கடந்ததின் மனித உருவம்
மனித மொழி பேசும் பிரபஞ்சம்
காலத்தைக் கடந்த பின்னும் கட்டுப்பட்ட
மனிதனாய் தோன்றும் உருவம்.

குரு…..
ஒரு வகையில் பிரபஞ்ச இணைப்பு,
ஒரு வகையில் மரணம்

நான் ஒரு தேவ பைத்தியம்
இல்லை, இல்லை………….. நான் குருகாதலன்

நீங்கள் கேட்கிறீர்கள்
ஆன்மீகம் சலிக்கவே சலிக்காதா என்று,

குருவும் பிரபஞ்சமும் சலிப்பதில்லை
வாருங்கள் குரு அனுபவம் பெறுவோம்
குரு என்பது குறிப்பதே பிரபஞ்ச அனுபவம்தானே..

ஆகவே……….
குரு என் நம்பிக்கையல்ல.
வாழ்வனுபவம், வாய்த்த அனுபவம்.

நீ உயிர் வாழ்வதே பிரபஞ்சத்தின் அரவணைப்பில்தான்.
இதை அறிந்தவர்க்கு நம்பிக்கையெதற்கு.

நீ பிரபஞ்ச பயம் தவிர்,
ஏனெனில்………. பிரபஞ்சம் உன் கருவறை.
குருவின் பெருமை நிறைய பேர் அறியவில்லை.
குரு ஒரு இன்ஸுலேஷன் சுற்றப்படாத மின்சார கம்பி,
தொட்டால் தொலைந்து போவாய்.

ஆரவாரமே சமுதாயம் ஆனது
ஆகையால் சமுதாயம் ஆரவாரத்தை ஆராதிக்கிறது.
இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்கிறேன் நான்.
எல்லையற்றது என்று எதுவுமில்லை
என்று எல்லை வகுக்கிறீர்கள் நீங்கள்.

உண்மையான குருவை
இதயத்தால் சுவைத்துவிட்ட
ஒவ்வொரு மனிதனுக்கும்
அதுதான் கடைசி காதல்.
பிரபஞ்சத்தில் தளருமுன் நிகழும் கடைசி காதல்.

குருவும் பிரபஞ்சமும் அழிவதில்லை.
குரு, அவர் ஒரு தனிவகை.
உடலில் வாழும் பிரபஞ்சம்.
என்றும் உதவும் பிரபஞ்சம்.

நான் வெண் நிலவை பார்த்தபோதும்
குருவின் கண் பார்த்தபோதும்
மட்டும் பிரமித்திருக்கிறேன்.

நீ கேட்கிறாய்
எனக்கு குரு தேவைதானா
தேவையென்றில்லாமல் செய்யும் காரியங்களே
ஆன்மீக வளர்ச்சி…………

தேவையின் காரணமாக செய்யும் காரியம்
கட்டாயம்.

நான் என்ற நம்பிக்கையே
கற்பனை, கனவுகளின் ஆதாரம்
நமிபிக்கை ஓட்டம் அறுந்துவிட்டால்
கற்பனை கனவு நின்றுவிடும்.

நேற்றும் நாளையும் இல்லாத
வாழ்வின் தன்மைதான்
அதன் பரவசம், சுதந்திரம், படைப்பு, நடனம்.

இந்த நொடியே வாழ்வின் ஒரே உண்மை
வாழ்க்கையின் போக்கில் வளைந்துவிடு.
வாழ்க்கை வளமாகிவிடும்,
உன்னை வளர்த்துவிடும்.

அந்த நிலையே
வாழ்வின் உச்சம். அதுவே நீ செய்யும்
குரு சேவை.
அதுவே கடவுள்தன்மை,
சத்தியம், அழகு.

………………………………………………………………………………….தேவ பாகலிடம் பிறந்தது