1. தொடுதல்
தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும்,
உனது தொடுதலைக் கூட. ஒரு தியானிப்பவனின் தொடுதலில் கதகதப்பும் அன்பும் முழுமையாக
இருப்பதை நீ உணரலாம். அவர் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம். அவரிடம் சந்தோஷம்
அபிரிதமாக இருப்பதை நீ காணலாம், திருப்தியை நீ பார்க்கலாம், அவரால் அதை
கட்டுப்படுத்த முடியாது. அது அவரைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
தாமரை தண்ணீரில்தான் இருக்கிறது, ஆனால்
தண்ணீரால் அதை தொட முடியாது.
ஆழமான அன்புடன் யாராவது உனது கைகளை தொடும்போது
உனது கைகளும் உயிர் பெறுகின்றன.
ஒரு மலரைத் தொடும்போது இயற்கை எப்படி உள்ளதோ
அப்படியே உன்னால் அனுபவப்பட முடியும்.
நம்பிக்கைகள் உனது வாழ்வைத் தொட முடியாது,
ஏனெனில் நம்பிக்கைகள் வெறும் கருவிகளே.
பாதத்தின் கீழே உள்ள தொடு உணர்ச்சியின் மூலமாக
பாதையை உணர்ந்து பார்.
2. காத்திருத்தல்
காத்திருத்தல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
காத்திருத்தலை அதற்காகவே அதன் அனுபவத்திற்காகவே கொண்டாடு. எதற்காக என்று கேள்வி எழ
வேண்டிய அவசியமே இல்லாமல் அதன் தூய்மைக்காக, அதன் வெகுளித்தனத்திற்காக, அதன்
வாழ்த்துக்காக வெறுமனே காத்திரு. காத்திரு –
காத்திருத்தலின் அழகை உன்னால் பார்க்க முடியும்.
என்ன நிகழப் போகிறதென்று அறியாமல் காத்திருத்தல் மட்டுமே செய்யும்போது அதை
பார்ப்பாய்.
காத்திருத்தல் உன்னை உருக வைக்கும், மையம் தன்னை
வெளிப்படுத்த, உனது காத்திருத்தல் உதவி செய்யும்.
காத்திருத்தலுக்கு எந்த பொருளும் கிடையாது,
அதனால் தான் அது தியானமாகிறது.
காத்திருந்து காத்திருந்து காத்திருந்து நீ
காலியாவதுதான் பிரார்த்தனை.
காத்திருத்தல், முழுமை உன்னை முழுமையாக
ஆட்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்.
ஒரு உண்மையாகவே காத்திருப்பவனால் அவன் எதற்காக
காத்திருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது.
3. தேடுதல்
யாத்திரை கேள்வி கேட்டு, தேடி, துழாவுவதில்தான்
ஆரம்பமாகிறது. ஆரம்பிக்க வேறு எந்த வழியும் இல்லை. வாழ்வின்
பொருள் என்ன என்று கேள்வி கேட்காத வரை, இந்த பிரபஞ்சத்தின் அடி ஆழ
மையத்தை தேடாத வரை, நீ துளி கூட நகர்வதேயில்லை. ஒரு அடி கூட
எடுத்து வைப்பதேயில்லை. அப்போதுதான் அந்த தேடுதல் துவங்குகிறது.
நீ பணத்தை தேடுகிறாய் என்றாலே பதவியை,
அதிகாரத்தை, கௌரவத்தை தேடுகிறாய் என்றுதான் பொருள்.
தேடுதலும் ஒரு வகையான மெலிதான ஆசைதான்.
உன்னிடம் எல்லாமும் உள்ளது, ஆனாலும் நீ எல்லா
இடத்திலும் தேடுகிறாய் என்பது வேடிக்கையான ஒன்றுதான்.
நீ எதையாவது செய்ய முயற்சிக்கும்போது, நீ உனது
அகம்பாவத்திற்கு தீனி தேடுகிறாய் என்று அர்த்தம்.
உன்னால் எங்கு உருவாக்க முடிகிறதோ அந்த திசையில்
தேட துவங்கு.