தகுதி என்பது மனதின் மாய தோற்றமே. யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதே உண்மை. ஆனால் மனம் நம்மை தன் வசம் வைத்துகொள்ள தகுதி என்று ஒரு‌ விஷயம் இருப்பதாக நம்மை நம்ப வைத்து விடுகிறது.

நமக்கு தகுதி இருப்பதாக நாம் நம்பி விட்டால் நமக்கு வாழ்வு நமக்கு அளிக்கும் அற்புதமான விஷயங்கள் குறித்த விழிப்புணர்வோ, அல்லது அந்த விழிப்புணர்வின் காரணமாக வரும் நன்றியுணர்வோ வர வாய்ப்பே இல்லை. எடுத்துகாட்டாக, நமக்கு 1 லட்சம் வரை சம்பளம் வாங்குவதற்கு தகுதி இருக்கிறது என்று நாம் நினைத்து விட்டால் அந்த 1 லட்சம் சம்பளமாக வரும் வரை நம் உழைப்பை அனைவரும் குறைவாக மதிப்பதாகவே நாம் நினைப்போம். அந்த 1 லட்சம் வரை நமக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு நமக்கு நன்றியுணர்வு‌ உண்டாகாது. ஏனெனில் அது நம் தகுதிக்கு குறைவாக கிடைப்பதாகவே நாம் உணர்ந்து கொள்வோம்.

அது மட்டுமின்றி கற்பனை‌ பிம்பமான தகுதியின் அடிப்படையில் மனிதர்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்து கொள்கிறோம். நாம் பிறப்பதற்காக எதுவும் உழைக்கவில்லை. இந்த உடலுக்காக எந்த கட்டணமும் செலுத்தவில்லை. எந்த தகுதி தேர்வும் நடத்தப்படவில்லை. இயற்கை அளித்துள்ள அனைத்தும் வாழ்வின் பரிசுகளாகும். நாம் இந்த வாழ்வில் வாழும் ஒவ்வொரு கணமும் இந்த கணம் வாழ்வின் பரிசு என உணர்ந்து தகுதி எனும் மாய தோற்றத்தை கைவிட்டு வாழ்வின் மீது நன்றியுணர்வு கொண்டு வாழ்ந்தால் விழிப்புணர்வு‌ பிறக்கும். அதை வளர்க்க தியான‌யுக்திகளை செய்து‌ வாழ்வை கொண்டாடி இவ்வுலகமே சொர்க்கம் எனும் ஓஷோவின்‌ வாக்கை நம் வாழ்வில் வாழ்ந்து‌ காட்டுவோம்.

நேசத்துடன் நிர்தோஷ்