தியான யுக்தி – 1

ஜன்னலை திறந்து விடு

தியானம் என்பது ஒரு செயலல்ல.
காத்திரு. தளர்வாக காத்திரு. படுத்திரு அல்லது உட்காந்திரு அல்லது நின்றுகொள் –
எது உனக்கு நன்றாக இருக்கிறதோ அப்படி – அதற்காக காத்திரு. காத்திரு, கவனமாக இரு,
விரைவில் நீ அதன் கிசுகிசுப்பை கேட்பாய், உன்னை நெருங்கி வரும் ஏதோ ஒன்றின்
அமைதியான காலடி ஓசையை கேட்பாய். விரைவில் உனது இதயத்தில், உனது இருப்பில் ஏதோ
நுழைவதை உணர்வாய். உன்னால் அதை பார்க்கமுடியாது. ஆனால் அது அங்கிருக்கும். அது ஒரு
மணம் போல உனது நாசியை நிறைக்கும். அது ஒளி போன்றது. உனது ஜன்னலை திறந்து வை. இதை
மட்டுமே நீ செய்ய வேண்டியது. ஜன்னலை திறந்து வைத்திருக்க வேண்டியது. அப்போது ஒளி
எழும் போது மேகங்கள் இல்லாத போது சூரியன் உயரே எழும் போது ஒளிக்கதிர்கள் உன்னுள்
நுழையும்.

தியான யுக்தி – 2

ஆணாதிக்க மனம் சிக்கலானது

ஒரு பெண்ணை நேசித்தால் நேசி.
ஆணாதிக்க மனப்பான்மை விளையாட்டை விளையாடாதே. பெண் அருகில் வர இந்த ஆண்
விரும்பினால்கூட அது வேண்டாம் என்றே சொல்லும், ஏனெனில் எனக்கு யாரும் தேவையில்லை,
எனக்கு நானே போதும். உனக்கு நான் வேண்டும் என்றால் நீ வரலாம். ஆனால் எனக்கு நீ
தேவையில்லை என்பது போல நடிக்கும் இந்த ஆணாதிக்க மனம் அத்தகையது.

இது மடத்தனம். நீ ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது. அது தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கும். வாழ்க்கையே அதனளவில் போதுமான அளவு சிக்கலானது, அதை மேலும் சிக்கலாக்காதே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக்கு. ஆம் என்றால் ஆம் என்று சொல், இல்லை என்றால் இல்லை என்று சொல்.
குழப்பத்தை உருவாக்காதே.

தியான யுக்தி  – 3

வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள், உள்ளே வந்து விடு

கவனமாக இருப்பதற்கு எல்லா வாய்ப்புகளையும்  – எல்லா வாய்ப்புகளையும் –
பயன்படுத்திக் கொள். ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. கவனமாக
இரு, வெளிப்புறத்திலிருந்து மையத்திற்கு நீ குதிப்பதை நீ உணர்வாய். மையத்தில்
இருப்பது உனக்கு எளிதாக இருக்கும். நீ வெளியே இருக்கிறாய், அங்கே வெப்பமாக
இருக்கிறது, அதனால் உள்ளே வருகிறாய். எப்போதெல்லாம் உள்ளே வர வேண்டும் என
விரும்புகிறாயோ அப்போதெல்லாம் உள்ளே வரலாம். எப்போதெல்லாம் வெளியே செல்ல
விரும்புகிறாயோ அப்போதெல்லாம் வெளியே செல்லலாம். அதில் கஷ்டம் ஏதுமில்லை.

தியான யுக்தி  – 4

சாந்தமாக இருக்கும் போது பார்.

எப்போதெல்லாம் நீ அதிக சாந்தமாக உணர்கிறாயோ அப்போதெல்லாம் நீ சரியான திசையில்தான் செல்கிறாய் என்பதை நினைவில் கொள். என்ன நிகழ்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதே. மேலும் அதிக அமைதியை,
சாந்தத்தை, மௌனத்தை, உணர்தலே நீ இறைமையின் தோட்டத்தை நெருங்குகிறாய் என்பதற்கான
அடையாளம். அந்த சாந்தமே நீ அந்த குளுமையான தோட்டத்தின் அருகே இருக்கிறாய் என்பதை
காட்டுகிறது. நிழலடர்ந்த மரங்கள் உனக்காக காத்திருக்கின்றன. தென்றல் வாசமாக,
குளிர்ச்சியாக வீசுகிறது. நீ அதை காற்றில் உணரலாம். நீ அதை சூழ்நிலையில் உணரலாம்.
சாந்தம் தான் பரவசத்தின் முதல் அறிகுறி. அமைதிதான் தூரத்தில் உள்ள சிகரத்தின்
முதல் தரிசனம்.