வீணா ஓஷோவால் கொடுக்கப்பட்ட ஒரு பேழை மற்றும் மாலையின் ஒரு மணி ஆகியவற்றின் பயணத்தை விவரிக்கிறார்.

கடந்த சில மாதங்கள் எளிதானதாக இல்லை. என்னுடைய கிரகங்கள் என்னுடைய ஜாதகம்
என்னுடைய மனோநிலை என அதற்கு என்ன பெயர் சூட்டினாலும் சரிதான். கிட்டத்தட்ட ஒரு
வாரத்திற்க்கு முன் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு இது போன்ற சூழ்நிலையை எதிர்
கொள்வதற்கான ஓஷோ கூறியுள்ள பல வழிகளில் – இதுவும் கடந்து போகும்,  பள்ளத்தாக்கில் இருப்பதாக நினைத்துக் கொள், இதைத்தான் இயற்கை உன்னிடமிருந்து இப்போது எதிர்பார்க்கிறது, இந்த
குழப்பங்களிலிருந்து பீனிக்ஸ் பறவை விரைவில் எழும் –எதை வைத்துக் கொள்ளலாம் என்று
யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய ஸ்மார்ட் போன் எனக்கு ஒரு இமெயில்
வந்திருப்பதாக தகவல் தந்தது. அதை பார்த்தபோது அது தென் ஆப்பிரிக்காவில் உள்ள
என்னுடைய 89 வயதான அத்தையிடமிருந்து வந்திருந்தது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அவளிடமிருந்து இது வரை எனக்கு இமெயில் எதுவும் வந்ததேயில்லை.

லண்டனில் உள்ள பால் வீதியில் நிர்வாணா தியான மையம் என்ற பெயரில் நான்
1973 களில் தியான மையம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது லண்டனில் படித்துக்
கொண்டிருந்த என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனிடமிருந்து போன் வந்தது. எங்களுடைய தாத்தா
உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் இன்னும் அதிக நாள் உயிரோடு
இருக்கமாட்டார் எனவும் தகவல் தெரிவித்தான். அவரை பார்ப்பதற்காக அவன் தென் ஆப்பிரிக்கா
போனான். என்னால் போக முடியவில்லை, ஆகவே எனக்கு ஒரு யோசனை வந்தது. என்னுடைய ஓஷோ
மாலையிலிருந்து ஒரு மணியை எடுத்து அதை என்னுடைய தாத்தாவிடம் கொடுக்கும் படி
சொன்னேன். அதை ஒரு நைலான் கயிற்றில் கட்டி அதை என் தாத்தாவின் கழுத்தில்
கட்டிவிடும்படி கூறினேன். நான் உடலளவில் வெகுதொலைவில் இருந்தாலும் இதன் மூலம் அவர்
கூடவே இருப்பதாக கூற சொன்னேன். என்னுடைய குடும்பமும் டாக்டர்களும் வியக்கும் வண்ணம்
என்னுடைய தாத்தா விரைவில் குணமடைந்தது மட்டுமல்லாமல் 96 வயது வரை வாழ்ந்தார்.

என்னுடைய தாய் என்னை மிகவும் கடுமையாக கண்டித்ததோடு அவர் என்னுடன் மூன்று
மாதங்கள் வரை பேசவேயில்லை. அவர் நான் வூவூ போன்ற ஏதோ மந்திரம் ஒன்றை செய்ததாக
நினைத்துக் கொண்டார். ஆனால் அது ஓஷோ மற்றும் என்னுடைய தாத்தாவின்
நம்பிக்கையுணர்வும் திறந்திருந்த மனப்பான்மையின் விளைவுகளே.

பின்னர் நான் ஓஷோவிடம் இதைப்பற்றிக் கூறி என்னுடைய மாலைக்காக இன்னுமொரு மணியை
கேட்டபோது ஓஷோ சிரித்துவிட்டு, அது அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.

நான் பூனாவில் இருந்த அந்த நாட்களில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி….. என்னுடைய
தாய் எனக்கு கடிதம் எழுதியிருந்தாள். அதில் அவள் தான் அறுபது வயதில் ஓய்வு பெற்று விடுவோம் என்று
நம்பிக் கொண்டிருந்ததாகவும் அரசாங்கம் சட்டத்தை ஓய்வு பெறும் வயதை 65 ஆக மாற்றி
விட்டதாகவும் அதனால் அவள் இன்னும் வேலை செய்ய வேண்டி வருவதை எண்ணி மிகவும்
வருத்தப்படுவதாகவும் எழுதியிருந்தாள். அவள் அரசாங்கத்திற்க்கு எழுதியிருப்பதாகவும்
ஆனால் அதனால் ஏதும் பயனிராது என்றும் கூறியிருந்தாள். நான் இதை ஓஷோவிடம் கூறினேன்.
அவர் அவளுடைய போட்டோ ஒன்றை தனக்கு அனுப்புமாறும் அவளை ஹம்மிங் தியானம் செய்ய
துவங்குமாறும் கூறினார். அது நாம் இப்போது செய்யும் நாதப்பிரம்மா போன்றதல்ல,
வெறும் ஹம்மிங் மட்டுமே. அவள் ஓஷோவுக்கு எதிரி என்பதால் அவள் இவைகளை செய்வாளா
என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் தன்னுடைய போட்டோ ஒன்றை அனுப்பி வைத்ததோடு
ஹம்மிங் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் எழுதியிருந்தாள். பின் சில
வாரங்களில் அவள் தான் அறுபது வயதில் முழு பென்சன் தொகையோடு ஓய்வு பெறுவதாகவும்
எழுதியிருந்தாள். இதைப் பற்றி என்ன சொல்ல, நமது குரு மறுபடியும்……..

அந்த வருடத்தில் தென் ஆப்பிரக்காவில் என்னுடைய சொந்த ஊரிலிருந்து ஒருவர்
பூனாவுக்கு என்னை பார்க்க வந்திருந்தார். அவர் என் வாழ்வை அடியோடு மாற்றிய அவர்
யார் எனவும் பார்க்க வந்திருந்தார். அந்த நாட்களில் தர்சன் என்பது லாவோட்ஹூ ஹாலின்
முன்னால் நிகழும், வெகு சிலரே அங்கிருப்பர். எனவே ஓஷோவை பார்க்க அனுமதி பெறுவது
எளிது. எனவே நான் வரை அழைத்து சென்று ஓஷோவிடம் அவரைப் பற்றி அறிமுகம் செய்து
வைத்தேன். ஓஷோ அவரிடம் மிகுந்த அன்பு பாராட்டினார். அவர் இருந்தவரை அவரிடம்
மிகுந்த நேரம் செலவிட்டார். அவர் கிளம்புகிற சமயத்தில் ஓஷோவிடம் சொல்லிக் கொண்டுவர
சென்றிருந்த நேரம் நானும் அவருடன் சென்றிருந்தேன். அவர் முன்வந்து ஓஷோவிடம்
விடைபெறும் நேரத்தில் ஓஷோ என்னையும் அங்கு அழைத்து அவர் அருகில் அமர சொன்னார். ஓஷோ
எப்போதும் அவரிடம் விடைபெறும் மக்களுக்கு அவரது பரிசாக ஏதாவது கொடுப்பதுபோல
அவருக்கும் ஒரு பெட்டியை பரிசாக அளித்தார். பின் திரும்பி என்னை சில நிமிடங்கள்
பார்த்தார். பின் அவரிடம் திரும்பி, தென் ஆப்பரிக்காவில் வீணாவின் தாயை நீங்கள்
பார்ப்பீர்களா என்று கேட்டார். என் நண்பன் ஆம் என்று சொன்னவுடன் ஓஷோ திரும்பி
லஷ்மியிடம் மற்றொரு பேழையை கொண்டுவரச் சொன்னார். அவர் அதை எனது நண்பனிடம் கொடுத்து
அதை எனது தாயிடம் கொடுக்கச் சொன்னார். நான் ஓஷோவின் இந்த அன்பான நடவடிக்கையால்
மிகவும் நெக்குருகி கண்ணீர் வடித்தேன். உண்மையில் எனது தாய் அந்த வருடமே
இறந்துவிட்டாள். இது எப்படி ஓஷோவுக்கு முன்னரே தெரிந்து அவர் தன்னுடைய வாழ்த்துக்களை
அவளுக்கு அனுப்பினார் என்பது பற்றி நான் வியந்துபோனேன்.

பின் நான் இப்போதுவரை அந்த மாலையின் ஒரு மணியும் அந்த பேழையும் என்னவாயிற்று
என்று நினைத்துப் பார்க்கவேயில்லை.

நான் என்னுடைய அத்தையின் இமெயிலை படித்தபோது வியப்படைந்து விட்டேன். அவள்
என்னுடைய தாயின் பொருட்களை ஒழுங்குபடுத்தியபோது அதில் ஒரு சந்தன பேழையும் அதனுள்
ஒரு மணியும் இருந்ததாகவும் கூறிவிட்டு அது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா,
அப்படி ஏதாவது அது முக்கியம் தேவை என்றால் இன்னும் சில நாட்களில் என்னுடைய கஸின்
லண்டன் வரப் போவதாகவும் அவளிடம் அதை கொடுத்தனுப்புவதாகவும் கூறியிருந்தாள். நான்
திகைத்து விட்டேன். அந்த மணி நிச்சயமாக 108 ஆவது மணியாகவும் அந்த பேழை ஓஷோ எனது
தாய்க்கு கொடுத்தனுப்பிய பேழையாகவும்தான் இருக்கக்கூடும் எனத் தோன்றியது.

சில நாட்களில் நான் லண்டனில் என்னுடைய கஸினை சந்தித்து அதை பெற்றுக் கொண்ட
போது எனக்கு தோன்றியது மிகவும் சரியே. அது என்னுடைய மணிதான், அந்த பேழையும் ஓஷோ
என்னுடைய தாய்க்கு கொடுத்தனுப்பிய அரிதான பேழையே. நான் என்னுடைய பீனீக்ஸ் தன்னுடைய
சிறகை திரும்பவும் விரிப்பதை பார்த்தேன், என்னுடைய கிரகங்கள்  திரும்பி சேர்ந்து மறுபடியும் சந்தோஷமான நடனத்தை ஆட ஆரம்பித்தன.