ஆணவத்தை போற்றுபவர்களுக்கான குறிப்புகள்

ஆணவத்தை தெளிவாக கண்டறிவதற்கான ‘ சாந்தி ‘ -யின் வழிகாட்டுதல்

ஆணவம் – இது என்ன என்பதை பற்றியும் இதை புரிந்து
கொள்வது எப்படி என்பதை பற்றியும் எனக்கு மிகவும் குறைவாகவே தெரியும். ஏனெனில்
உள்ளே உள்ளதைப் பற்றி மிகவும் அறிந்திருக்கும் ஞானிகளும், வெளியே உள்ளதை பற்றி
மிகவும் தெரிந்திருக்கும் விஞ்ஞானிகளும் சொல்வது ஒன்றேதான். அப்படி ஒன்று இல்லை.
இல்லாத ஒன்றைப் பற்றி மிகவும் தெளிவாக வரையறுத்து கூற நான் இங்கு வரவில்லை.
ஆனால்,,,

சரி, நான் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன். ஆணவம்
என்பது சுதந்திரமாக, முழுமையிலிருந்து தனித்து இருக்க, தனிப்பட்ட அடையாளத்தோடு
இருக்க முயற்சிக்கும் ஒரு உணர்வாகும். சூரியன் வரும் முன் பனித்துளி தான் ஒரு
உருகாத பனிசிகரம் என்று நினைத்துக் கொள்வது போல, கடலில் சென்று கலப்பதற்கு முன்
நதியில் ஓடும் நீர் தானே கடல் என்று கற்பனை செய்து கொள்வது போல என்ற உருவகம் ஆணவம்
என்பதற்கும் சரியாக இருக்கும்.

நீங்கள் கயிறை பாம்பு என்று நினைத்துக் கொண்டது
உண்டல்லவா ? மேகத்தில் முகத்தை கற்பனை செய்து பார்த்தது உண்டல்லவா? கயிறும் மேகமும் அங்கே இருப்பது உண்மைதான், ஆனால் எப்படி பாம்பும் முகமும் அங்கே இல்லையோ அது போல ஆணவமும் இல்லாத ஒரு விஷயம்தான். நீ இருக்கிறாய், முழுமையான தேஜஸோடு இருக்கிறாய், ஆனால் ‘நான்’ என்ற ஆணவத்தினால் முழுமையிலிருந்து பிரிந்து தனித்து நிற்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.

நீ கயிறை பாம்பு என்று கற்பனை செய்து கொண்டால்
பின்பு பாம்பிற்கு இருக்கும் குணங்களை நீயாக கற்பனை செய்து கொள்வாய். அதை பார்த்து
வியர்த்து விறுவிறுத்து பயந்து அலறுவாய். நீ பாம்பு என கற்பனை செய்து கொண்ட கயிறு
உன்னை கடிக்காது, ஆனால் அது கடித்து விடுமோ என்ற பயத்தினால் நீ இறந்துகூட போவாய். இதுவேதான்
ஆணவத்திற்க்கும் நிகழ்கிறது. அது தன்னைத்தானே உயர்வாக நினைத்துக் கொள்கிறது. அது
இல்லை என விஞ்ஞானிகளும் மெயஞ்ஞானிகளும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அது இருக்கிறது
என நாம் நினைப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

புராண கதைகளில் வரும் அசுரர்கள் போல மதிய உணவாக
தூய்மையான பெண் வேண்டும் என்றோ அல்லது பழங்காலத்தில்  நம்முடைய பணிவை காட்ட நம்முடைய அன்பிற்குரிய மகனை வெட்டி பலி கொடுக்க வேண்டுமென கேட்கும் தெய்வங்கள் போலவோ நமது ஆணவம் இல்லை. ஆனால் அது உயிர் வாழ நம்முடைய பங்களிப்பு கண்டிப்பாகத் தேவை. பல விதங்களில் நாம்
அதை வளமூட்டி அந்த நினைப்பை வளர்த்துக் கொள்கிறோம். ஆகவே பாம்போ, ஆணவமோ உண்மையில்
அங்கில்லையென்றாலும் அந்த நினைப்பை தக்க வைத்துக் கொள்ளவும் அதை உரமூட்டவும் நாம்
செய்ய வேண்டியவை என்ன, செய்ய கூடாதவை என்ன என்பதை பற்றியும், நம்மை, நம்முடைய
தவறுகளை பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதை பற்றியும் பார்ப்போம்.  

வாழ்வில் பல கணங்களில் ஒவ்வொருவருக்கும் இந்த
ஆணவத்தை பார்த்து கவனிக்கும் அனுபவம் கிடைத்திருப்பது போல எனக்கும் அது
கிடைத்திருக்கிறது. அதைக்குறித்த அனுபவம் கிடைத்திருக்கிறது, அதன் மூலம் மிகச்
சிறிய அளவு புரிதல் கிடைத்திருக்கிறது. ஆகவே நமது ஆணவத்தை போற்றி பாதுகாக்க நாம்
என்ன செய்ய வேண்டும் எதை நிச்சயமாக செய்யக் கூடாது என்பதில் சிறிது தெளிவு
இருக்கிறது. இந்த ஆணவம் என்ற விஷயத்தை நாம் காப்பாற்றி வைத்துக் கொள்ள என்ன செய்ய
வேண்டும் எதை செய்யவே கூடாது என்பதில் மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட கட்டமைப்பை
என்னால் கொடுக்க முடியாமல் போவதற்கு நீங்கள் என்னை தயவு செய்து மன்னித்தருள
வேண்டும்.

நான் அறிந்த புரிந்த விஷயங்களைக் கொண்ட,
செய்யக்கூடியவை, செய்யவே கூடாதவை பற்றி இங்கே நான் பட்டியலிட்டிருக்கிறேன். நான்
எதைப் பற்றி கூறுகிறேன் என்பதைப் பற்றி உங்களுக்கு அடையாளம் கொள்ளத் தெரியும்
என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு தெரிந்தவைகளையும் நீங்கள் இங்கே இதில்
சேர்க்கலாம், ஏனெனில் நாம் எல்லோரும் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர்கள். நம்முடைய
இந்த கற்பனையை கெட்டியாக பிடித்துக் கொள்ள எல்லா வழிவகைகளைப் பற்றியும் தெரிந்து
வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்த நாட்கள் ஆணவத்திற்கு
மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கிறது.

இதை சமர்பித்து விடுவது, அதை போக விட்டு
விடுவது, அதை கொன்றே விடுவது என்பது கூட பேசப் படுகிறது. ஆன்மீக பயங்கரவாதம்
அல்லவா இது? இந்த வெளி உலகத்தில் இந்த வெளி வாழ்க்கையோடு போராட நமக்கு
இந்த ஆணவம் மிகவும் தேவைப்படும் ஒரு விஷயமல்லவா? ஆகவே நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து இதை காப்பாற்ற ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். ஆணவத்தை காப்பாற்றும் சங்கத்தில் இணைந்து
கொள்ளுங்கள். உள் உலகில் பல்வலியைப் பற்றி மறந்து விடுவதைப் போலவே இதையும் நாம்
மறந்து விடக் கூடும் இல்லையா?. என்னுடைய செய்தி முரண்பாடாக ஒலிக்கிறதா? அப்படி இருப்பதாகவே நான் நம்புகிறேன்!.

1.    சுலபமானது எப்போதுமே தவறானது, ஆகவே எதிர்நீச்சல் போடுங்கள். ஒருபோதும் நிதர்சனத்தை
ஏற்காதீர்கள்.

2.    அன்பாயிருப்பதிலிருந்து பல மைல்கள் தள்ளியே இருங்கள், உங்களைக் கொண்டாடுவது என்ற பேச்சுக்கே இடமேயில்லை.

3.    உங்கள் கருத்தை ஒருபோதும் நிதர்சனத்திற்காக விட்டுவிடாதீர்கள். யாரும் உங்கள் கருத்தை
எதிர்க்கவில்லை என்றால் எதிர்க்கும் அளவு வலியுறுத்துங்கள். மோதலை நாடுங்கள்.
உங்கள் உடம்போடும், இயற்கை உணர்வுகளோடும் மோதலை கைக்கொள்ளுங்கள்.

4.    இயல்பாக இருப்பதை விட்டுவிட்டு வேறு ஒருவரைப்போல மாற முயற்சி செய்யுங்கள்.

5.    முரண்பாடுகளைத் தேடி கண்டுபிடியுங்கள். மற்றவர்கள் தவறுகளுக்காக காத்திருந்து பாய்ந்து சண்டை
போடுங்கள். நீங்கள் மற்றவர்களைப்போல அல்ல என்பதைக் காட்டக் கிடைக்கும்
சந்தர்ப்பங்கள் எதையும் நழுவ விட்டுவிடாதீர்கள். ஒருவருடன் இருக்கையில், ஒத்த
விஷயங்களை விட்டுவிட்டு முரண்படும் விஷயங்களை பெரிதாக்கி சண்டை போடுங்கள்.

6.    பிரச்சனை எதுவும் கிடைக்கவில்லை என்றால், உங்களது கடந்த காலத்தில் நடந்ததை ஏற்க மறுத்து
உங்களுடனேயே சண்டை போடுங்கள்.

7.    போட்டி போடுங்கள். நீங்கள் தான் உலகத்திலேயே சிறப்பானவர், ஆகவே முதல் பரிசு அனைத்தும்
உங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று நினைத்து போட்டி போடுங்கள். இது
சாத்தியப்படவில்லை என்றால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற நினைப்பை போற்றி
வளர்த்திக் கொள்ளுங்கள்.

8.    ஒருபோதும் மகிழ்ச்சியில் உங்களை இழந்து விடாதீர்கள். அதை சந்தேகப்படுங்கள். உங்கள் துன்பத்தை
மட்டுமே கொண்டாடுங்கள்.

9.    எல்லாம் எனக்குத் தெரியும் – என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள். யாராவது நல்லது சொல்ல
வந்தால், அவர்களிடமும் எப்போதும் ஆணித்தரமாக இதைக் கூறுங்கள்.

10.   ஒப்பிடுவதை ஒருகணமும் நிறுத்தாதீர்கள். ஏனெனில் அதுவே ஆணவத்திற்கு நொறுக்குத்தீனி. உங்களை
உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று தொடர்ந்து வைத்திருக்க அது அவசியம் தேவை.
வெளியே ஒப்பிட ஒன்றுமில்லை என்றால் உங்களை நீங்களே ஒப்பிட்டு பார்த்து வருத்தமோ
மகிழ்ச்சியோ அடையலாம்.

11.   யாரும் கண்டுகொள்ளாதவராக ஒருபோதும் இருந்து விடாதீர்கள். அது மிக ஆபத்தானது. ஆணவத்தின்
இறப்பாகிவிடக் கூடும்.

12.   முரட்டுத்தனமாக நெஞ்சை நிமிர்த்தி எப்போதும் பலூனைப்போல உங்களை எல்லாவிதத்திலும் ஊதிக் கொண்டே இருங்கள்.

13.   நீங்கள் இருப்பதை காட்டும் விதமாக சத்தமிடுங்கள், ரகளை செய்யுங்கள், எப்படியாவது நீங்கள்
இருப்பது தெரிய வேண்டும்.

14.   யாருடனும் நெருக்கமாகாதீர்கள், இணைப்பை உணராதீர்கள். இதில் எப்போதும் உஷாராக இருங்கள்.
யாராவது அன்பில் உங்களைக் கரைத்து விடலாம். ஆகவே எல்லோரும் ஏதோ திட்டத்தோடுதான்
பழகுகிறார்கள் என்றே நினையுங்கள்.

15.   உங்களுக்கு எது நடந்தாலும், நிகழ்ந்தாலும், அதற்கு முழுக்காரணமும் நீங்கள்தான், உங்கள்
சிறப்புதான் என்பதை மறக்க வேண்டாம். தவறுதலாக சாட்சிபாவமாய் தோன்றினால், உடனே
மாற்றிக் கொள்ளுங்கள்.

16.   எல்லாவற்றிற்கும் மேலாக ஓஷோவை விட்டு விலகி இருங்கள். அவர் புத்தகத்தை படிப்பது, பேச்சைக் கேட்பது
போன்ற தவறுகளை செய்யாதீர்கள், பிறகு உங்கள் ஆணவத்தைக் காப்பாற்ற முடியாமல்
போகலாம். அவர் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ஜில் தண்ணீரை முகத்தில் அடித்து நமது
ஆணவக்கனவைக் கலைத்து விடுவதில் கில்லாடி. நயவஞ்சகமாகப் பேசி உங்களை தன் உலகத்திற்குள்
இழுத்துப் போட்டு விடுவார்.

17.   அவரது பேச்சையாவது நமக்கு தகுந்தபடி திரித்துவிடலாம். ஆனால் ஒருபோதும் அவரது தியான
யுக்திகளை முழுமையாக முயற்சித்தப் பார்க்கலாம் என்று கனவிலும் நினைத்து
விடாதீர்கள். பிறகு கண்டிப்பாக நீங்கள் ஆணவமாய் அழிந்து போவீர்கள். ஆகவே கவனம்! கவனம்!