என் நண்பனே,

அன்புக்கு இல்லை எல்லை,

அன்பு எனும் அணை போடும் வார்த்தையே தொல்லை.

அன்பு இதயத்தின் மொழி

உன் நிறைவில் பொங்கும் உணர்ச்சி.

அன்பு குறிகொண்டு செய்யும் செயல் அல்ல.

தன்னை மறந்து பிறக்கும் நடனம்.

பணம், பகட்டு, அந்தஸ்து, ஆடம்பரம், அதிகாரம்,
புகழ்

போன்ற ஆணவ மொழிகளில் பேசாது அன்பு,

நாடும் இனமும் மொழியும் சாதியும் கட்சியும்
அறியாதது அன்பு.

கருவறை மிதப்பில் நீ கண்டது அது,

அன்னையின் மார்பில் நீ குடித்தது அது,

காதலின் அணைப்பில் நீ காண்பது அது.

அன்பின் நினைவே மனிதனின் தேடல்,

அதன் சுவையே மனிதனின் படைப்பு,

அதன் நிழலே மனிதனின் உறவுகள்.

அருமை நண்பா,

அன்பு ஆளை மாற்றும் இரசாயனம்,

அதில் நீ குதி, குளி, குடி……

பயம் போகும்……பரவசம் பிறக்கும்.

இழக்க என்ன இருக்கிறது உன்னிடம்

போலி அடையாளம், பொய் முகம்.

நண்பா, நேசத்தில் நீ கரைகையில்,

முதன்முறையாக நீ இருப்பாய்,

ஆம்….இருப்பின் இயல்பாய்,

இறப்பெனும் எல்லை கடந்தவனாய்,

இயற்கையின் நடனமாய் நீ இருப்பாய்.

ஓ, என் நண்பர்களே, உறுதி எடுங்கள்.

நாம் நேசத்தில் புதிதாய் பிறப்போம்,

பிரிவும் பயமும் பிடுங்கித்தின்னும் –

இந்த பதுங்கு குழி சமுதாயம் தவிர்ப்போம்,

அன்பின் உச்சியை தேடும் பண்பே – அனைவரின்

ஒழுக்கமாய் அமையும்……..

புதிய உலகம் படைப்போம்,

அதன் புதிய மனிதனாய்,

அன்பு வழியில் புறப்படுவோம் இன்றே.