ஷாந்திதா தான் சன்னியாஸ் எடுத்ததைப் பற்றி எழுதுகிறார்

இதன் முதல் பகுதி இம்மாதமும் அடுத்த பகுதி அடுத்த மாதமும் வருகிறது.

முதல் பகுதி……………

என்னுடைய மனைவி மிகவும் கிறுக்குப்பிடித்தவள். என்னுடைய மகள்கள் 7 மற்றும் 5
வயதிருக்கும்போதே அவள் என்னிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மகள்களையும்
கூட்டிக்கொண்டு 2000 மைல்களுக்கு அப்பால் வாழ சென்று விட்டாள். சுமார் ஒன்றரை
வருடங்கள் நான் செத்தபிணம் போல வாழ்ந்தேன்.

யோகா கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசிரமத்திற்க்கு சென்று அங்கு யோகா
கற்றுக்கொண்டதில் கொஞ்சம் அமைதியடைந்தேன். ஆனால் அவர்கள் மிகவும் கண்டிப்பும்
கறாருமாக இருந்ததில் அங்கு இருக்க முடியாமல் நான் அதை விட்டு வெளியேறி வந்தேன்.
திரும்பவும் தனிமையே என் துணையானது. நான் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள
காலேஜில் ஏழு வருடங்களாக தத்துவ பேராசிரியராக பணி புரிந்து வந்தேன்.

1977 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் மதியம் ஒரு புத்தக கடையில்
சுற்றிக்கொண்டிருந்த போது பல புத்தகங்களை பார்த்த பின் என்னுடைய கண்களில் ஒரு
புத்தகம் பட்டது. நான் அதை அதிசயம் அல்லது தெய்வீக செயல் என்றுதான் கூறுவேன். அந்த
புத்தகத்தின் பெயர்

The Book of the Secrets   அதன் அட்டையில் ஓஷோவின் படம் இருந்தது. அதை
பார்த்தவுடன் நான் திகைத்துப் போய் ஒரு அடி பின்னால் போனேன். அந்த வார்த்தைகள்
என்னுடைய அதிர்ந்து நின்ற விழிப்புணர்வின் வழியே மிதந்து வந்தன. நான் அந்த
புத்தகத்தை எடுத்து விரித்து அது எனக்கு சொல்வது என்ன என்று பார்த்தேன். பக்கம் 29
விரிந்தது. அதில் யோகா என்பது விழிப்புணர்வுடன் அடக்குவது, தந்த்ரா என்பது
விழிப்புணர்வுடன் புரிந்து கொள்வது, கடந்து செல்வது என்ற வார்த்தைகளை படித்தேன். அந்த
கணத்திலேயே எனக்கு என்னுடைய பாதை தந்த்ராவை சார்ந்தது, வாங்கிக் கொள்ளும் கர்ப்பப்பை
போன்றது என்பது  எனக்கு தெளிவானது.

என்னுடைய இதயம் கரைந்தது, எரிந்தது. நான் நிலைமாறிப் போனேன். அவரது
வார்த்தைகள் மட்டுமின்றி அவரது நிலைமாற்றம் தரும் சக்தியும் சேர்ந்து வாழ்க்கையில்
தற்செயலான செயல்களோ, தன்னிச்சையான நிகழ்வுகளோ கிடையாது என்பதை எனக்கு புரிய
வைத்தன.

அடுத்த ஒரு வாரத்திற்க்குள் நான்  I Am the Gate புத்தகத்தையும் வாங்கி விட்டேன். உடனடியாக பூனா
ஆசிரமத்திற்க்கு நியோ சன்னியாஸ் தீட்சை எனக்கு தரும்படி வேண்டி கடிதம் எழுதி
விட்டேன். இரண்டு வாரங்களுக்குள் மா யோகலக்ஷ்மி அவர்களிடமிருந்து பதில் கடிதம்
வந்து விட்டது. அதில் அனுமதி படிவமும் இருந்தது. வந்த கடிதத்தின் மேல் உறையில்
என்னுடைய ஜோசப் என்ற பெயருக்கு பதிலாக ஜேம்ஸ் என்ற என்னுடைய அண்ணனின் பெயர் இருந்தது.
பரவாயில்லை, நான் யாரென்று நான் நினைக்கிறேனோ அது நான் இல்லை.

பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி அந்த அனுமதி படிவத்தை நிரப்பி திருப்பி அனுப்பி
வைத்தேன். அக்டோபரின் பின் பகுதியில் என்னுடைய வாழ்வின் மிகப் பெரும் பரிசு வந்து
சேர்ந்தது. — 13.10.1977 சுவாமி ஆனந்த் ஷாந்திதா – கடைக்கு சென்று 108 மணிகள்
வாங்கி வந்து அவருடைய போட்டோ வைத்து நானே ஒரு லாக்கெட் செய்து கோர்த்து கழுத்தில்
போட்டுக் கொண்டேன். என்னுடைய வெள்ளை துணிகள் அனைத்தையும் காவிகலராக மாற்றிக்
கொண்டேன். அடுத்த படியாக டீனிடம் சென்று இனிமேல் நான் உண்மையே பேசப் போவதாக
அறிவித்தேன். டீன் மிகவும் நாகரீகமாக நன்றி என்று கூறிவிட்டு நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் என்று கூறிவிட்டு மூன்று நாட்களுக்குள்
என்னை வகுப்புகளிலிருந்து நீக்கி விட்டார். நான் எனது வேலையை ராஜினாமா
செய்துவிட்டு மும்பை செல்வதற்காக ஏர்இந்தியா டிக்கெட் வாங்கிவிட்டேன்.

1977 நவம்பர் 8ந் தேதி நான் லாவோட்ஸூ ஹாலின் முன் வரவேற்பு தரிசனத்திற்காக
வரிசையில் காத்திருக்கிறேன். நுகர்ந்து பார்க்கும் பரிசோதனையில் நான்
தேறிவிட்டேன். ஆனால் நானே செய்த அந்த மாலையை அங்கிருந்த மா கழற்றி விட்டார்கள்.
நான் அதை அவரிடம் காட்டுவதற்காக மிகவும் ஆவலோடு இருந்தேன். அவர் அதை பார்த்து
மிகவும் மகிழ்ந்து சிரிப்பார் என கற்பனை செய்திருந்தேன். The Open Secret,
A Darshan Diary  யில் பக்கம் 111 ல் மனீஷா என்னுடைய முதல் தரிசன
அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். நானும் காலேஜில் தத்துவப்பேராசிரியர் தான்
என்று நான் கூறியபோது ஓஷோ சிரித்தார். அவர் என்னுடைய கழுத்தை சுற்றி மிகவும் அழகான
ரோஸ்வுட் மாலை ஒன்றை அணிவித்து, வூ வை வூ, முயற்சியின்றி இருப்பதற்கு மிகவும்
முயற்சி தேவைப்படும் என்று கூறினார். அவர் எனக்கு மையம் கொள்ளுதல், தீர்த்தாவுடன்
நேர் கொள்ளுதல் மற்றும் இரண்டு என நான்கு விதமான குழுசிகிச்சைகளை பரித்துரை
செய்தார்.

காலையில் டைனமிக், மாலையில் குண்டலினி 8.00 லிருந்து 9.30 வரை மிகவும்
இனிமையான மற்றும் பிளக்கும் ஓஷோவின் விரிவுரைகள். அது ஹிந்தியாக இருந்தாலும் சரி,
ஆங்கிலமாக இருந்தாலும் சரி அவரது குரல், அவரது இருப்பு, அவரது சக்தி, அவரது
வார்த்தைகள் அந்த புத்தாஹாலில் சுற்றிலும் பறவைகளின் இனிமையான கீச்சொலி இணைந்து
ஒலிக்க கேட்க மிகவும் அருமையாக இருக்கும். மையம் கொள்ளுதல் என்ற அந்த குழுசிகிச்சை
மிகவும் நன்றாக இருந்தது. சிறிது கவனம் கொள்ளுதல் சிறிது குருட்ஜிப் அசைவுகள்,
மற்றும் வேறு சில பகுதிகளோடு சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது. டிசம்பரின்
இறுதியில் நான் நேர் கொள்ளுதல் குழுசிகிச்சைக்கு தயாராகி விட்டேன்.

முதல்நாள் நாங்கள் அறையை விட்டு மதியஉணவுக்கு வெளியே வந்த போது தீர்த்தா என்னிடம்
இரண்டு அடி நீளம் கொண்ட உருண்டை வடிவ தலையணை ஒன்றை கொடுத்து அதை கீழே வைக்க கூடாது
இதுதான் உன்னுடைய மனம் என்றார். கவனித்து கொண்டிரு என்றார். அதில் ஒரு ஆழமான பகுதி
நம்முள் பொதிந்திருக்கும் கோபத்தை வெளியே கொண்டு வருவதாகும். அதில் நாம் நம்முடைய
முதுகு சுவரில் இருக்கும்வண்ணம் சேரில் உட்கார்ந்திருப்பது போல உட்கார வேண்டும்.
ஆனால் அங்கு ஏதும் சேர் இருக்காது. அந்த சங்கடம் மிகவும் அதிகமாக போய்க்கொண்டே
இருக்கும். அது அதிகமாக அதிகமாக நம்முடைய உள்ளார்ந்த கோபம் அதிகமாகிக் கொண்டே
இருக்கும். அப்போது போ, போய் உன்னுடைய கோபத்தை யாராவது ஒருவர் மீது காட்டு என்று
கட்டளை வரும். நான் குழுவிலேயே மிகவும் பலசாலியாகவும் மிகவும் சக்தியாகவும் இருந்த
ஆளின் வயிற்றில் ஒரு குத்து விட்டேன். அவர் திருப்பி என் மூக்கில் ஒரு குத்து
விட்டார். நான் தரையில் சுருண்டு விழுந்துவிட்டேன். என்னுடைய மனமும் என்னுடைய உடலும்
உணர்வற்ற நிலைக்கு சென்று விட்டது, ஆனாலும் நாம் பெயரிட முடியாத ஏதோ ஒன்று என்னுள்
விழித்திருந்தது, பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதை ஒரு கணநேர சடோரி என்று
பெயரிட்டேன்.                                                          …………….அடுத்த பகுதி அடுத்த மாதம்.