யாரி – தனது தேடுதல் பயணத்தையும் அவர் எப்படி ஓஷோவை சந்தித்தார் என்பதையும் நினைவு கூறுகிறார்.

மிக நீண்ட நாட்கள் தேடியபின் நான் தேடியதை நான் கண்டடைந்தது மிகவும் தொலைவில் உள்ள இடத்தில். நான் எனது நாட்டிலிருந்து ஒருவழி பயண சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டு ஒரு எண்ணத்தோடு இந்தியா வந்தேன். ஒரு வாழும் ஞானியை பார்ப்பது அல்லது அவரை தேடும் முயற்சியில் உயிரை விடுவது என்பது என்னுடைய தீர்மானமுடிவு. இதற்காக பல வருடங்களாக இந்தியாவில் வாழ்ந்தேன். இதில் அதிக காலங்கள், சிவாவின் நகரம் என சொல்லப்படும் கங்கை நதி கரையில் உள்ள காசியில் இருந்தேன். அங்கே சிதார் வாசிக்க கற்றேன், மீதி நேரங்கள் நதிக்கரையில் எரியும் பிணங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு எழுந்து எனது தியானத்தை செய்துவிட்டு ஒரு மணி நேரம் சிதார் கற்றுக் கொண்டு பின் நான்கு மணி நேரம் அதை பயிற்சி செய்வேன். அதன்பின் உணவுக்கு வெளியே செல்வேன், சாப்பிட்ட பின் கங்கை கரைக்கு சென்று அங்கு பிணங்கள் எரிவதையும் நதிக்கரையில் சடங்குகள் செய்வதையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.

பின்னர் நான் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பிப்பேன், என்னுடைய இதயத்தில் உள்ள புத்தரை தேடி அலைய ஆரம்பிப்பேன். அங்கே பல ஆசிரியர்கள், பக்கீர்கள், சாதுக்கள், ஆச்சார்யாக்கள் மற்றும் பல போலி சாமியார்கள் இருந்தனர், அபூர்வமாக  அரிதாக  முத்தானவரும் இருந்தனர். அவ்வப்போது என்னை அவநம்பிக்கை வந்தடையும், ஜீஸஸ் மற்றும் புத்தர் போன்றவர்கள் இருந்த காலத்திற்கு 2000 வருடங்களை கடந்து நான் பிறந்திருப்பதை எண்ணி கவலை கொள்வேன். ஆனால் எப்படியோ அங்கே ஒரு குரு இருப்பார் என்பது மட்டும் எனக்கு தெரிந்திருந்தது. அவனோ அவளோ என்னை கடந்து போகும் சமயத்தில் நான் அங்கு அந்த இடத்தில் இருக்க வேண்டும், அவ்வளவே. ஆகவே நான் தேடிக் கொண்டிருந்தேன்.

நான் சிவாவிடம் என்னுடைய அறியாமையை போக்கி எனக்கு உதவி செய்யுமாறு வேண்டி பிரார்த்தனை செய்து கேட்டுக் கொண்டேன். அந்த தூய்மைப்படுத்துதல், நான் கிட்டத்தட்ட எனது பூத உடலை விட்டு வெளியேறும் அளவு மிக தீவிரமாக இருந்தது. நான் மிகப் பெரிய குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மாடியில் ஒரு அறையில் குடியிருந்தேன். அந்த இடம் தசாஸ்வினாத் காட் என்றழைக்கப்பட்டது. எனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அதனால் உடல் இளைத்து துரும்பாகி காய்ச்சல் வந்து மிகவும் சோர்வாக கிடந்தேன். ஆனால் என்னுடைய குருவை காண வேண்டுமென்ற ஆசை மிகவும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

நான் படுக்கையில் படுத்துக் கொண்டு ஜன்னலுக்கு வெளியே மரத்தில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்த பறவையின் குரலை கேட்டுக் கொண்டிருந்தேன், இப்போது திடீரென நான் அந்த பறவையின் அருகில் அமர்ந்து கொண்டு படுக்கையில் கிடந்த எனது உடலை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் இதற்கு முன்பே பல முறைகள் உடலுருவம் மாறி இருப்பதை உணர்ந்திருப்பதால் இந்த தடவை நான் அச்சம் கொள்ளவில்லை. ஆனால் நான் இறப்பதற்கு முன் எனது குருவை சந்தித்து விட வேண்டுமென ஒருமுகமாக பிரார்த்தனை செய்தேன். அந்த பிரார்த்தனைக்கு பலனாக என்னுடைய அறையின் கூறையின் மேல்பாகத்தில் தலை வழுக்கையுடன் தாடியுடன் கூடிய கருணையான முகம் ஒன்று தோன்றி என்னைப் பார்த்து புன்னகை செய்தது. நான் அந்த முகத்தை எனது நினைவில் பதித்து வைத்துக் கொள்ள முயன்றேன், மேலும் அந்த தரிசனத்திற்காக நன்றியுணர்வும் கொண்டேன். ஆனால் என்ன ஒரே ஒரு பிரச்னை எனக்கு அவர் யாரெனத் தெரியாது. ஏனெனில் நான் அதுவரை ஓஷோவை அறிந்திருக்கவில்லை.

நான் நலமடைந்த பின் கூட்டத்தில் நான் பார்த்த முகத்தை தேடி தேடி
திரிந்ததில் பலமாதங்கள் கடந்துவிட்டன. என்னுடைய நினைவிலிருந்து அந்த முகமும் மங்கலாக தொடங்கியது. இந்த தேடுதல் மிக தீவிரமாக இருந்த காரணத்தால் என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை, எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. எனவே நான் பனாரஸை விட்டு கிளம்பினேன். கிறிஸ்துவ செயிண்ட் துறவி ஒருவர் ஓய்வு பெற்று குஜராத்தில் வசிப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கி கொண்டு வரலாம் எனக் கிளம்பினேன். அவர் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கிராமத்திலிருந்து 6 மைல்கள் தள்ளி இருந்த ஒரு மலையடிவாரத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் வயதாகி விட்ட படியால் அவரது தேவைகளை கவனிக்க அவரது வீட்டின் அருகிலிருந்த ஒரு கிறித்துவ பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார்.

அவரது வீட்டின் அருகில் ஒரு சிறிய குடும்பத்துக்கு சொந்தமான கோவில் ஒன்று இருந்தது, அதன் வராந்தாவில் நான் தங்கி கொள்ள அவர்கள் அனுமதி அளித்தனர், அதற்கு பதிலாக நான் அவர்களது மதிய வேளையின் ஆரத்தி பூஜையின் போது பாடல் பாடினேன். காலையில் நான் அவருடன் என்னுடைய நம்பிக்கைகளையும் என்னுடைய அவாவையும் பற்றி பேசிக் கொண்டிருப்பேன்……………. 

அவர் மிகவும் அழகான அமைதியான மனிதர். பிறப்பினால் அவர் பெல்ஜியனாக இருந்தாலும் அவர் சந்தித்த மக்களுக்கு சேவை செய்வதற்காக 40 வருடங்களாக இங்கே இந்தியாவிலேயே இருந்து விட்டவர். அவர் ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்திருந்தார், அவரது தாடி வியக்கத்தக்க வகையில் இருந்தது. கிறிஸ்துவ மதத்தை பற்றிய அவரது புதிய பார்வைகளினால் நான் அவரை மிகவும் நேசித்தேன். அது டிசம்பர் மாதத்தின் ஆரம்பநாட்கள், அப்போது வெகு நாட்களுக்கு முன்பே தேவையில்லை என நான் கைவிட்டிருந்த கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது ஒருநாள் காலை எழும்போதே அழுது கொண்டே எழுந்தேன், உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டுமென்ற உந்துதல் எழுந்தது. அது என்னைப் பொறுத்தவரை மிகவும் பழக்கமற்றது, ஏனெனில் நான் பொதுவாக அழுவதில்லை, எப்போதும் நான் என்னுடைய உள்ளுணர்வை பின்பற்றுவதால் அது எங்கே போக வேண்டுமென்று சொல்லாவிட்டாலும் நான் போயாக வேண்டும். நான் அந்த துறவியிடம் வந்தபோது அவர் எனது வேதனையை கண்டு என்ன விஷயம் என்று விசாரித்தார். நான் அவரிடம் என்ன காரணம் என்று தெரியாது, ஆனால் நான் இங்கிருந்து போயாக வேண்டும் என்று கூறினேன். அவர் புரிந்து கொண்டார், மேலும் நான் என்று வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்று கூறு விடை கொடுத்தார்.

நான் அந்த மலையிலிருந்து இறங்கி நடந்து ஒரு மாட்டுவண்டி பிடித்து நகரத்திற்கு வந்து ரயில்வே நிலையம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து செல்லும் ஒரே ஒரு ரயிலில் ஏறி அகமதாபாத் நகரம் வந்து சேர்ந்தேன். அது பம்பாயிலிருந்து சில நூறு மைல்கள் தொலைவில் உள்ள ஒரு பெரிய சந்திப்பாகும். நான் அமைதியான இடங்களில் மட்டுமே வசித்து வந்திருக்கிறேன், ஆனால் இப்போது எங்கே போவதென்று தெரியாமல் ஜனக்கடலின் நடுவே நின்றேன். பயமும் மிரட்சியுமாக அன்றைய நாளை ஓட்டினேன். நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலில் ஏறி அங்கிருந்து புறப்பட்டேன், அது பம்பாய் செல்கிறதென்று பின்புதான் தெரிந்து கொண்டேன். அடக்கடவுளே விஷயம் மோசமாக இருந்தது படுமோசமாக போனது வெகுவிரைவில்.

நான் பம்பாயின் முக்கிய நிலையத்தில் இறங்கி அதை சுற்றி வந்தேன், அது எளிதான விஷயமல்ல ஏனெனில் ஸ்டேஷன் மிகப் பெரியது. இந்த மாதிரி ஒரு நரகத்தில் கொண்டு வந்து தள்ளியதற்காக என்னுடைய தலைவிதியை சபித்தேன். எனக்கோ மிகவும் கோபம், இரவாகி கொண்டிருந்தது. எனவே நான் டிக்கெட் கௌண்டரை நெருங்கி அங்கிருந்து அப்போது வெளியேறும் ரயிலை பற்றிய விவரம் கேட்டேன். அவர் ரயில் ஒன்று கிளம்ப போவதாகவும், அதுதான் இன்றைய கடைசி ரயில் என்றும் அது பூனா செல்லும் என்றும் கூறினார். பூனா எங்கிருக்கிறது தெரியாது ஆனால் நான் இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்.

பூனா ரயில் நிலையத்தை நான் நள்ளிரவிற்கு பின் வந்து சேர்ந்தேன், அது நரகத்தை விடவும் கேவலமாகவும் அசிங்கமாகவும் இருந்தது. நான் அருகேயிருந்து ஒரு கோவிலுக்கு சென்று இரவு தங்கி கொள்ள அனுமதி கேட்டேன். ஆனால் அதன் வாயில் கதவு என் முகத்தின் மேல் அறைந்து சாத்தப்பட்டது. இது போல எனக்கு நிகழ்ந்ததேயில்லை. ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல் பாடினால் போதும், கோவிலில் இலவசமாகவே தங்க எனக்கு அனுமதி கிடைத்துவிடும்.

நான் திரும்பி ஊருக்குள் நடந்தேன், அங்கே 5 ரூபாய்க்கு படுக்க கட்டில் கொடுக்கும் ஒரு தர்மசாலா ஸ்டேஷனின் அருகில் இருந்தது. சக்தியற்று, சோர்வாக படுத்து ஒரு அறைகுறை தூக்கம் தூங்கிய சமயத்தில் விடியற்காலையில் ஒரு பெருத்த இந்தியன் விட்ட அளவிட முடியாத குறட்டையால் எனது தூக்கம் கலைந்தது. நான் முணுமுணுத்தபடியே திரும்பிய போது ஆரஞ்சு உடையில் இருந்த ஒரு ஆஸ்திரேலிய இளைஞன் அவர்களது தனித்துவமான சந்தோஷமான வழியில் எனக்கு காலைவணக்கம் சொன்னான். அவன் தொடர்ந்து என்னைப் பார்த்து நான் அந்த வயதான மனிதரை பார்க்கவா வந்திருக்கிறேன் என்று கேட்கும்வரை அது எனக்கானது என்று எனக்கு தோன்றவில்லை.

எந்த வயதான மனிதர் என்று நான் கேட்டேன்.

ஓ, நீங்கள் பகவானைப் பற்றி கேள்விபட்டதில்லையா என்று அவன் கேட்டான்.

இல்லை, யார் அவர்

நான் கேள்விப்பட்டதில்லை என்பதை அறிந்து அவன் ஆச்சரியப்பட்டான். அவன் ஒரு ஆட்டோவை பிடித்து என்னை ஆசிரமத்திற்கு கூட்டி சென்றான். ஆனால் ஒரு சிறிது தாமதமாகி விட்டதால் முன்கேட் வாயில் மூடப்பட்டு விட்டது. நாங்கள் கோரெகன் பார்க் சுற்றி பேசிக் கொண்டே நடந்தோம், சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டவுடன் நான் உள்ளே சென்றேன், அழகுள்ள பெண்களும் ஆண்களும் ஒருவரையொருவர் தழுவி முத்தம் கொடுத்துக் கொள்வதை இதுவரை இப்படி நான் பார்த்ததே இல்லை. நான் பல வருடங்களாக தனிமையில் இருந்தேன், ஆகவே இது மிகவும் அதிகப்படியாக இருந்தது. ஆனால் நான் புத்துணர்ச்சி பெற்றேன்.

அடுத்த நாள் நாங்கள் திரும்பி வந்தோம். தியான மண்டபத்தினுள் உட்கார்ந்திருந்த போது என்னை சுற்றியிருந்த மௌனம் வளர்வதை பார்த்தவாறே என்ன நிகழ்கிறது என்று வியப்பில் ஆழ்ந்தேன். திடீரென கூடியிருந்தவர்கள் ஆரவாரபட்டவுடன் தான் அந்த கார் வந்ததை பார்த்தேன். கூப்பியிருந்த கரங்கள் முதலில் வந்தன, பின் தாடியோடு கூடிய முகம் வந்தது, பின்பு அந்த வழுக்கைதலையோடு இருந்த உருவம் மிகவும் அழகான உடலசைவோடு அந்த மேடையில் ஏறியது.

அவர் என்னை நேருக்கு நேர் கண்ணுக்குள் பார்ப்பதுபோல இருந்தது…. எனக்கு உடனே எனது அறையின் கூறையில் வெகு நாட்களுக்கு முன் தெரிந்த அந்த பிம்பம் நினைவுக்கு வந்தது…. அன்று கேள்வி-பதில் கூறும் நாள். எனவே அவர் மெதுவான குரலில் முதல் கேள்வி என பேச ஆரம்பித்தார்………

நான் காணாமல் போனேன்.