சிறு வயதிலிருந்தே நம்மை நல்ல பெயர் எடுப்பது முக்கியம்! என்று சொல்லி அது மட்டுமில்லாமல் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனோடும் பக்கத்து வீட்டில் நம்மை விட நன்றாக படிக்கும் மாணவனோடும் அண்ணன் தம்பி, அக்கா தங்கையோடும் நம்மை ஒப்பிடுகிறார்கள்.
சிறு வயதிலேயே அவனைப் பார் இவனைப் பார் என்று கூறி நாம் இவர்களை விட நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டிய கட்டாயத்தை மனதளவில் உருவாக்கி விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டால் உயர்வு மனப்பான்மையும், நல்ல மதிப்பெண் எடுக்காவிட்டால் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளும்படி செய்து விடுகிறார்கள்.
இவ்வாறே பள்ளியில் மட்டுமல்ல கல்லூரியிலும், வேலை செய்யும் இடத்திலும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் ஓயாத ஒப்பிடலை ஏற்படுத்தி அந்த ஒப்பிடலுக்கு தேவையான அளவுக்கு வாழ்வதையே சரியான வாழ்வு என பழக்கப்படுத்தி விட்டனர். ஆதலால் நம் வாழ்க்கையை விட நமக்கு நம் வாழ்க்கையை பற்றிய மற்றவர்களின் கருத்து முக்கியமானதாக ஆகிவிட்டது. மற்றவர்கள் நம்மை பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்ற மன இறுக்கம் காரணமாக நம்மால் இயல்பாக இந்த கணத்தை அனுபவிக்க இயல்வதில்லை.
ஓஷோ கூறும் முக்கியமான விடுதலை என்னவென்றால் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை எப்போதும் கணக்கு போட்டுகொண்டிருப்பதிலிருந்து அடையும் விடுதலையையே அவர் மிக முக்கியமானதாக குறிப்பிடுகிறார். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதிலிருந்து நீங்கள் விடுதலையடைந்தால் மட்டுமே நீங்கள் "தனிமனிதன்" ஆகிறீர்கள்.
ஓஷோவை பொறுத்தவரை தனிமனிதர்கள் மட்டுமே தியானப் பாதையில் பயணம் செய்ய இயலும். நீங்கள் தனிமனிதராகி விட்டால் எளிதாக தியானம் செய்யலாம் ஆகவே தனிமனிதன் என்பவன் மற்றவர்களுக்காக வாழாமல் விழிப்புணர்வுடன் தனக்கு மகிழ்ச்சி அளிக்ககூடிய செயல்களை படைப்புதன்மையுடன் செய்து கணத்திற்கு கணம் வாழ்பவன். இவ்வாறு வாழ தொடங்கினால் சிறிது காலத்திற்கு பிறகு நீங்கள் எதை செய்தாலும் அது உள்ளார்ந்த மகிழ்ச்சியுடனும் படைப்பு தன்மையுடனும் விழிப்புணர்வுடனும் செய்வதாக மாறும்.
நேசத்துடன்,
நிர்தோஷ்.