இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு ஆழமான குற்ற உணர்ச்சி உருவாகிறது. காரணம் என்னவென்றால் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளோரும்‌ நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்களும் இணைந்து 95% உள்ளனர். வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் போது நாம் இது நம் தகுதிக்கு மிகவும் அதிகம் ஏனெனில் நம்மை விட அதிகம் சிரமப்படுபவர்கள் லட்ச கணக்கில் உள்ளனர். நாம் உழைப்பை விட அதிகம் உழைப்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் இந்த வசதியை நினைத்து கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் நாம் இவ்வளவு எளிதாக பணத்தை சம்பாதித்துவிட்டு வசதியாக இருக்கிறோம். அதனால் நமக்கு பணம் கிடைத்த காரணம் அதிர்ஷ்டம் தான். எனவே நாம் பணத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதுடன் பணம் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டுமானால் கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது ஒரு சேவை அதாவது மருத்துவமனையோ, அல்லது முதியோர் இல்லமோ, அல்லது அன்னதானமோ ஏதாவது ஒரு உதவியை பணம் இல்லாதவர்களுக்கு செய்துவிட்டால் புண்ணியத்திற்கு புண்ணியமும் சேர்ந்துவிடும், நம்மிடம் இருக்கும் பணத்தை பார்த்து மற்றவர்கள் படும் பொறாமையும் குறைந்துவிடும் என்ற கணக்கின் அடிப்படையிலேயே பணம்‌ உள்ளவர்கள் உதவி செய்கிறார்கள். அது மட்டுமல்ல இந்தியாவில் மகிழ்ச்சியாக இருப்பது தவறு என்ற ஆழ்மன உணர்வு நிலவுகிறது. ஏனெனில் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாமல் சிரமப்படும் பொழுது நீ மகிழ்ச்சியாக இருந்தால் நீ படு மோசமான சுயநலவாதி. ஏனெனில் நீ சுயநலவாதியாக இருந்தால் மட்டும்தான் நீ சிரமப்படும் கோடிக்கணக்கான மக்களை நினைத்து பார்த்து உனக்கு அருகில் உனக்கு தெரிந்து சிரமப்படும் மக்களுக்கு உனக்கு கிடைத்த பணத்தை வைத்து உதவி செய்யாமல் அந்த பணத்தை உன் மகிழ்ச்சிக்காக சுயநலமாக செலவிடுவது குற்றம் என்ற கருத்தே இந்திய மக்கள் அனைவரது ஆழ் மனதிலும் உள்ளது. இதில் தன் குழந்தைகளுக்காக செலவு செய்வது ஏற்றுகொள்ள தக்கது ஏனெனில் அவர்களால் சுயமாக பொருள் ஈட்ட முடியாது. ஆனால் பணக்காரனோ ஏழையோ ஆணோ பெண்ணோ தன் மகிழ்ச்சிக்காக ஏதாவது ஒரு உடையோ, அல்லது சுற்றுலாவோ, அல்லது சொகுசு வாகனமோ வாங்க பணத்தை செலவு செய்தால் அது குற்றமாக உணரப்படுகிறது. இந்த குற்ற உணர்ச்சி கடந்த 20 வருடங்களில் சிறிது சிறிதாக குறைந்து வந்தாலும் இன்னமும் இந்தியர்களின் ஆழ் மனதை ஆட்டி படைத்து கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் ஏதாவது ஒரு சேவை நிறுவனம் அல்லது ஆசிரமம் என்றால் அவர்கள் தங்களிடம் உள்ள விஷயங்களை இலவசமாக பணம் ஏதும் வாங்காமல் கொடுக்க வேண்டும். என்ற மனப்போக்கு நிலவுகிறது. அது மட்டுமல்ல அப்படி இலவசமாக கொடுத்தால்தான் அது மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற உண்மையான நோக்கம் உள்ளது இல்லாவிடில் அது மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க செய்யப்படும் ஒரு மோசடியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஓஷோ தன் சீடர்களை தன் உணர்வு பற்றி தன்னுடைய மகிழ்ச்சி பற்றி சுயநலமாக எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி வாழ சொல்கிறார். இது ஒட்டு மொத்த இந்தியாவின் ஆழ்மன உணர்வு கட்டமைப்பிற்கு நேர் எதிராக உள்ளது. அதனால் தான் அந்த கட்டமைப்பு ஆழ் மனதில் இல்லாத இந்தியர்கள் மட்டுமே ஓஷோவிடம் வந்தனர். இப்போது அந்த கட்டமைப்பு சிறிது சிறிதாக உரு குலைந்து வருவதால் இனி ஓஷோ இந்தியாவில் வேகமாக பரவுவார். எனவே ஓஷோ அன்பர்கள் அனைவரும் தங்கள் ஆழ் மனதில் உள்ள இந்த கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு கொண்டு அந்த கட்டமைப்பை விட்டு வெளியேறி தன்ணுணர்வில் வளர வேண்டும்.

 

வாழ்க விழிப்புணர்வுடன்!

 

நேசத்துடன்,

ஓஷோ நிர்தோஷ்.