ஓஷோ   மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதும் அதைப் பற்றி அவர் கூறும் விளக்கங்களும் இனி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளத்தாக்கு என தொடர்ந்து வரும்.

முன்னொரு காலத்தில் ஒரு பெண்
இருந்தாள். அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். அவள் மற்றொரு
மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள். பின் மற்றொரு மதத்தின் கொள்கை
மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள். ஒவ்வொரு முறை அவள்
வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும்
ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள். ஒவ்வொரு முறை அவள் மதம்
மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது
தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் அவளது மனநிலையோ
குழப்பமாகத்தான் இருந்தது. இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக்
என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்.

அவளது முயற்சிகளையும்
கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். நான்
எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.

விரைவிலேயே அந்த ஞானியின் சீடர்
ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு
பார்சல் இருந்தது. அவள் அதை திறந்து பார்த்தாள். அதில் ஒரு கண்ணாடி பாட்டில்
இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக
நிரப்பப்பட்டு இருந்தது. மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது. அதன்கூடவே இந்த
பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான்
நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.

அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு
அந்த பாட்டிலை குலுக்கினாள். பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட
மணல் பாட்டில்.

மனிதன் முரண்பாடுடையவன். மனிதன்
மட்டுமே மிருகமாகவும் மனிதனாகவும் இருக்கக் கூடியவன். அதுதான் முரண்பாடு. அதுதான்
அவனது தனித்துவம். மனிதனின் சிறப்பே அவனுக்கு உள்ளே உள்ள உள்முக முரண்பாடுதான்.
மற்ற அனைத்து மிருகங்களும் முரண்பாடு உடையவை அல்ல.

ஒரு மரம் மரம் மட்டுமே. ஒரு நாய்
நாய் மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் அது மட்டுமே என்பது போன்ற நிலை கிடையாது.
அவன் எப்போதுமே வளர்ச்சியடைபவன், நிலைமாற்றமடையக் கூடியவன். மனிதன் எப்போதும்
தன்னையே கடந்து செல்கிறான். அதுதான் அவனது முரண்பாடு. அது அவனது ஆழ்நிலை இருப்பு.
அது தற்செயலானதல்ல, அதுதான் அடிப்படையே. நீ இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டால்
மனித்தன்மை பற்றிய முதல்தரிசனம் உனக்கு ஏற்படும்.

மனிதன் என்பவன் எப்போதும் ஒரு
திட்டம்தான், ஒரு வளரக்கூடியவன்தான். அவனது இருப்பு வளரக்கூடியது, அதுதான்
முரண்பாடு. அவன் எப்போதும், முன்பு எப்படி இருந்தானோ அதற்கும் இனிமேல் என்னவாக
மாறப் போகிறானோ அதற்கும் இடையில் இருக்கிறான். அவன் எப்போதும் அவனது கடந்த
காலத்திற்கும் அவனது எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கிறான். கடந்த காலமும்
எதிர்காலமும் ஆன இரண்டு நிரந்தரத்திற்கிடையே ஆன பாலம் அவன். அவன் கடந்து செல்பவன்,
தொடர்ந்து கடந்து சென்று கொண்டே இருப்பவன். மனிதன் அவன் என்னவாக இருக்கிறானோ அதில்
நிறைவடைவது இல்லை. அவன் கடந்து செல்ல முயன்று கொண்டே இருக்கிறான். எப்போதும்
முயன்று கொண்டே இருக்கிறான். அவன் என்ன செய்தாலும் அடிப்படையில் அவனது முயற்சி
எப்படி மேன்மேலும் உயர்வது, மேன்மேலும் சிறப்படைவது, மேன்மேலும் வளர்வது
என்பதிலேயே இருக்கிறது.

மனிதன் ஒரு முன்னேறுபவன், ஒரு
வழிப்போக்கன், ஒரு பயணம்தான். அவனது வாழ்வே ஒரு புனிதப்பயணம்தான், முடிவற்ற
பயணம்தான், அது போய்க் கொண்டே இருக்கும். ஒரு நாய் பிறக்கிறது, ஒரு மரம்
பிறக்கிறது – மரம் ஒரு மரத்திற்குரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது, நாய்
அதற்கேரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது. மனிதன் அது போன்ற கொடுக்கப்பட்ட
யதார்த்தமல்ல. மனிதன் மறைந்துள்ள ஆற்றலுடன், ஒரு சாத்தியக்கூறாக பிறக்கிறான்.
மனிதன் வெறுமையாக, வெற்றுத்தாளாக பிறக்கிறான். எதுவும் எழுதப்படவில்லை.

மற்ற உயிரினங்கள் அனைத்தும் ஒரு
குறிபிட்ட ஜீவிதத்தை ஒரு குறிப்பிட்ட உயிரமைப்பை கொண்டுள்ளன. மனிதன்
எதிரிடையானவன். அவனது இருப்பு முதலில் வந்து விடுகிறது. அவன் அவனது உயிரமைப்பை
தேடுகிறான். மற்ற விலங்குகளில் உயிரமைப்பு முதலில் வந்து விடுகிறது, பின் இருப்பு
வருகிறது. அவை ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட உள்ளடங்கிய அமைப்புடன் வருகின்றன. அவை
வளருவதேயில்லை, அவை அப்படியேதான் இருக்கின்றன. அதனால்தான் அவை வெகுளியாக,
கவலையற்று, பதட்டமற்று இருக்கின்றன. ஒரு பசுவின் கண்களைப் பார் – எவ்வளவு அமைதி,
எவ்வளவு அடக்கம், எவ்வளவு சாந்தம் – அதில் வேதனையோ கவலையோ எதுவும் இருக்காது.
தெளிவாக இருக்கும். மனிதனின் கண்களைப்பார், அவை எப்போதும் தெளிவற்று இருக்கும்.
அதில் எப்போதும் ஒரு வேதனை இருக்கும். அதில் எப்போதும் ஒரு நடுக்கமிருக்கும். நான்
இதை செய்து முடிப்பேனோ இல்லையோ என்னால் என்னை கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ நான்
நிறைவடைவேனோ இல்லை நிறைவடையாமல் நின்று விடுவேனோ என்ற பதட்டம் இருந்து
கொண்டேயிருக்கும்.

விலங்குகள் தளர்வாக ஓய்வாக
இருக்கின்றன. மனிதன் இறுக்கத்தில் இருக்கிறான். அதுதான் அவனது சிறப்பு, அதுதான்
அவனது வேதனை. அதுதான் அவனது அழகு, அதுதான் பிரச்னை. அவனால் அவனை செதுக்க முடியும்
அதுதான் அவனது தனித்துவம், அவன்தான் கடவுள். அவனால் அவனை செதுக்கமுடியாமல் போய்விடலாம்,
அவன் தோல்வியடையலாம், என்ன நிகழுமென்பது யாருக்குத் தெரியும் அதுதான் அவனது வேதனை.
சுதந்திரத்தினால் அது சிறப்பானது. அவன் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டவனல்ல. ஏற்கனவே
உருவாக்கப்பட்ட அமைப்புடன் பிறக்காத ஒரே விலங்கு மனிதன்தான். அவனுக்கு வழிமுறை
இல்லை. அவன் திட்டமிடப்பட்டவனல்ல.

மனிதன்தான் செயல்முறை
திட்டமற்றவன். அவன் பிரபஞ்சத்தினுள் ஏதுமற்றவனாக வருகிறான். பின் அவன் அவனது
உயிரமைப்பை துழாவ ஆரம்பிக்கிறான். அவன் தேடி திரிந்து உருவாக்க ஆரம்பிக்கிறான்.
மனிதனே ஒரு சாகசம்தான்.

ஆனால் சாகசத்துடன் நிலையற்றதும்
பாதுகாப்பற்றதும், தோல்வியும் பயமும் இருக்கும். தவறாக போய்விடலாம். தவறாகப்
போய்விடக் கூடிய வாய்ப்புதான் அதிகம். சரியாக செல்லக்கூடிய வாய்ப்பு குறைவு.
ஆயிரத்தோரு வழிகள் உள்ளன. எது சரியானது. நீ எப்போதும் தவிப்பில்தான் இருப்பாய். நீ
எதை தேர்ந்தெடுத்தாலும் அதை உறுதியோடு தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் இந்த பாதை
உன்னை உனது குறிக்கோளுக்குத்தான் கூட்டிச் செல்லும் என்ற உறுதி உனக்கு
இருக்கமுடியாது. அது சென்றடையலாம் அல்லது அது ஒரு பாலைவனத்தில் சென்று முடியலாம்.

மனிதனின் சிறப்பே அவனது சுதந்திரம்தான்.
அவனால் அவனை உருவாக்கிக் கொள்ள முடியும், அவனால் அவனாக இருக்கமுடியும். எதுவும்
அவனுக்கு கட்டாயமில்லை, எதுவும் அவன்மேல் திணிக்கப்படவில்லை. மனிதனின் துயரம்
என்னவென்றால் அவனால் உறுதியாக இருக்கமுடியாது, அவன் சரியான பாதையில்தான்
இருக்கிறான் என்று உறுதி கொள்ள முடியாது, அவன் செய்வது அர்த்தமுடையதா இல்லையா
என்று கூற முடியாது என்பதுதான்.

மனிதன் கிறுக்காகிவிட்ட ஒரே
விலங்கு. அவன் சந்திக்கவேண்டிய தீர்க்கவேண்டிய பிரச்னை உண்டு. அவன் அதை கடந்து வளர
வேண்டும். இதுதான் நீ புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம் என நான் உனக்கு சொல்ல
விரும்புகிறேன்.

மிகச் சிறந்த சூஃபி ஞானி ஒருவர்
இருந்தார். – அவர் எல்லா ஞானிகளைவிடவும் மிகவும் சிறந்தவர் – அவர் பெயர் அல்
ஹாஜலை. அவர், மனிதனிலிருந்து கடவுளுக்கு, மனிதனின் ஆற்றலிலிருந்து
நிதர்சனத்திற்கு, சாத்தியக்கூற்றிலிருந்து நிஜத்திற்கு என மனிதனின் வளர்ச்சிப்
பாதையில் ஏழு நிலைகள் – ஏழு பள்ளத்தாக்குகள் – உள்ளன எனக் கூறியுள்ளார். இந்த ஏழு
நிலைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை புரிந்து கொள்ள முயற்சி செய்.
ஏனெனில் நீ இவற்றை கடந்து வர வேண்டும். ஒவ்வொருவரும் இந்த ஏழு நிலைகளையும் கடந்து
வந்தாக வேண்டும்.

அந்தந்த பள்ளத்தாக்குடன் என்ன
செய்ய வேண்டும் என்பதை நீ சரியாக புரிந்து கொண்டால் நீ அதை எளிதாக கடந்து விடலாம்.
சிகரத்தை அடையலாம். ஏனெனில் ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மலைஉச்சிகளால்
சூழப்பட்டுள்ளது. உன்னால் பள்ளத்தாக்கை கடந்து செல்ல முடிந்தால்,  நீ பள்ளத்தாக்கில் சிக்கிக்
கொள்ளவில்லையென்றால், நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போக வில்லையானால், நீ
பள்ளத்தாக்குடன் பந்தம் கொள்ளாவிடில், நீ பந்தமற்று ஒரு சாட்சியாக தனிப்பட்டவனாக
இருந்தால், சிகரத்தை மறக்காமல் இருந்தால், நான் மலைஉச்சியைதான் சென்றடைய வேண்டும்,
நான் இங்கு ஒரு அன்னியர்தான், இது எனது வீடல்ல என்பதை மறக்காமல் தொடர்ந்து
நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் நீ சிகரத்தை சென்றடைவாய். ஒவ்வொரு பள்ளத்தாக்கை
கடந்தபின்னும் அங்கு கொண்டாட்டம் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு பள்ளத்தாக்கை
கடந்தபின்னும் நீ மற்றொரு பள்ளத்தாக்கினுள் நுழைய வேண்டும். இது போய்க்கொண்டே
இருக்கும். ஏழுபள்ளத்தாக்குகள் உள்ளன. நீ ஏழாவது பள்ளத்தாக்கை கடந்துவிட்டால் பின்
முடிந்தது. அப்போது மனிதன் தன் இருப்பை சென்றடைந்து விடுகிறான். அவன் இப்போது
முரண்பாடானவனல்ல. அங்கு தவிப்பில்லை, வேதனையில்லை. இதைத்தான் நாம் புத்தநிலை என்று
அழைக்கிறோம். இதைத்தான் கிறிஸிதுவர்கள் கிறிஸ்து நிலை என்று அழைக்கின்றனர்.
ஜைனர்கள் ஜைனநிலை என்று அழைக்கின்றனர். வெற்றி பெற்ற நிலை. அதற்கு பல பெயர்கள்.
ஆனால் மனிதன் கடவுள் நிலை அடையும்வரை அவன் தவிப்பில் இருப்பான் என்பதுதான்
அடிப்படையான ஒன்று. கடவுள் நிலையை அடைவதற்கு முன் ஏழு நிலைகள் ஏழு பள்ளத்தாக்குகள்
கடக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நிலையும் அதற்கே உரித்தான
கவர்ச்சியை கொண்டுள்ளது. நீ அதில் ஈர்ப்பு அடைந்து அதிலேயே இருந்து விடும்
வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. நீ இரண்டாவது பள்ளத்தாக்கினுள் செல்ல இதிலிருந்து
வெளியே சென்றாக வேண்டும். இதை விட்டாக வேண்டும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்க்கு
பின்னும் ஒரு சிகரம் ஒரு மிகஉயர்ந்த மலைஉச்சி இருக்கும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்கு
பின்னும் ஒரு கொண்டாட்டம் இருக்கும். அந்த கொண்டாட்டம் மேலும் மேலும் ஆழமானதாக
இருக்கும். இறுதியாக  ஏழாவது பள்ளத்தாக்கில் நீ அந்த ஆனந்த பிரபஞ்சநிலையை அடைந்து விடுகிறாய். நீ
கரைந்துவிடுகிறாய். பின் அங்கு கடவுள் மட்டுமே இருக்கிறார்.

இந்த ஏழு பள்ளத்தாக்குகளை
பற்றியும் கவனித்து கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய். அல் – ஹாஜலில் ஏதோ
தத்துவார்த்தமாக பேசுகிறார் என்று நினைக்காதே. சூஃபிகள் தத்துவத்தில் அக்கறை
கொள்வதில்லை. அவர்கள் மிக யதார்த்தமான மக்கள். அவர்கள் எதையாவது சொன்னால் அதில்
பொருள் இருக்கும்.அவர்கள் எதையாவது சொன்னால் அது தேடுபவர்களுக்கானது, அது வெறுமனே
ஆவல் கொண்டவர்களுக்கானதோ, அறிவு பூர்வமானவர்களுக்கானதோ அல்ல. அது உண்மையை அடைய மிக தீவிரமாக முயற்சி செய்பவர்களுக்கானது, அந்த பாதையில் இருப்பவர்களுக்கானது, அது
தேடுபவர்களுக்கானது.

முதல் பள்ளத்தாக்கு………….
அது அறிவு பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

இயல்பாகவே அறிவு முதலில் வரும்.
ஏனெனில் மனிதன் அறிந்து கொள்வதில் இருந்துதான் ஆரம்பமாகிறான். வேறு எந்த
மிருகத்திற்கும் அறிவு இல்லை. மனிதன் மட்டுமே அறிந்து கொள்கிறான். மனிதன் மட்டுமே
அறிவை சேகரித்து வைத்துக் கொள்கிறான். மனிதன் மட்டுமே எழுதுகிறான், படிக்கிறான்,
பேசுகிறான். மனிதனுக்கு மட்டுமே மொழி, கொள்கைகள், வேதங்கள் உள்ளன. அதனால்
அறிவுதான் தகவலறிவுதான் முதல் பள்ளத்தாக்காக இருக்க முடியும்.

இந்த பள்ளத்தாக்கின் எதிர்மறையான
விஷயம் என்னவென்றால் நீ தகவலறிவால் கவரப்படுவாய். நீ அறிவானவனாக மாறலாம், நீ
தகவலறிவின் உண்மையான காரணத்தை மறந்து விடக்கூடும். நீ தகவலறிவுடன் மிகவும்
ஒன்றிவிடலாம். பின் மேலும் மேலும் அறிவை சேர்த்துக் கொண்டே போகலாம். பல
பிறவிகள்கூட அறிவை சேர்க்கலாம். நீ மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராக,
பண்டிதர்களில் ஒருவராக கூட ஆகலாம். ஆனால் நீ ஒரு தெரிந்து கொண்டவனாக முடியாது.

தெரிந்து கொள்வதற்கான வழி அறிவைச்
சேகரிக்கும் வழியிலிருந்து வேறுபட்டது.

அறிவு வரும்போது இரண்டு விஷயங்கள்
நிகழ்கின்றன. அறிந்து கொள்ளும் விஷயம் – நீ ஏதோ ஒன்றை அறிந்து கொள்கிறாய்.
அடுத்து, தன்னுணர்வு – பிரதிபலிப்பு – அறிந்து கொள்ளும் நீ. அறிந்து கொள்ளும்
உன்னை விட்டுவிட்டு அறிந்து கொண்ட விஷயத்துடன் நீ மிகவும் ஒன்றி விடும்போது
பள்ளத்தாக்கில் நீ தொலைந்துவிடுகிறாய். உன்னை கவரும், உன்னை சிக்க வைக்கும், நீ
ஒன்றிவிடும் பாகத்தைத்தான் நான் எதிர்மறை என்றழைக்கிறேன்.

நீ அறிவானவனாக மாறிவிட்டால் நீ
தொலைந்து போவாய். நீ இந்த முதல் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதில்லை. தகவலறிவு
அதிகம் பெற பெற நீ அதிக குழப்பமடைவாய் – ஏனெனில் எது உண்மை என்று முடிவு செய்ய
வழியேயில்லை.

நீ காதால் கேட்பது எதுவுமே
தர்க்கரீதியாக சொல்லப்பட்டால், மிகச் சரியாக உன்முன் வைக்கப்பட்டால், அது
சரியானதாக தோன்றும். முடிவு செய்ய உனக்கு வேறு வழியேயில்லை. அதற்கு அளவுகோல்
இல்லை. அதனால்தான் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீ ஒரு குருவிடம் செல்கிறாய்,
அவர் சொல்வதை நீ கேட்கும்போது அது சரியானதாக தோன்றுகிறது. நீ வேறொரு குருவிடம்
சென்று அவர் கூறுவதை கேட்கும்போது அதுவும் சரியானதாக தோன்றுகிறது. நீ ஒரு புத்தகத்தை
படிக்கிறாய், அது சரியானதாக தோன்றுகிறது. வேறொரு புத்தகத்தை – அதற்கு நேர்
எதிரிடையானதை – படிக்கிறாய். அதுவும் அதற்கான தர்க்கத்துடன் படிக்கும்போது அதுவும்
சரியானதாக தோன்றுகிறது. சரியானது என்று முடிவு செய்ய இங்கு வழியேயில்லை. நீ
சேர்த்துக் கொண்டே போனால் எதிர்மறையானவற்றையும் – வேறுபட்ட கோணங்களை – சேர்த்துக்
கொண்டே போவாய். கோடிக்கணக்கான நிலைப்பாடுகள் உள்ளன. விரைவிலேயே நீ தத்துவங்களின்
கோட்பாடுகளின் கூட்டமாக மாறி விடுவாய். அது உதவப் போவதில்லை, அது மிகுந்த இடையூறாக
மாறிவிடும்.

அறிவு பள்ளத்தாக்கில் ஒருவர்
கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அறிந்து கொள்கிறோம் என்பதில்
மட்டுமே தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். பொருளைப்பற்றியோ, விஷயத்துக்கோ
முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சாட்சியாக இருப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் மேலும் சுதாரிப்புடனும் விழிப்புடனும் இருந்தால் தெரிந்து கொள்பவராக
மாறலாம். பல விஷயங்களை அறிந்து கொள்வதால் அல்ல, விழிப்புணர்வுடன் இருப்பதால்
மட்டுமே ஒருவர் உண்மையான தெரிந்து கொள்பவராக மாற முடியும்.

தகவல் அறிவு பாதை, கருத்துகள்
நம்பிக்கைகள் முறைகள் கொண்ட ஆன்மீக நூல்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல.  அது தெரிந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டது. நீ தெரிந்து கொள்கிறாய். தன்னுணர்வு அடைவதற்கு உன்னிடம் அளவு கடந்த ஆற்றல் இருக்கிறது. பெற்றுக் கொள்பவரைப் பற்றி அக்கறை கொள். விழிப்புணர்வடை. பெற்ற
விஷயத்தை பொருட்படுத்தாதே.

அறிந்து கொண்ட விஷயத்தைப் பற்றி
அக்கறைப் படாதே. அறிந்து கொண்டுள்ளவரைப் பற்றி அக்கறை கொள். அறிவு இருபுறமும் முனை
கொண்ட அம்பு போன்றது. ஒருமுனை அறிந்த விஷயத்தையும் மற்றொரு முனை அறிந்து
கொள்பவரையும் சுட்டும். நீ விஷயத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நீ பள்ளத்தாக்கில்
தொலைந்து போவாய். நீ அறிந்து கொள்பவரை பிடித்துக் கொண்டால் நீ பள்ளத்தாக்கில்
தொலைந்து போக மாட்டாய். உன்னால் பள்ளத்தாக்கை கடந்து போக முடியும். நீ அறிவு
பள்ளத்தாக்கை கடந்து விட்டால் அங்கு சந்தோஷமான சந்தோஷம் இருக்கிறது. ஏனெனில் நீ
உன்னுள் உள்ள அடிப்படைகளில் ஏதோ ஒன்றை இறுதி வரை இருக்கப்போகின்ற ஏதோ ஒன்றை
மிகவும் தேவையான ஒன்றை புரிந்து கொண்டு விட்டாய். அறிந்து கொள்ளும் திறமையை
தன்னுணர்வு அடையும் திறமையை புரிந்து கொண்டு விட்டாய்.

நீ அறிந்து கொள்பவரை பார்க்க
கற்றுக் கொண்டால், அறிந்து கொள்பவரை பற்றி கவனமாக இருக்க ஆரம்பித்தால் நீ
நேர்மறையானதை உபயோகிக்கிறாய்.

Source –  The Secret of Secrets   Vol 2 ch  #1