1.நட்புணர்வு
நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.
உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.
பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.
வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.
நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.
நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
2.கவனித்தல் [கவனம்]
உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இரு – தொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.
எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.
உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.
ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!
மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.
கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.
முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.
3.வாழ்க்கை
வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.
வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.
நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.
வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!
வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.
வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.
வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்!