தியான யுக்தி – 1
ஒரு வினாடியைக் கூட வீணாக்காதே
காலத்தை வீணடிக்காதே. நீ எதையாவது
விரும்பவில்லையென்றால் அது என்னவாக இருந்தாலும் அதில் இருப்பது ஒரு கணமேயானாலும்
அது தற்கொலையே. அதனால் என்ன இழப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடு.
அது உனது சக்தியை விடுவிக்கும், நீ வேறெங்காவது இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கதவை நீ மூடினால் வேறொரு கதவு திறக்கும். நீ இந்த கதவை மூடவில்லையென்றால் வேறு
எந்த கதவும் திறக்காது – ஏனெனில் வேறொரு கதவை திறப்பது இந்த சக்திதான்.
நீ ஒரே பெண்ணை தொடர்ந்து பிடித்து
வைத்துக் கொண்டிருப்பதில் நீ அவளை விரும்பாமல், அவளுடன் இருப்பதில் நன்றாக உணராமல்
இருந்தால் அது ஒரு தொடர் பிரச்னையாகத்தான் இருக்கும். அது உனக்கு மட்டும்
கெடுதலல்ல, அவளுக்கும் கெடுதல்தான். நீ உன்னிடம் பரிவு காட்டவில்லையென்றால்
பரவாயில்லை, அவளிடமாவது பரிவு காட்டு. அவளிடமாவது மனித்தன்மையுடன் நடந்து கொள். நீ
அவளை குறுக்குவது மட்டுமல்ல, உன்னையும்தான் குறுக்கிக் கொள்கிறாய். துன்பம் தரும்
உறவு எதுவாக இருந்தாலும் அது இருவரையும்தான் பாதிக்கும்.
இந்த உறவு மட்டுமல்ல, நீ இந்த
உறவில் தொடர்ந்து இருந்தால் அது வருங்காலத்து உறவையும் பாதிக்கும். இது உனது
கடந்தகாலத்தின் பாகமாக மாறி விடுவதால் அது பாதிக்கிறது. அது உன்னைச் சுற்றிக்
கொண்டிருக்கும். நீ இதுபோன்ற பெண்ணையே கண்டுபிடித்து, இதுபோன்ற சிக்கலில் மறுபடி
மறுபடி மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. இது உனது பழக்கமாகிவிடுகிறது.
நீ எந்த தொடர்பாவது நன்றாக இல்லை
என்பதை உணர்ந்தால் நான் சொல்வது நீ அதிலிருந்து வெளியே வந்துவிடு, அதிலிருந்து
வெளியே குதித்துவிடு. ஒரு வினாடி கூட வீணாக்காதே.
தியான யுக்தி – 2
பார்வையாகவே மாறி விடு
ஒரு காரிலோ அல்லது ரயிலிலோ பயணம்
செய்கிறாய் – நீ அப்போது என்ன செய்யப் போகிறாய்
கவனத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். காலத்தை வீண் செய்யாதே. அரைமணி
நேரம் ரயிலில் அமர்ந்திருக்கப் போகிறாய் – கவனத்தை கூர்மைப்படுத்த முயற்சி செய்.
வெறுமனே அங்கிரு, எதையும் சிந்தனை செய்யாதே. யாரையாவது பார், ரயிலைப் பார், வெளியே
பார். ஆனால் வெறுமனே அங்கிரு, எதையும் சிந்திக்காதே. சிந்தனையை நிறுத்தி விடு.
அங்கிரு, பார். உனது பார்வை நேரடியாகவும், ஊடுருவுதாகவும் அமையட்டும். நீ எங்கே
பார்த்தாலும் அந்த பார்வை திரும்ப பிரதிபலித்து வரும்போது நீ பார்ப்பவனைப்பற்றிய
விழிப்புணர்வு அடைவாய்.
தியான யுக்தி – 3
உனது நாளின் ஆரம்பமும் முடிவும்
சிரிப்பாக இருக்கட்டும்
சில ஜென் மடாலயங்களில் ஒவ்வொரு
துறவியும் காலை எழுந்தவுடன் சிரிக்க வேண்டும், மேலும் இரவு படுக்கப்போகும்
முன்னும் சிரிக்க வேண்டும். நாளின் முதல் விஷயமும் கடைசி விஷயமும்
சிரிப்பதாகத்தான் இருக்க வேண்டும். இதை நீ முயற்சி செய்து பார். இது மிகவும்
அற்புதமானது. அது பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஏனெனில்
சுற்றிலும் கடுகடுப்பான மக்கள்தானே இருக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள
முடியாது. நீ மகிழ்ச்சியோடு இருந்தால் இவர்கள் ஏன் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்று கேட்பார்கள். அந்த கேள்வியே மடத்தனமானது.
மெது மெதுவாக சிரிப்பு அதிகமாவதை
நீ காணலாம். முயற்சி செய்து பார். நீ சிரிக்க சிரிக்க அதிக அளவு மதத்தன்மையடைவதை
நீ உணரலாம்.
தியான யுக்தி – 4
மனதை சந்தோஷமாகவே வைத்திருத்தல்
இது உனது வாழ்க்கையின் அடிப்படை
விதிகளில் ஒன்றாகவே மாறட்டும். நீ ஏதாவது எதிர்மறையானதை கடந்து வர நேர்ந்தால் கூட
அதில் எதையாவது நேர்மறையானதை காண முயற்சி செய். ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க
முடியும். எதிர்மறையிலும் நேர்மறையானதை கண்டுபிடிக்க கூடிய தகுதி நீ பெற்று விட்டால்
நீ சந்தோஷத்தில் நடனமாடுவாய்.
முயன்று பார், வாழ்வின் புது
கண்ணோட்டதை முயற்சி செய். நேர்மறையாளனாக இரு, எதிர்மறையாளனாக இராதே. எதிர்மறையாளன்
தன்னைச் சுற்றிலும் நரகத்தை உருவாக்கிக் கொண்டு தானும் அதில் இருப்பான். நீ எந்த
உலகத்தை உருவாக்குகிறாயோ அதில்தான் நீ இருப்பாய்.