விடியல்

நீ பிடிப்புகள் அற்று  இருக்க ஆரம்பித்தால் ஒரு அளப்பறிய சக்தி உன்னிலிருந்து விடுபடும். பொருட்களை பிடித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த அந்த ஆற்றல் உனது இருப்பினுள் ஒரு புதிய விடியலை கொண்டு வரும். புதிய ஒளியை, ஒரு புதிய புரிதலை, ஒரு சுமை இறங்கிய உணர்வை கொண்டு வரும். நீயே உன்னிடம் ஒரு தேஜஸை, சாந்தத்தை, அமைதியை ஒருவிதமான மகிழ்வுடன் உணரலாம்.

தியானம் இரவின் முடிவு மற்றும் ஒரு புதிய விடியலின் ஆரம்பம்.

மனித இனத்திற்கு ஒரு புதிய விடியல், முற்றிலும் புதிய ஒரு பார்வை தேவை.

ஒவ்வொரு புதிய விடியலும் முற்றிலும் புதிய உலகத்தை உன்னைச் சுற்றி கொண்டு வருகிறது.

நீ விடியலுக்கு வரும்போது உனது முழு இருப்பும் ஒளியாக இருப்பதை நீ
உணருகிறாய்.

ஒவ்வொரு இரவிற்கு பின்னும் விடியல் தொடரும்.

தனித்தன்மை

உனது மௌனத்தில் – வார்த்தைகள் ஏதுமற்ற, மொழிகளற்ற, யாருமற்ற தருணத்தில் – நீ பிரபஞ்சத்துடன் லயப்படுகிறாய். அந்த தூய்மை, அந்த அமைதி, அந்த ஒருமை, உன் முழு ஆற்றலுடன் வெளிப்பட உன்னை அனுமதிக்கும். முதன் முறையாக நீ தனித்தன்மையாக இருக்கிறாய்.

தனித்தன்மைக்கு தலைக்கனம் கிடையாது, தலைக்கனத்திற்கு தனித்தன்மை ஏதும் கிடையாது.

தனித்தன்மையுடையவனாக இருக்க உனக்கு புத்திசாலித்தனம், மற்றும் கூர்மையான உள்ளுணர்வு தேவை.

முற்றிலும் சுதந்திரமானவனாக, தனித்தன்மையுடையவனாக மலர ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமையை மதிக்க வேண்டும்.

தளைகளின்றி, சுதந்திரமாக, ஆணித்தரமாக, நேர்மையாக தனித்தன்மையுடையவனாக இரு.

உனது சமூக முகங்கள் அனைத்தும் உனது தனித்தன்மையை மறைக்கும் முகமூடிதான்.

உன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்து. பிரபஞ்சம் உன்னைப்பார்த்து பெருமைப்படட்டும்.

பயணம்

அறியாததை நோக்கி பயணப்பட நீ தயாராகும்போது, இறைமையை நோக்கி செல்ல நீ பயணப்படும்போது உன்னுள் பயம் எழும். உன்னிடம் எப்போதும் இல்லாத ஒன்றை இழக்கும் பயம், உன்னுடைய பழைய பழக்கவழக்கங்களை இழக்கும் பயம். இந்த பிரச்னைகள் உண்மையிலேயே பிரச்னைகள் அல்ல. நீ சரியான வழியில் பார்த்தால் அவை நீ வளர்வதற்கான சோதனைகள்தான்.

தன்னுணர்வை நோக்கிய பயணம் ஒரு மலையேறுதல்தான்.

பயணம் வீட்டிலிருந்து துவங்குகிறது, அது உன் அடிஆழத்திலிருந்து ஆரம்பமாகிறது.

உனது இயல்பை ஏற்றுக் கொண்டு அதை நேசிக்க ஆரம்பி. அங்கிருந்துதான் பயணம் துவங்கும்.

அன்பு மலர வில்லையென்றால் பின் முழு பயணமும் வீண்தான்.

பயணம் எப்போதும் துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.