அன்பர்களே,

இன்றைய தேதியில் தவணை முறையில் பொருள் வாங்குவதும், அந்த பொருளுக்கான விலையை  ஒரு வருடம் முதல் ஐந்து வருடம் வரை மாத தவணையாக செலுத்துவதும் சாதாரண விஷயமாகிவிட்டது.

முன் பணம் செலுத்தி பொருளையோ வண்டியையோ வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டால், அதை உடனடியாக உபயோக  படுத்த தொடங்கி விடலாம் அதற்குரிய விலையை தவணையாக கட்டி முடிக்கும் வரை அந்த தொகையை நாம் மாதா மாதம் செலுத்தியாக வேண்டும்.

இப்பொது பணம் வெறும் தேவையாகவோ ஆசையாகவோ இல்லை. பணம் இல்லாவிட்டால் அவமானம். வந்து பணம் கட்ட சொன்னாலும் அவமானம் அல்லது பொருளை எடுத்து சென்றுவிட்டாலும் அவமானம்.  தேவையாகவோ ஆசையாகவோ இல்லை ஆடையை போல் மானத்தை காக்கும் விஷயமாகிவிட்டது பணம்.

ஆகவே என்ன பதட்டமாக இருந்தாலும் சரி என்ன அவமானமாக இருந்தாலும் சரி பணம் வேண்டும். வங்கிகளில் வாங்கும் கடனும் இதே கதைதான. வங்கிகள் வட்டிக்கு மேல் வட்டிபோட்டு வழங்கிய கடனை வசூலிக்கின்றன. மாத சம்பளம் வாங்குவோருக்கு வங்கிகள் கடனை அள்ளி வழங்குகின்றன.

கடன் வாங்கும் தொகையில் முக்கால் பங்கு வட்டியை வங்கிகள் வசூலிக்கின்றன.  கிரெடிட் கார்டு என்று கௌரவமாக கூறப்படும் கடன் அட்டையின் நிலையும் இதுதான். கடன் அட்டை மூலம் பொருள் வாங்கலாம் என்பதால் ஆடம்பர பொருட்கள் வாங்குதல் மக்களிடையே அதிகரித்துள்ளது. எவ்வளவு அதிகம் கடன் அட்டை மூலம்,  கடன் வாங்கமுடியும் என்கிற வரையறை என்பது,  ஒரு கவுரவ சின்னமாக மாறி உள்ளது.

இந்த கடன் அட்டை, வங்கிக்கடன், சுலப தவணை மூன்றுமே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தினால் வரப்ரசாதங்கள் தான்.  ஆனால் இவர்கள் மக்களிடம் உள்ள ஆசைகளை பயன்படுத்தி, கடன் கொடுத்து வட்டி வாங்கி பணம் ஈட்டுகின்றனர்.  ஆகவே நாம் தான்,  நம் ஆசைகளை குறித்து உணர்வடைய வேண்டியுள்ளது.  அதற்க்கு விழிப்புணர்வு அடைவது ஒன்றுதான் வழி.  விழிப்புணர்வு அடைய ஓஷோவின் யுக்திகள் பேருதவி புரியும்.

சுலப தவணைகள் திட்டம் வருவதற்கு முன்பு வண்டியோ பொருளையோ வாங்கவேண்டும் என்றால் ஒன்று மக்களிடமோ அல்லது வங்கியிலோ கடன் வாங்க வேண்டும் அல்லது சம்பாதிக்கும் பணத்தை சேமித்து முழுத்தொகையையும் செலுத்திய பிறகே நாம் அந்த பொருளை வாங்க முடியும். ஆனால் ஒருமுறை பொருளை வாங்கிவிட்டால், தவணைகள் கிடையாது பதட்டம் கிடையாது அவமானம் கிடையாது.  எனவே அசைகளுக்கும் தேவைகளுக்கும் பணம் சம்பாதித்தால் போதும்.

அப்போது வீட்டில் பொருட்கள் குறைவாக இருந்தன, மக்கள் நிம்மதியாக இருந்தனர். இப்பொது வீட்டில் அளவுக்கு அதிகமான பொருட்கள் இருந்தாலும் மக்கள் பதட்டமாக,  நிம்மதியற்று உள்ளனர். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் சொன்னது போல் தவணை மற்றும் வங்கிக்கடன் கட்டுவோர் நெஞ்சமும் இன்று மிகவும் கலங்கியுள்ளது.

தியானம் செய்யுங்கள், கலக்கம் குறையுங்கள், நிம்மதி அடையுங்கள்

 

நேசத்துடன்
நிர்தோஷ்