ஐயா,

அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்கின்றனவே!

ஆம். அவை தன்னை மறந்து விளையாடிக்
கொண்டிருக்கின்றன.

ஐயா,

அந்த இளைஞர்களும் இளைஞிகளும்
மகிழ்ச்சியாய் உள்ளனரே!

ஆம். அவர்கள் தன்னை மறந்து அரட்டையில்
ஆழ்ந்துள்ளனர்.

ஐயா,

அந்த ஆணும் பெண்ணும் ஆனந்தமாய்
உள்ளனரே!

ஆம். அவர்கள் தன்னை மறந்து காமத்தில்
களித்துள்ளனர்.

ஐயா,

உயர்பதவியிலும், பெட்டிப்பணத்திலும், மற்றவர்
பாராட்டிலும் மகிழ்ந்துள்ளனரே சிலர்!

ஆம். அதிகாரம், பேராசை, பெருமிதம் போன்றவற்றில் தன்னை
மறந்து திளைப்பவர் இவர்.

ஐயா,

தாயின் மகிழ்ச்சி?

அது தாய்மை உணர்வில் தன்னை மறந்து
பெறுவது.

ஐயா!

அப்படியெனில் தன்னை மறப்பதில்
கிடைப்பதே மகிழ்ச்சியா?

ஆம். அப்படித்தான் இருக்கிறது மனிதநிலை.

அதனால்தான் அந்த மகிழ்ச்சிக்கு குறுக்குவழியாக மதுவும், சூதும், காமமும் இருக்கின்றன.

ஆனால். . . .

தன்னை மறந்தடையும் மகிழ்ச்சி
நிலைப்பதில்லை-

தன் நினைவு வந்தவுடன் அது தடம்
புரண்டுகொள்கிறது, தலைகுப்புற விழுகிறான் மனிதன்,

எழுந்து மீண்டும் அதையே தேடுகிறான், இப்படியே
போகிறது வாழ்க்கை.

நண்பா!

இதை மாற்ற இதோ ஒரு மருந்து,

இதை நீ அருந்து.

அது அன்பு !

அன்புணர்வு. . . . .அதில் பிறக்கும்

கருணையுணர்வு !

பகிர்வுணர்வு !

நன்றியுணர்வு !

இவற்றை நீ பெறுகையில் நீ
இருப்பாய் – தானாய் நீ இருப்பாய்
தன்ணுணர்வாய் நீ இருப்பாய். தன்னை மறக்காமல் நீ இருப்பாய்.

ஆனாலும் நீ பறப்பாய் ! புதிதாய் பிறப்பாய் ! மகிழ்ச்சியாய் திளைப்பாய் !