தியான யுக்தி – 1

 

ஏற்றுக் கொள்ளுதல் செய்யும் வித்தை

ஆரம்பம் – ஏற்றுக் கொள்

உனக்கு என்ன நிகழ்ந்தாலும் நீ அதை உன் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள். அதை
கண்டனம் செய்யாதே.

இரண்டாவது – முழுமையே இயற்கை

மரங்கள் மட்டுமல்ல, மேகங்கள் மட்டுமல்ல – முழுமை. என்ன நிகழ்ந்தாலும் அது
இயற்கையினால்தான் நிகழ்கிறது. இயல்பில்லாதது எதுவுமேயில்லை, இருக்க முடியாது.
இல்லாவிடில் அது எப்படி நடக்கும் ஒவ்வொன்றும் இயற்கையானது. அதனால் இது இயற்கையானது
இது இயற்கையில்லாதது என பிளவு ஏற்படுத்தாதே. என்னவாக இருந்தாலும் அதை அப்படியே
ஏற்றுக் கொள், அதை ஆராயாதே.

நீ மலையில் இருந்தாலும் சரி, மார்கெட்டில் இருந்தாலும் சரி நீ அதே
இயற்கையில்தான் இருக்கிறாய். சில இடங்களில் இயற்கை மலையாக, மரமாக இருக்கிறது, சில
இடங்களில் இயற்கை மார்க்கெட்டில் கடைகளாக இருக்கிறது.

ஒருமுறை நீ ஏற்றுக் கொள்ளுதலின் ரகசியத்தை தெரிந்து கொண்டு விட்டால் பின்
கடைவீதியும் கூட அழகானதாகி விடும். கடைவீதிகென்றே ஒரு அழகு இருக்கிறது. அங்கே உள்ள
அதன் வாழ்வு, அந்த துடிப்பு, சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த அழகான
கிறுக்குத்தனம் எல்லாமும் அழகானது. அதற்கே உரிய அழகு இருக்கிறது. மேலும் கடைவீதி
இல்லையென்றால் மலைகள் அவ்வளவு அழகாக இருக்காது. மலைகள் அவ்வளவு அழகாகவும் அவ்வளவு
அமைதியானதாகவும் இருக்க காரணம் கடைவீதி இருப்பதுதான். கடைவீதிதான் மலைகளுக்கு
மௌனத்தை கொடுக்கிறது.

நீ ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து உன்னை முழுமையாக மறந்து விடலாம். நீ
கரைந்து போய்விடும் அளவு உன்னை மறந்து விடலாம். நீ தெருவில் நடனமாடலாம், நீ
உன்னையே மறந்து விடும் அளவு உன்னை இழந்து நடனமாடலாம். என்ன நிகழ்ந்தாலும் அதில்
முழுமையாக கரைந்து ஒன்றி போய் விடுதலே அதன் ரகசியம். உனது மேகம் நகரும் வழியை
கண்டுபிடி, பொழியும் இடத்தை பார், அதை முழுமையாக அனுமதி. எங்கே அது பொழிந்தாலும்
அது தெய்வீகத்தை சென்று சேரும். சண்டையிடாதே. மித, நதியுடன் போராடாதே. அதனுடன்
மிதந்து போ. நடனத்துடன் நீ முழுமையாக ஒன்றி போகும்போதுதான் அது அழகானது, அதுதான்
முக்கியம். எதையும் புறந்தள்ளாதே. புறந்தள்ளுதல் ஆன்மீகமானதல்ல. முழுமையாக ஏற்றுக்
கொள். ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை.

My  Way :  The Way of The White  Clouds

 

தியான யுக்தி  – 2

உள்குரலை கவனித்தல்

 நீங்கள் எங்களிடம் உன் உள் குரலை கேட்டு அதன் மூலம் செயல்படு என்று
கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு மனதின் குரல் மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு
மிக நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது எதனால் அப்படி கூறுகிறீர்கள்
வெறுமைக்கு கூட குரல் உண்டா

ஆம். வெறுமைக்கு என்று அதற்கே உரித்தான குரல் உண்டு. அது உண்மையில் குரலே
அல்ல. அது ஒரு உத்வேகம். அது ஒரு சப்தம் அல்ல. அது மௌனம். யாரும் இதை செய் என்று
சொல்வதில்லை, நீயே அதை செய்ய வேண்டும் போல உணர்கிறாய். உள்குரலை கேட்பது என்பது
எல்லாவற்றையும் உள்ளே உள்ள வெறுமையிடம் விட்டுவிடுவது. பின் அது உன்னை
வழிநடத்தும்.

நீ வெறுமையாக செல்லும்போது எப்போதும் சரியாகத்தான் செல்வாய். உன்னிடம் உள்
வெறுமை இருந்தால் எதுவும் தவறாகாது. எதுவும் தவறாக முடியாது. வெறுமையில் எதுவும்
தவறானதில்லை. இதுதான் எப்போதும் சரியானது என்பதற்கான சான்று. ஆம். வெறுமைக்கென்று
ஒரு குரல் உண்டு, மௌனத்திற்கென்று ஒரு இசை உண்டு, அசைவற்றது அதற்கே உரிய நடனத்தை
கொண்டுள்ளது. ஆனால் நீ அதை சென்றடைய வேண்டும்.

நான் மனதை கேள் என்று சொல்ல வில்லை. உண்மையில் மனது உன்னுடையதே அல்ல. நான்
உன்னுடைய குரலை கேள் என்று நான் சொல்லும்போது இந்த சமுதாயம் உனக்கு கொடுத்த
எல்லாவற்றையும் விட்டுவிடு என்றுதான் கூறுகிறேன். இந்த மனம் சமுதாயத்தால் உனக்கு
கொடுக்கப்பட்டது. உனது மனம் உன்னுடையது அல்ல. அது சமுதாயம், அது
கட்டுத்திட்டப்படுத்தப்பட்டது. அது சமுதாயம். வெறுமை உன்னுடையது. மனம் உன்னுடையது
அல்ல. மனம் ஒரு இந்துவாக, முகம்மதியனாக, கிறிஸ்டியனாக. கம்யூனிஸ்டாக,
முதலாளித்துவமானதாக, கம்யூனிஸத்திற்க்கு எதிரானதாக இருக்கலாம். வெறுமை
ஏதுமில்லாதது. யாருமில்லாதது. அந்த ஏதுமற்ற தன்மைதான் உன்னுடைய இருப்பின் தூய்மை.
அதை கவனி.

நான் கவனி என்று சொல்லும்போது, யாரோ ஒருவர் உன்னிடம் அங்கிருந்துகொண்டு
பேசுகிறார் என்று நான் சொல்லவில்லை. அதை கவனி என்று நான் சொல்லும்போது அதற்கு நீ
கிடைக்கக்கூடியவனாக இரு, உன் இருப்பு அதில் இருக்கட்டும், உன் செவி அதற்கு
திறந்திருக்கட்டும் என்று கூறுகிறேன். அது உன்னை வழி நடத்தும், அது யாரையும் தவறாக
வழிநடத்தியதில்லை. இந்த ஏதுமற்ற தன்மையிலிருந்து வெளிவரும் எதுவுமே அழகானதாக,
சத்யமானதாக, சிறந்ததாக, வரமாகத்தான் இருக்கும்.

Yoga : The Alpha And the Omega