாகவும் இருப்பினும் மிகுந்த உற்சாகத்தோடும் தோன்றினார். அவர்
பேச்சு மிகவும் நகைச்சுவையாக இருந்தது போல அங்கிருந்த கூட்டம் சிரித்துக் கொண்டே
இருந்தது.
திடீரென எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அவர்
ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். நாங்கள் பதிமூன்று பேர் மட்டுமே இருந்தோம்.
எங்களுக்காக அவர் ஆங்கிலத்தில் பேசினார். ஆயினும் சிறிது நேரத்தில் அவர்
திரும்பவும் ஹிந்திக்கு மாறிவிட்டார். ஒன்றரை மணி நேரம் அவர் எந்தவிதமான
குறிப்பும் இன்றி பேசிக் கொண்டிருந்தார். பின் இங்கு வந்தது அப்படி ஒன்றும் மோசமான
ஐடியா அல்ல என்ற நினைப்போடு படுக்கச் சென்றேன்.
காலையில் டைனமிக் தியானத்தை நான் முதன்முறையாக
செய்து பார்க்கப் போகிறேன். பகவான் ஒரு சிறிய மேடையின் மீது அவருக்கு அருகே ஒரு
இசைக்குழுவுடன் தயாராக இருக்கிறார். அவர்களுக்கு ஏதோ குறிப்புகள் சொல்லியபடியே
இருக்கிறார். என் கண்களை கட்டிக் கொள்வதற்காக எனக்கு கண்கட்டு துணி
கொடுக்கப்பட்டவுடன் நான் என்னைச் சுற்றி பார்த்தேன். அந்த மைதானம் முழுவதுமாக
மனிதர்களால் நிரம்பி இருந்தது. விரைவில் இந்த இடம் சூடாகி விடும் என நான்
நினைத்தவாறே மூச்சு விடும் முறையை சக்தியுடன் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரம்
அனைத்தும் நன்றாகவே சென்றது. திடீரென டிரம் ஓசை நின்று விட்டது. பகவான் ஏதோ
சொன்னவுடன் நாரச ஓசையுடன் ஏதோ கேட்டது. நான் எனது கண்கட்டை திறந்து பார்த்தேன்.
ஏதோ பைத்தியக்கார விடுதி போல இருந்தது. மக்கள் கிறுக்குத்தனமாக கத்தவும் தங்களது
ஆடைகளை அவிழ்த்து வீசவும் தலையை கலைத்து போட்டுக் கொண்டு கத்தி ஆடுவதுமாக
இருந்தனர். என்னால் நம்பவே முடியவில்லை. நான் எதில் வந்து சிக்கிக்
கொண்டிருக்கிறேன். இங்கிருந்து தப்பித்துப் போக வேண்டும் என்பதே என்னுடைய ஓரே
எண்ணமாக இருந்தது. என்னுடைய ஓட்டல் அறைக்கு திரும்பி ஓடிப் போய் என்னுடைய பொருட்களை
சேகரித்துக் கொண்டு அந்த ஊரிலிருந்து ஓடிப் போய் விட வேண்டும் என்ற எண்ணத்தில்
ரயில்நிலையம் சென்றேன். ஆனால் தப்பி ஓடுவது அவ்வளவு எளிதல்ல என்று அறிந்த போது
எனக்கு மிகவும் விரக்தியாக இருந்தது. அந்த ஊருக்கு இரண்டு ரயில்கள்தான் வரும் காலை
மாலை இரு நேரமும். அப்போது காலை 11 மணி ஆகியிருந்தது. இனி மாலை 6 மணிக்குத்தான்
ரயில் என்று தெரிந்து கொண்டபோது மிகவும் சோர்வடைந்தேன். ஆயினும் போய்விடுவது என்று
தீர்மானித்ததால் என்னுடைய பையை வைத்துக் கொண்டு ரயில் நிலையத்திலேயே காத்திருக்க
தீர்மானித்தேன்.
மூன்று மணி நேரம் கழித்து ஒரு இந்திய பெண்
என்னிடம் வந்தாள். பகவான் தயவுசெய்து திரும்ப வந்து தன்னை பார்க்க சொன்னார் என்று
கூப்பிட்டாள்.
நான் வரமுடியாது என்று மிகவும் பிடிவாதமாக
இருந்ததால் அவள் சென்றுவிட்டாள். அரைமணி நேரம் கழித்து ஒரு இத்தாலிய பெண் அதே
செய்தியுடன் வந்தாள்.
போங்கடி நீங்களும் உங்களுடைய பகவானும் என்று
நான் கத்தியவுடன் அவளும் சென்றாள். ஆனால் திரும்பவும் வந்தாள். அவள் என்னை
அமைதிபடுத்தி பகவான் உன்னை இருக்க சொல்வதற்காக கூப்பிடவில்லை. நீ போவதற்கு முன்
அவரை வந்து பார்க்கச் சொல்கிறார் அவ்வளவே என்று என்னை சமாதானப்படுத்தினாள்.
எனக்கும் அங்கே மிகவும் வெப்பமாக இருந்தது.
மேலும் இன்னும் 4 மணி நேரம் வேறு இருந்தது. எனவே நான் பிடிவாதமாக என்னுடைய பையை
அங்கே ரயில்நிலையத்திலேயே வைத்துவிட்டு பகவானைப் பார்க்க வந்தேன். பகவான் என்னை
வரவேற்று அமரவைத்து என்னவாயிற்று என்று கேட்டார். அவரது வசீகரம் என்னை தொட்டது.
நான் சிறிது அமைதியடைந்தேன். எனவே என்னுடைய உணர்வு என்ன என்பதை என்னால் அவரிடம்
சிதறாமல் சொல்ல முடிந்தது. கேட்ட அவர் நான் பார்ப்பது ஒவ்வொரு மனித மனத்தின்
உள்ளேயும் அடக்கி வைக்கப்பட்டுள்ள உணர்வுகளே. அவை வெளிவந்த பின்தான் மனகாயங்களை
ஆற்ற முடியும் என்று விவரித்தார். அவர் என்னுடைய விருப்பத்தை தாண்டி என்னை
சமாதானம் செய்தது என்னுடைய பரிசு என்றே சொல்ல வேண்டும். அவர் நாளையும் டைனமிக்
செய்து பார்த்துவிட்டு அப்படியும் இதே போல உணர்ந்தால் நான் போவதே நல்லது என்றும்
கூறினார். இந்தியர்களின் இந்த பைத்தியக்காரத்தினம் எனக்கு அச்சமூட்டுவதை நான்
சொன்னேன். அவர் கூட்டத்திலிருந்து விலகி தனியாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள
சொன்னார். ஒரு நல்ல பெரிய மரத்தடியை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார்.
அடுத்தநாள் காலை டைனமிக் தியானத்தின் போது நான்
என்னை மற்றவர்களிடம் இருந்து மிகவும் தள்ளி வைத்துக் கொண்டேன். கத்தாரீஸிஸ்
சமயத்தில் எனக்கு படுத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது. இது நான் என்னுடைய
பயத்தை வெல்லும் முயற்சிக்கு எதிரானது. திடீரென என் வயிற்றிலிருந்து ஒரு குரல்
பகவான் என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவி செய்யுங்கள் என்று அழைத்தது எனக்கு
கேட்டது. இது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று நான் சுதாரித்துக் கொள்வதற்கு
முன் நானும் எழுந்து அந்த பைத்தியக்காரத்தனத்தில் பங்கு கொள்ள ஆரம்பித்து
விட்டேன். ஹூ சமயத்தில் ஏதோ மனதில் தோன்றிக் கொண்டிருந்த போதும், நன்றாக உணர்ந்த
படியால் அதை செய்து முடித்துவிட்டேன். முடிந்தபின் நான் என்னை வியந்துகொண்டே
அறைக்கு திரும்பவந்து படுத்து நன்றாக ஆழ்ந்து தூங்கினேன்.
தூக்கத்தில் நான் ஒரு கனவு கண்டேன். பகவான்
என்னுடைய படுக்கையின் அருகில் நின்று கொண்டு, எழுந்திரு. நீ இப்போது வந்து என்னை
பார்க்க வேண்டும் என்று கூப்பிடுகிறார்.
நான் எழுந்து மணி பார்த்த போது சரியாக மதியம் 2
மணி ஆகியிருந்தது. நான் விரைந்து பங்களா வந்து அவரை பார்க்க விரைந்தேன். நான்
நன்றாக தூங்கிவிட்டேன் என்று கூறிய போது அவர் தெரியும். அதனால்தான் நான் வந்து
உன்னை அழைத்தேன் என்றார்.
அவருக்கு எதிரில் தரையில் அமர்ந்திருந்த நான்
அவரை வியப்புடன் பார்த்தேன். பார்த்துக் கொண்டிருந்த போதே அவர் மறைய தொடங்கினார்.
அவருடன் சேர்ந்து நானும் மறையத் தொடங்குவதை நான் உணர்ந்தேன். அது மிகவும்
அற்புதமாக இருந்ததால் அது நிகழ அனுமதித்தவாறே நான் எனது கண்களை மூடினேன். எவ்வளவு
நேரம் நான் அப்படி இருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நடப்பது யாவும்
சரியானதே என்ற உணர்வு என்னை மூழ்கடிக்கத் தொடங்கியது. நான் சரியான இடத்தில்,
சரியான நேரத்தில், சரியான காலகட்டத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெள்ளத்தெளிவாக
தெரிந்தது.
அவரது குரல் கேட்டு நான் கண் விழித்தேன். அவர்
சிரித்தவாறே, தங்குகிறாயா என்று கேட்டார். நான் தலையசைப்பதைத் தவிர வேறு என்ன
செய்ய
அடுத்த நாள் அவரை 2 மணிக்கு பார்க்கச் சொல்லி
தகவல் வந்தது. அந்த நேரம் எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது போலும். நான் அவரை அந்த
நேரத்தில் வந்து சந்தித்தேன். இன்று அவர் யதார்த்தமாக பேசினார். பேசிக்
கொண்டிருந்த போது அவர் நான் சன்னியாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தான்
விரும்புவதாக தெரிவித்தார். இது மிகவும் பெரிய ஆசை. தரையில் அமர்ந்திருந்த நான்
தனித்துவமானவள். குழுவில் சேர விரும்பவில்லை என்பதை சொல்லிவிட்டேன். அவர் தன்னுடைய
சேரில் சாய்ந்து அமர்ந்துகொண்டு சன்னியாசம் என்பது எப்படி தனித்துவத்தை
இழப்பதாகாது. மாறாக தன்னுடைய உண்மையான அசலை மீட்டெடுப்பதாகும் என்று விவரித்து
கூறினார். நான் அதை ஏற்றுக் கொள்ளாமல் சமாதானம் கொள்ளாமல் இருந்தேன். அதை பார்த்த
அவர் தன்னுடைய பேச்சை நிறுத்தி விட்டார். அப்போது இல்லை, இப்படி பேசக்கூடாது. இது
ஆணின் தர்க்கரீதியான அணுகுமுறை, நான் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்ற
எண்ணம் அவரது மனதில் ஓடுவதை என்னால் நன்றாகவே பார்க்க முடிந்தது.
அவர் வேறுவிதமாக அணுகியபோது நான் நானாக
இருந்தேன். அவர், நான் உனக்கு ஒரு அழகான பெயர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்
என்றார். ஐயகோ அவர் மிகச் சரியாக என்னுடைய பலவீனமான இடத்தில் அடித்துவிட்டார்.
எனக்கு என் அம்மா சூட்டிய பெயரை நான் எப்போதும் வெறுத்து வந்திருக்கிறேன். நானாக
என்னுடைய பெயரை இரண்டு முறை மாற்றிக் கொண்ட போதும் எதுவும் எனக்கு ஏற்புடையதாகவே
இல்லை. எனவே என்னுடைய ஆவல் தூண்டப்பட்டது.
அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே, நான் மெதுவாக
அது என்ன என்று கேட்டேன். என்னுடைய இருப்பை தள்ளி வைக்க முயற்சி செய்து
கொண்டேயிருந்தேன்.
சம்பந்தேமேயில்லாமல் திடீரென அவர் வீணை என்னும்
இசைக் கருவிகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அது மிகவும் அரிதான ஒரு கருவி. அதை
இசைப்பது மிகவும் கடினம். ஆனால் அதை மிகச் சரியான விதத்தில் இசைத்தால்
கேட்பவர்களுக்கு அன்பையும் ஆனந்தத்தையும் தியானத்தையும் ஒரு சேர தரக் கூடியது அது.
எனவேதான் கலைமகள் அதை தன் கைகளில் ஏந்தியிருக்கிறாள் என்று கூறினார்.
உன்னுடைய பெயர் ப்ரேம் வீணா. நீதான் என்னுடைய
இசைக்கருவி. உன் மூலமாக பலர் தியானம் செய்ய வருவார்கள். பலருக்கும் தியானம் செய்ய
நீ உதவியாக இருப்பாய் என்றார்.
நான் அவரை நிமிர்ந்து பார்த்த போது அன்பு
பெருகியதை உணர்ந்தேன். நான் இதுவரை அனுபவித்திராத அன்பு மழையை அனுபவித்தேன்.
என்னுடைய சிறிய முடிவுகளுக்கும் புரிதலுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி இருப்பின்
முன் நான் இருப்பதை உணர்ந்தேன். அதன் காலத்தை கடந்து பார்க்கும் நிலையின் சிறிய
தரிசனம் நான் கண்டேன். என்னுடைய தலை தானாக வணங்கியது. முதன்முறையாக இந்தியர்கள்
செய்வது போல நான் குனிந்து வணங்கி அவரது பாதங்களைத் தொட்டேன். நான் உணர்ந்த்தை ஒரு
சிறிய அளவில் வெளிக்காட்டக்கூடிய செயல் அதுவே. நான் அங்கிருப்பதால் நான் பெருமை
படுத்தப்படுவதை நான் உணர்ந்தேன். நான் அங்கிருப்பதை இயற்கை அனுமதித்ததால் நான்
மிகவும் நன்றியை உணர்ந்தேன்.
இந்த பிரபஞ்சத்தில் எனக்கு ஒரு இடமுண்டு, நான்
இங்கிருப்பதற்கு ஒரு காரணமுண்டு என்பது எனக்கு மிகத் தெளிவாக புரிந்தது. மேலும்
நான் சரியான பாதையில் செல்ல வழி காட்டக் கூடியவர் இவர் மட்டுமே என்னைப் பற்றி நான்
புரிந்து கொள்வதற்க்கும், இயற்கையுடன் நான் கலப்பதற்க்கும் உதவுபவர் இவர்தான்
என்பதும் மிகச் சரியான விதத்தில் எனக்கு தெளிவாகியது.