நிவேதனோ …………………..பகுதி – 2

நிவேதனோ, நீங்கள் ஒரு தோட்டக்காரரும் கூட. நீங்கள் ஓஷோவின் தோட்டத்தில் வேலை
செய்திருக்கிறீர்கள். சாங்டூசு சமாதியின் வெளியே ஒரு நீர்வீழ்ச்சியையும்
உருவாக்கியிருக்கிறீர்கள். அது உங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தது

குருவிடம் குருவுக்காக வேலை செய்யத்தான் ஒவ்வொரு சீடனும் ஒவ்வொரு பக்தனும்
விரும்புவான். அது ஒருவருடைய வளர்ச்சிக்காக இயற்கையால் கொடுக்கப்படும் மிகச்
சிறந்த வாய்ப்பாகும். இந்த சலிப்பூட்டும் அறிவற்ற வாழ்க்கை முறையை ஒரு உண்மையான
அதிசயமாக மாற்றக் கூடியது. ரஜனீஷ்புர காலத்தில் இருந்து ஓஷோ எனக்குரிய ஒரு இடத்தை உருவாக்கி கொடுத்த காரணத்தால் நான் மிகவும் வசதியாகவும் எளிமையாகவும் இருந்தேன்.
அதனால்தான் என்னால் என்னுள் மறைந்திருந்த திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவருடைய தோட்டத்தை என்னால் உருவாக்க முடிந்தது.

ரேஞ்சில் முதலிலிருந்தே நான் லாவோட்ஸூ தோட்டத்தில்தான் வேலை செய்ய
அனுப்பப்பட்டேன். ஒருநாள் ஓஷோ என்னிடம் அவருடைய வாசலில் இன்னும் அதிகமாக
ஆற்றுலிருந்து கற்களை கொண்டு வந்து போட முடியுமா என்று கேட்டார். ரஷீட் மற்றும்
நான் இருவரும் இருந்தபோது அவர் கேட்டார், ஆனால் ரஷீட் வண்டி பட்டறைக்கு
அனுப்பப்பட்டான், எனவே அந்த வேலையை நான் மட்டுமே செய்ய வேண்டி வந்தது.

ரூபேஷ், நான் இன்னும் இரண்டு பெண்களுடன் குதிரை லாயத்திலிருந்து காலை 5
மணிக்கு வெளியே வந்ததை ஒரு பையன் பார்த்துவிட்டு போய் ஷீலாவிடம் போட்டுக்
கொடுத்துவிட்டான். அது மிகப் பெரும் பிரச்னையாக்கப்பட்டு பின்பு அதனால் நான் குதிரை
ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. பனிபடர்ந்த மலைகளில் போய் ஆற்றிலிருந்து கற்கள்
எடுத்து வருவதற்க்கு வண்டிகளை விட குதிரை இருந்தால் மிகவும் எளிதாக இருக்கும் என
நான் ஓஷோவிடம் கேட்டேன்.

அவர் அதற்கு சம்மதம் கொடுத்துவிட்டார். அந்த கணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  குருவின் நேரடியான விருப்பத்தை நிறைவேற்றுதலின்
மூலம் ஆளுபவர்களின் அதிகாரத்தை மீற முடிந்தது. நான் குதிரையோட்டத்தை மிகவும்
விரும்புவன். மலைகளில் தனியாக குதிரையில் சுற்றும்போதும், வேகமாக செல்லும்போதும்
கிடைக்கும் சுகமே தனி. என் வாழ்க்கை முழுவதும் நான் குதிரையில் சவாரி செல்வதை
மிகவும் விரும்பி செய்திருக்கிறேன், இன்னும் செய்து கொண்டுமிருக்கிறேன். சவாரி
செல்வது மிகவும் இனிமையானது, அதிலும் தடை செய்யப்பட்டிருக்கும் போது செல்லும்
சவாரி அருமை. அதை அனுபவித்தால்தான் தெரியும்.

ரேஞ்சில் நிலத்தை சமன் செய்ய ஆரம்பகட்ட வேலைகள் செய்தோம். அரசியல்
செய்பவர்களையும் வேலை செய்யாமல் ஏய்ப்பவர்களையும் மேம்போக்காக வேலை
செய்பவர்களையும் சமாளிப்பது மிகவும் அவசரமாக கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. தன்மயோ அதில் மிகவும் கெட்டிக்காரி. நாங்கள் ஓஷோவின் 20 ஏக்கர் நிலப்பரப்பையும் சமன்
செய்து அதில் மிக அழகான பெரிய நிழல் தரும் மரங்களையும் அரிதான செடிகளையும்
ஸ்டிராபெஃரி மரங்களையும் வழக்கமாக அந்த இடத்தில் வராத பல வகையான மலர்களையும் பெரிய மலர் செடிகளையும் பயிரிட்டோம்.

ஒருநாள் ஆபீஸிலிருந்து இனிமேல் லாவோட்ஸூ தோட்டம் அமைக்க பணம் தர முடியாது
என்று கூறி விட்டனர். இருப்பினும் இரண்டு நாட்கள் கழித்து இரண்டு வண்டி நிறைய மரக்
கன்றுகள் வந்தன. தன்மயோ அவர்களை சரி செய்து விட்டாள். எம்பராக்சினி ஓஷோ போன்ற ஒரு குருவுக்காக அமைக்கப்படும் தோட்டத்திற்க்கு பயன்படுத்தப்படும் அனைத்துப்
பொருட்களும் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதோடு அதில் இருக்கும் அனைத்து செடிகொடிகளும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் குறிப்பாக இருந்தோம். (எம்பராக்சினி என்பது
தனிப்பட்ட வகையில் நான் ஓஷோவை குறிப்பிட பயன்படுத்தும் சொல் ஆகும். அதன் பொருள் என்னுடைய தாய்மொழியில் ஓஷியானிக் என்று பொருள்படும்)

பின்னாட்களில் பூனா திரும்பி வந்த பின் நடந்த விஷயங்களுக்கு அது முன்னோடி
ஆகும். பூனா திரும்பி வந்த பின் நான் தையல் அறையில் அவரது ஆடைகளை உருவாக்கும்
பெண்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். கியானும் அங்கே இருந்தான், ஓஷோ வின் சாக்ஸூகளை தைத்துக் கொண்டிருந்த என்னுடைய அண்ணன் போன்ற அசீஷ் எனக்கும் என் பெண்நண்பிக்கும் தையல் கலை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். அவரிடம் எனக்கு மிகுந்த நன்றியுணர்வு உண்டு.

பின் மாலைநேர சங்கமிப்பு தியானத்தின் பயணம் ஆரம்பித்தது. ஒருநாள் அவர் என்னைக்
கூப்பிட்டு புதிய புத்தா ஹாலை சுற்றி தோட்டமும் தண்ணீர் பாதைகளும் அமைக்கச்
சொன்னார். கற்பனை செய்து பாருங்கள். ஓஷோவின் அருமையான சீடர்கள் உட்கார்ந்து
தியானம் செய்யும் போது பார்க்கும் அற்புதமான பசுமை காட்சிகளை உருவாக்க வேண்டிய
பொறுப்பு உங்களுக்கு எனும்போது எப்படி இருக்கும். அது ஒரு அரிதான வாய்ப்பு..

ஆயினும் பிரச்னைகளும் கூடவே ஆரம்பமாயின…

இங்கே சாப்பாட்டுக்கே பணமில்லை, நீங்கள் எல்லா பணத்தையும் கொண்டு போய்
பாறையில் கொட்டுகிறீர்கள்….

எதற்காக இவ்வளவு பணம் இதில் செலவு செய்கிறீர்கள், அவர் சீக்கிரம் இறந்து போய்
விடப் போகிறார்…..

நீங்கள் பணத்தை தவறான வழியில் செலவு செய்கிறீர்கள்….

கொலைகாரர்களும் திருடர்களும் இப்படி கூவிக் கொண்டும் புகார் செய்து கொண்டும்
திட்டிக் கொண்டும் இருந்தார்கள், ஆனால் நாங்கள் எங்களுடைய வேலையை மட்டும்
தொடர்ந்து செய்து கொண்டு இருந்தோம். இவர்கள் யார் சொல்வதும் பொருட்டல்ல, நான் என்
குருநாதருக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். இவர்களுக்கு அல்ல. இந்த மடையர்கள்
முட்டாள்களாக அறிவு கெட்ட முண்டங்களாக தங்களது மடத்தனமான மனதின் பார்வைக்கு அடி பணிந்து போய்க் கொண்டேயிருக்கிறார்கள். தங்களுக்கு தாங்களே ஒளியாக மாற வேண்டும் என்ற அவரவர் பொறுப்பை உணர்ந்து அதற்கு முயலாமல் வாழ்வை வீணடித்துக்
கொண்டிருந்தார்கள். யார் சரி யார் தவறு என்பதற்க்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை.

நீர்வீழ்ச்சி அமைத்த காலம் முழுவதும் என் குருநாதரின் அன்பான வழிகாட்டுதல்
தொடர்ந்தது. அது ஒரு சவாலான செயல், அது இப்போது ஒதுக்கப்படுகிறது, ஆயினும் அது
ஓஷோவின் சீடர்களின் சரணாகதியையும் பக்தியையும் நேசத்தையும் வெளிக்காட்டும் ஒரு
படைப்பாக ஒரு முத்தாய்ப்பான விஷயமாக நிற்கிறது.

நீங்கள் இன்னும் தொடர்ந்து மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா

கோம்போ அலிகிரி மையத்தில் மேளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு
பயன்படுத்தப்படுகின்றன. குதிரைகள் மேளசத்தம் கேட்டு தீனி சாப்பிட வரும்.
வேலையாட்கள் தாங்கள் எங்கே சென்று வேலை செய்ய வேண்டும் என்று மேளசத்தம் மூலம்
தெரிந்து கொள்கிறார்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதை சொல்லக் கூட ஒருவிதமான குறிப்பிட்ட விதமான மேளஅடி உண்டு. கியான் ஆற்றைக் கடந்து இருந்தால் கூட நாங்கள் பேசிக் கொள்ள ஒருவிதமான மேளவகை உண்டு. மேளமொழியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதற்காக நான் மிகவும் நன்றியோடு இருக்கிறேன். இந்தியாவில் பாம்பாட்டிகள் நாகத்தை மயக்கி
அசையாமல் நிறுத்த மகுடி ஊதுவார்கள். இங்கோ மேளத்தை உபயோகப்படுத்தி நாகத்தை அதன் வாலில் நிற்கச் செய்வதோடு மேளசத்ததிற்க்கு தகுந்தாற்ப் போல ஆடச் செய்வார்கள்.
விஷமுள்ள நாகங்கள் கூட மேளத்திற்கு அடிமை. ஒரு சில நேரங்களில் மேளத்தை அடித்து
விஷமுள்ள நாகத்தை வரவழைத்து ஆட வைப்போம். இந்த கணமே வாழ்வு என்பதையும்,
முக்தியடைதல் என்பது எல்லோருக்கும் பொது என்பதையும், நினைவு படுத்திக் கொள்ள
மேளசத்தம் எழுப்புகிறோம். மேலும் மேளம் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம், அது ஞானத்தை
நோக்கி இறைமையின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.