அனந்தோவின் இந்தக் கட்டுரை ஓஷோ டைம்ஸில் வெளிவந்தது
என் மனோநிலை ஒரு உள்தெளிவு வந்தவுடன் திடீரென மாறியது……………
அன்றொரு நாள் நான் உண்மையிலேயே போக விரும்பாத ஒரு இடத்துக்கு என் காரில் நான் சென்று கொண்டிருந்தேன். நான் என் மனதிற்க்குள் குறைப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னை நானே அடக்கி வைத்துக் கொள்ளும் இந்த சூழ்நிலையினால் விரக்தியடைந்து, அந்த விஷயத்திற்க்காக என்றில்லாமல் பொதுவாகவே மனோநிலை சரியில்லாமல் இருந்தது.
திடீரென நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன். நான் நானாகவே வாழும் இந்த வாழ்க்கை பெற்ற நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த கணத்தில் நான் காரின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். சூரியன் ஜொலித்துக் கொண்டிருந்தது. நான் செல்லும் வழி மிகவும் அழகிய இயற்கை காட்சிகளோடு இருந்தது. நான் எனது உள்முக குறைபடுதலிலும், என்னை நினைத்து நானே வருத்தப்பட்டுக் கொள்வதிலும் இருந்ததால் இதை நான் இதுவரை கவனிக்கவேயில்லை. ஒரு கணம் என் மூச்சே நின்று போனது. உள் ஆழத்திலிருந்து ஒரு திருப்தி மேலெழுந்து வந்தது.
மூச்சுக்காற்று உள்ளிழுக்கும்போது ஆழ்ந்த நன்றியுணர்வு வந்தது. நான் உயிர் வாழ்வதற்க்கும், இத்தனை அழகான இயற்கை காட்சிகளை காண கிடைப்பதற்க்கும், பறவைகள் ஒலி கேட்பதற்க்கும் (நான் இத்தனை நேரம் இந்த ஒலிகளை கேட்கவேயில்லை) பிரபஞ்சம் கொடுத்திருக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை பரிசுகளுக்கும் என உணர்ந்து நன்றியுணர்வு பெருகி வந்தது. உடனடியாக அத்தனை குறைகளும், மனதின் குமுறல்களும் தீர்ந்து போயின. நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். உடனடியாக! நான் என்னுடைய தன்னுணர்வற்ற மனதை பார்த்து மிகவும் சிரித்தேன்.
அது ஒரு கணநேர சறுக்கல்தான், ஏனெனில் நான் பொதுவாக ஒவ்வொரு நாளும் எப்படி இயற்கை என்னைப் பற்றி கவனம் எடுத்துக் கொள்கிறது என்று உணர்ந்து மிகவும் நன்றியுணர்தலுடன் இருப்பேன். ஆனால் இந்த சறுக்கல் எந்த அளவு என் வாழ்வு மாறுதலடைந்திருக்கிறது என்பதை எனக்கு நினைவு படுத்தியது. ஏனெனில் அதற்கு முன் என் வாழ்வு பாதையே – குறைகூறுதலும், குற்றஞ்சாட்டுதலும், மரியாதை இல்லை என உணர்தலும், நம்மை சரியாக நடத்தவில்லை என நினைத்துக் கொள்ளுதலுமாகத்தான் – இருந்தது. மனம் நம்மை மென்று கொண்டிருக்க தேவையான அனைத்து குப்பைகூளங்களுடன்தான் இருந்தது. குறைகூறும் மனம் ஒரு போதும் நிம்மதியாக இருக்காது என ஓஷோ கூறுவது மிகவும் சரியானதே.
வாழ்வை பற்றிய நமது அணுகுமுறை நமது விருப்பம்தான். நாம் நன்றியுணர்வையா அல்லது குறைகூறுதலையா எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதைதான் வாழ்க்கை நமக்கு திருப்பித் தருகிறது, என்ற புரிதலை எனக்கு தந்ததற்க்கு ஓஷோவிற்க்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
அது எப்படி நமது விருப்பம்தான் என்பதை அவரே விளக்குகிறார். நாம் நமது மனது சொல்வதை பின்பற்றலாம், அதனால் உதவி எதுவும் செய்ய முடியாது, ஆனால் அது இறந்த காலத்தைப் பற்றி குறைகூறும், எல்லாமும் எப்படி இருக்கிறதோ அப்படி இல்லாமல் வேறு விதமாய் இருக்க ஆசைப்படும், எதிர்கால ஆசைகளை துரத்திக் கொண்டிருக்கும், இப்போது இந்த கணத்தில் நம்மை சுற்றியுள்ள எதையும் அனுபவிக்க விடாமல் நமது கவனத்தை எங்காவது கொண்டு போய் வைக்கும். அதனால் இதை மாற்றும் ஒரு வழி அற்புதமான ரசவாதம் புரியக்கூடிய நன்றியுணர்வை உணர்வதுதான். நாம் நன்றியோடு இருக்கும் கலையை கற்றுக் கொண்டால், பின் மிகவும் கஷ்டமான கணங்கள் கூட அது அன்பானவரை பிரிவதாக இருந்தாலும் சரி, அதுவே துயரத்திற்க்கு பதிலாக அழகான ஒரு விஷயமாக மாறலாம்.
ஓஷோ தனது ஆரம்ப கால தியான முகாம்களில் பங்கேற்பவர்கள் எதைப் பற்றியும் – உணவைப் பற்றியோ, கொசுக்களைப் பற்றியோ – குறை கூறாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக படித்தது நினைவுக்கு வருகிறது. அவர் இந்த மூன்று நாட்களில் யார் எதைப் பற்றியும் குறை கூறாமல் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு அதில் திருப்தியும் காண்கிறார்களோ அவர்கள் தங்களது மீதி வாழ்நாள் முழுமையும் குறைகூறுவதையே நிறுத்தி விடுவார்கள். ஏனெனில் முணுமுணுக்காமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எப்படி இருப்பது என்று அவர்களுக்கு தெரிந்துவிடும். என்று கூறுகிறார்.